மாம்பழக்கூடையும் அரசியல் பீடையும்!
க.ப. அறவாணன்
இப்போது மாம்பழக் காலம்.
கூடை நிறைய மாம்பழங்கள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் நிறைந்த சுவை தருபவை. மாம்பழ வியாபாரி, கூடையிலுள்ள மாம்பழம் ஒவ்வொன்றையும் எடுத்துத் துடைத்து அக்கூடையிலேயே வைக்கிறார்.
நடுவே, ஒரு மாம்பழம் சிறிதாக அழுகத் தொடங்கி இருக்கிறது. அழுகல் வாடையும், மூக்கைத் தொடத் தொடங்கி விட்டது. நன்கு துடைத்துக் கூடையின் நடுவேயே வைத்து மேலும், கீழுமாக ஏனைய நல்ல மாம்பழங்களை அடுக்கிக் கூடையோடு அப்படியே விற்றுவிடலாம் அல்லது அழுகத் தொடங்கிய மாம்பழத்தை அகற்றி வீசி வெளியே எறிந்துவிட்டு, புதிய நல்ல மாம்பழமொன்றைக் கூடைக்குள் வைத்து விற்று விடலாம்.
நல்ல வியாபாரி இரண்டாவதையே செய்கிறார். காரணம், அழுகிய ஒரு மாம்பழம், ஓரிரு நாளில், தானும் முழுமையாக அழுகிக் கெடுவதுடன் ஏனைய மாம்பழங்களையும் அழுக வைத்துவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் அழுகிய மாம்பழம் என்று அறிந்தவுடனேயே அதனை மறைக்காமல் எடுத்து எறிந்துவிடுகிறார்.
இப்படித்தான் நாமும் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யத் தவறியதால் கூடை மாம்பழங்களே அழுகத் தொடங்கிவிட்டன. நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மூன்று தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்பனவற்றுள் நாடாளுமன்ற அரசியல் அழுகத் தொடங்கிவிட்டது. அதனை மறைத்தோம். பொருள்படுத்தவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்பினோம். ஆனால் நடந்தது என்ன?
நாடாளுமன்ற அரசியலைத் தொடர்ந்து நிர்வாகமும், அழுகத் தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து நீதித்துறையும் அழுகத் தொடங்கிவிட்டது. இன்று இந்தியாவின் மெய்யான நிலை இதுதான்.
நம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குற்றவாளிகள் (கிரிமினல்கள்) என்பது வேதனைக்குரிய விஷயம்.
உ.பி., சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நாற்பது சதவீதம் பேர் குற்றவாளிகள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எந்த இடம் தூய்மையாக இருக்க வேண்டுமோ, அந்த இடம் தூய்மைக்கேடாக இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு மாம்பழங்கள் அழுகிவிட்டால், ஏனைய மாம்பழங்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே வேண்டாம்.
நம் நாட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நிர்வாக முறை பற்றி நிறைய வெளிச்சத்திற்கு வராத செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. அரசு நிர்வாகப் பணிக்கு நியமிக்கப்பட்ட பின்பு ஓய்வுபெறும் வயதுவரை தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது – இடம் மாற்றம் தவிர! என்று அறிந்துகொண்ட நம் அதிகாரிகள் பதவிக்காலத்தில் தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலும், சாதிச்சங்கத்தை அமைப்பதிலும், பதவியில் உள்ள கட்சியினருடன் ஒட்டிக் கொள்வதிலும் இன்ன பிறவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி நாடு முழுக்க வழக்குகள் உள்ளன.
கடந்த அறுபது ஆண்டுகளில் இந்திய நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்பதை விவாதிக்க வேண்டியதே இல்லை. அது வெளிப்படையானது. ஏழை ஒருவன் விண்ணப்பம் போட்டால் அந்த மனு எத்தனை மேசைக்கு ஆமைபோல் ஊர்ந்துசென்று அடைய வேண்டிய இடத்தை அடைய முடியாமல் தவிக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஆனால் இதை வெளிப்படையாக தெரிவிக்காதவர்களே மிகுதி என்பதுதான் உண்மை. வெளியே சொல்லிப் புலம்ப முடியாத அளவிற்கு நம் அதிகாரவர்க்க முறையும், சிவப்புநாடா முறையும் கடந்த அறுபது ஆண்டுகளில் கோப்புக் கோபுரமாகத் தடித்து விட்டன. அரசு நிர்வாகம் அனைத்தும் ஒருவழிப்பாதை என்பதால் நியாயத்தை ஒருவர் பெறவே முடியாது.
வெளிப்படை சட்டம் வந்துவிட்டாலும், எல்லாராலும் வழக்கு மன்றத்திற்குச் செல்ல முடியுமா? படிக்காதவர்கள் மிகுந்த நாட்டில், பணமும் செல்வாக்கும் இல்லாத ஏழை நாட்டில்!
இங்கேதான் நம் நீதிமன்றங்கள் வருகின்றன. வழக்கறிஞர் என்பவர் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் பணம் பிடுங்குபவராகச் செயல்படுகிறார். ரிட் மனு, ஜாமீன், தள்ளிவைப்பு (வாய்தா), மேல்முறையீடு என்பனவற்றின் பெயரால் நீதி நிலைநாட்டப் பெறுகிறதா, நீட்டப்படுகிறதா என்பது இந்திய நீதித்துறை சட்டதிட்டத்தை வகுத்த அரசியல் சாசன அமைப்பாளருக்கே வெளிச்சம். ஏறத்தாழ நானூறு கோடி வழக்குகள் நிலுவையில் ஆண்டுக்கணக்கில் தூங்குகின்றனவாம்.
அரசியல்வாதிகள், துணிந்து தவறு செய்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கிறார்கள். அவர்களைப் பற்றி முறையீடு செய்து நீதி பெற வேண்டிய ஒரே இடம் நீதித்துறை. அந் நீதித்துறையும் நெறி மாறிவிட்டால் யாரிடம் சென்று முறையிடுவது என்று கதறுகிறோம். சிலர், ஊழல் சகஜம்தான், லஞ்சம் சகஜம்தான், அனுசரித்துப் போக வேண்டியதுதான் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். இந்தச் சிலரும், பலராகி விட்டார்கள்.
மாணவர்கள் சேர்க்கை, அரசுப் பணிகளில் நியமனம், இடமாற்றம், உரிமம், பர்மிட் போன்ற அனைத்திற்கும் இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் என்று பட்டியல் போடாததுதான் பாக்கி. ஆனால், இப்படிப் பட்டியல் நீர்மேல் எழுத்தாகவும், வான்மேல் கல்வெட்டாகவும் இடைத்தரகர்கள் நாவில் கையெழுத்து இடாத தாளில் நாளும் நடமாடுகிறது. இந்நாட்டை இனி யார் காப்பாற்றுவார்? ஒவ்வொன்றுக்கும் காசு தர முடியாத ஏழை, தம் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப் போகிறார்? தன் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கப் போகிறார்? அவரிடம் ஆயிரக்கணக்கிலோ, லட்சக்கணக்கிலோ கொடுக்கப் பணமில்லையே. அவர் அன்றாடங்காய்ச்சி.
இந்த நிலைமை இப்படியே தொடர வேண்டியதுதானா? இதற்கு முடிவே இல்லையா?
(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)