பிகாரில் 9 சிறுவர்களை கொன்றதாக இளைஞர் கைது
பாட்னா, ஜன. 9: உ.பி.யில் நிதாரி கிராமத்தில் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில் பிகாரில் போலீஸôரிடம் பிடிபட்ட லேடன் (25) என்ற இளைஞர் 9 சிறுவர்களை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
நட்புடன் பழகி விருந்துக்கு அழைத்து பின்னர் அவர்களை தீர்த்துக்கட்டுவது லேடனின் யுக்தியாக இருந்துள்ளது.
பிகார் தலைநகர் பாட்னாவில் காந்தி மைதானம் காவல் நிலையப் பகுதியில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக சுபோதன்குமார் என்கிற லேடனை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். விசாரனையில் 1995 முதல் 9 பேரை கொலை செய்ததாக லேடன் ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலை நடந்த விதம் குறித்து காந்தி மைதான போலீஸôர் கூறியதாவது:
இளம் வயதினரை தேர்வுசெய்து அவர்களுடன் முதலில் நட்பை வளர்ததுக்கொள்வதும், பின்னர் கேளிக்கை விருந்துக்கு அழைப்பதும் லேடனின் வழக்கம்.
விருந்துக்குப் பிறகு அந்த நபர் மறைவிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பிணையத் தொகை கேட்டு மிரட்டப்படுவார். பிணையத் தொகை கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி போலீஸôரிடம் சிக்கும் வாய்ப்பை தவிர்க்க அந்த நபர் கொல்லப்படுவார்.
சமீபத்தில் கடந்த செப்டம்பரில் பாட்னாவின் போஸ்டல் பார்க் பகுதியில் பிரவேஷ்குமார் (15) என்ற சிறுவன் லேடனால் கடத்தப்பட்டான். பிரவேஷின் பெற்றோர் பணம் தர மறுக்கவே அச்சிறுவன் கொல்லப்பட்டதாக லேடன் ஒப்புக்கொண்டான். இதையடுத்து அழுகிய நிலையில் பிரவேஷின் உடல் கைப்பற்றப்பட்டு, அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
பாட்னா, நாளந்தா, சரன் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட 10 குற்றச்செயல்களில் லேடன் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவனது கூட்டாளிகள் 40 பேரில் 10 பேர் தற்போது சிறையில் உள்ளனர் என்று போலீஸôர் தெரிவித்தனர்.