விடுதலைப்புலிகள் மூத்த உறுப்பினர் பலி
![]() |
![]() |
விடுதலைப்புலிகள் |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் சவுக்கடி பகுதியில் இன்று நண்பகல் இலங்கை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் விடுதலைப் புலிகளின் மாவட்ட தலைவரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனர்.
சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ள குறிப்பிட்ட நபரின் மறைவிடம், விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் அவ்வேளை கைக்குண்டு தாக்குதல் நடத்தி விட்டு அவர் தப்பியோட முயன்றபோது அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொல்லப்பட்டவரிடம் இருந்து சிறிய ரக கைத் துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஆகியன மீட்கப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனர்.
இதேவேளை வடக்கே மன்னார் மாவட்டத்தில் பரப்பகண்டானுக்கு வடக்கே ஒரு சதுர கிலோமீற்றர் பிரதேசம் நேற்றிரவு முதல் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதல்களின் போது 19 விடுதலைப் புலிகள் பலியாகியிருக்கலாம் எனக் கூறும் இராணுவம், தமது தரப்பில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதோடு, மேலும் 5 சிப்பாய்கள் காயமடைந்துளளதாகவும் கூறியுள்ளது.
இருப்பினும் விடுதலைப் புலிகள் தரப்பலிருந்து இது தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.