ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்
வி. சுந்தரம்
“வெள்ளி நாக்கு படைத்த பேச்சாளர்’ (Silver tongued orator) என பிரசித்தி பெற்ற ரைட் ஆனரபிள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி பார்க்காத உயர்ந்த பதவியில்லை – சிறந்த ஆசிரியர், சிறந்த “பார்லிமெண்டேரியன்’, சிறந்த ராஜதந்திரி, சிறந்த தூதுவர்..
1869 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள வலங்கைமான் கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சங்கரநாராயண சாஸ்திரியின் மூத்த குமாரரான இவர் குடும்பத்தின் வறுமையை சிறு வயதிலேயே கண்டார். சட்டையை வெளுக்க சவுக்காரம் கூட வாங்க முடியாத வறுமை, இலவசமாகக் கிடைத்த மாங்காய்களை ஊறுகாய்போட தேவையான உப்பைக்கூட வாங்க முடியாத ஏழ்மை.
கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு பின்னர் கல்லூரியில் படிக்கும்போது இரவில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் பாடங்களைப் படிக்கும்படி செய்த பணமின்மை! இப்பேர்ப்பட்ட குடும்ப நிலையிலிருந்து ஒரு பெரிய பேச்சுவன்மை நிறைந்த உலகம் போற்றும் ராஜதந்திரியாக மலர்ந்தது ஒரு சுவையான கதை.
பி.ஏ. தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்று, சட்டக் கல்வி பயில பணமின்மையால் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பிறகு பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின் சென்னை ஹிந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார்.
ஆங்கிலம், சமஸ்கிருதம் இவைகளைப் போதிப்பதில் சிறந்த ஆசிரியராகப் புகழ்பெற்றதுடன் மற்ற இரு தொண்டுகளிலும் புகழ் பெற்றார். ஒன்று ஆசிரியர்களின் நன்மைக்காக முதன்முறையாக ஒரு சங்கம் நிறுவியது (Madras Teacher’s Guild) மற்றொரு தொண்டு – இன்று பல கிளைகளுடன் கொழிக்கும் திருவல்லிக்கேணி அர்பன் கோவாப்பரேடிவ் சொûஸட்டி (Triplicane urban Co-operative Society)
கல்விப் பணியில் ஈடுபட்ட சாஸ்திரியாருக்கு தேசப்பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. தேசத் தொண்டில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சியளிக்க தேச பக்தர் கோபாலகிருஷ்ண கோகலே இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society) என்ற ஒரு ஸ்தாபனத்தை நிறுவியிருந்தார். கோகலேயின் நோக்கத்தால் கவரப்பட்ட சாஸ்திரியார், தன் நல்ல சம்பளத்தையும் பெரிய குடும்ப நிர்வாகப் பொறுப்பையும் விட்டுவிட்டு, நாட்டுப்பணியில் கோகலே அளித்த உதவித் தொகையை ஏற்றுக்கொண்டது மிக வியப்புக்குரிய செய்கையாகும்.
இச்சங்கத்தில்தான் பயிற்சிக்கு வந்த காந்திஜியை முதன்முதலில் சந்தித்தார். சாஸ்திரியின் ஆங்கில அறிவு காந்திஜியைக் கவர்ந்தது. பிற்காலத்தில் தான் தொடங்கிய “யங் இந்தியா’ என்ற பத்திரிகையின் முதல் பிரதியை சாஸ்திரியாரின் அபிப்ராயத்தை அறிய அனுப்பினார். அதில் 17 நுண்ணிய இலக்கணத் தவறுகளைச் சுட்டிக்காட்டினார். காந்திஜிக்கு சாஸ்திரியாரிடம் இருந்த மதிப்பு அதிகமாயிற்று.
மற்றொரு சமயம் தான் தொடங்க இருந்த சட்ட மறுப்பு போராட்டத்தைப் பற்றிக் கூறி சாஸ்திரியாரின் கருத்தைக் கேட்டார். இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த சாஸ்திரியார், நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் சட்டத்தை மீறிப் போராடுவது எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை எவ்வளவு தீர்க்கதரிசனமுள்ளது என்பதை இப்பொழுது காண்கிறோமல்லவா!
சாஸ்திரியார் தன் சொற்பொழிவாற்றும் திறமையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார். உலக அரங்கில் இந்தியாவுக்கு சுய ஆட்சி அளிக்க வேண்டுமென்று முதன்முதலில் பேசியவர் அவரே.
உலகில் எங்கெங்கெல்லாம் தீமைகள் நடந்தனவோ அவைகளுக்குப் பொறுப்பான நாடுகளை சாடினார்.
பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளுக்கு பிரயாணம் செய்து அங்கு லட்சக்கணக்கில் வாழும் இந்தியர்களுக்கு சமஉரிமை கிடைக்குமாறு செய்தார். இந்தியாவின் பெருமைகளை உலகம் அறியுமாறு செய்த முதல் இந்தியர் இவரே.
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிடித்த முன்னாள் பிரதமர் ஸ்மட்ஸ் அங்கு லட்சக்கணக்காக வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரிப் படிப்புக்கு எவ்வித வசதியும் செய்து தரவில்லை. சாஸ்திரியார் அங்குள்ள நகரங்களுக்குச் சென்று தன்னுடைய சொற்பொழிவுத் திறமையால் பல ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு கல்லூரியை நிறுவினார். அக்கல்லூரி டர்பன் நகரில் “சாஸ்திரி காலேஜ்’ என்ற பெயரில் சிறந்த பணி செய்து வருகிறது.
பிரிட்டிஷ் அரசு அவர் பணியைப் பாராட்டி “ரைட் ஆனரபிள்’ என்று அழைக்கப்படும் மன்னரின் “பிரிவிகவுன்சில்’ என்ற ஆலோசனை சபையின் அங்கத்தினராக்கியது.
மேலும் அவருடைய இனிய குரலில் அழகான ஆங்கிலத்தில் மயங்கிய பிரிட்டிஷ் மக்கள் “வெள்ளி நாக்கு படைத்த சொற்பொழிவாளர்’ என்று அழைத்தனர். சாஸ்திரியாரின் சொற்பொழிவு தங்குதடையற்ற பிரவாகமாகவும், பொதுவாகவும், தெளிவாகவும், வெள்ளி மணிகளின் ஓசைபோலவும் இனிய குரலில் அமைந்திருக்கும்.
அவர் பேச்சை முதன்முறையாக ஜெனிவாவில் கேட்ட பால்ப்ளோர் பிரபு (Lord Balflour) “எங்கள் இங்கிலீஷ் பாஷை மேன்மை எவ்வளவு உயரம் செல்லும் என்பதைப் புரிந்து கொண்டேன்’ என்று கூறுகிறார்.
ஒரு தடவை சாஸ்திரியாரின் சொற்பொழிவைக் கேட்க அழைக்கப்பட்டார் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மெக்டொனால்ட். ஐந்து நிமிஷமே இருக்க முடியும் என்று சொன்ன அவர் சாஸ்திரியாரின் பேச்சு முடியும் வரை இருந்தார் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும்.
சாஸ்திரியார் கடைசியாக வகித்தது அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியாகும். அங்கு அப்பதவிக்குரிய சம்பளத்தைப் பெறாமல் இந்திய ஊழியர் சங்கத்தில் சேரும்போது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கிணங்க ரூ. 500 மட்டுமே கௌரவப்படியாக பெற்றுக்கொண்டார். அந்தத் தொகையிலும் பாதியை ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காகவும் விடுதிச் செலவுக்காகவும் தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு கொடுத்து விடுவார்.
கல்வி கற்பிப்பதில் விருப்பம் கொண்ட அவர் தன் தள்ளாத வயதில் ஆங்கில மொழிநடையைக் கற்பிப்பார். அந்த வகுப்புகளுக்கு முதல் வரிசையில் இடம் பிடிக்க மாணவர்களாகிய எங்களுடன் ஆசிரியர்களும் ஓடி வருவது வேடிக்கையாக இருக்கும்.
சாஸ்திரியாரின் கடைசித் தொண்டு மைலாப்பூரில் அவர் நிகழ்த்திய பிரசித்தி பெற்ற ராமாயண சொற்பொழிவுகளேயாகும். அவைகளும் அவருடைய பேச்சுகளும் எழுத்துகளும் அவர் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்களாகும்.
லண்டன் மாநகரில் உள்ள “கில்ட் ஹால்’ என்ற பிரசங்க மண்டபத்தில் நாடுகளின் தலைவர்கள் மட்டுமே பேசலாம். அங்கு பேசியவர்களின் பட்டியலில் சாஸ்திரியாரின் பெயர் முதலிடம் வகிக்கிறது. அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அவருடைய பெரிய உருவப்படத்தின் கீழ் காணப்படும் வாக்கியம் “ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்’.
(சாஸ்திரியாருக்கு நினைவாலயம் பல இடங்களில் இருப்பினும் அவர் பிறந்த வலங்கைமானில் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கும் விஷயமாகும். மக்களின் விருப்பம் என்று நிறைவேறுமோ?)