வேலைவாய்ப்பு: துளிர் விடும் நம்பிக்கை!
எஸ். கோபாலகிருஷ்ணன்
இந்தியா அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சி ஏழை, எளிய மக்களைச் சென்றடையவில்லை. ஏற்கெனவே பண வசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும், படித்த, நகர்ப்புற இளைஞர்கள் நல்ல வேலைகளைத் தேடிக் கொள்வதற்குமே இந்த வளர்ச்சி உதவுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை என்கிற நியாயமான கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ச.ந.ந.ஞ. எனப்படும் “”தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு” வேலைவாய்ப்புகள் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள தனது 61வது சுற்று ஆய்வு முடிவுகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.
1993ம் ஆண்டுமுதல் 1999ம் ஆண்டுவரை, இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 0.98 சதவிகிதமாக அதிகரித்து வந்த நிலை இப்போது மறைந்துவிட்டது. மாறாக, 1999 – 2000 முதல் 2004 – 05 வரையிலான காலத்தில், வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் 2.89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை.
இங்கு நாம் சுமார் 24 ஆண்டுகள் பின்நோக்கிப் பார்த்தோமேயானால், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கத்தையும் அதற்கான காரணங்களையும் அறியலாம்.
முதலாவதாக, 1983 முதல் 1993 – 94 வரையிலான காலகட்டத்தை எடுத்துக் கொள்வோம். அப்போது, என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வின்படி வேலைவாய்ப்பு ஆண்டுதோறும் 2 சதவீத வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. பொதுமக்களின் கருத்துப்படியும், அந்த காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியதாகச் சொல்ல முடியாது. பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே இலாகா உள்ளிட்ட பல அரசுசார்ந்த துறைகள் கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன. அதுமட்டுமல்லாமல், சிறுதொழில்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து ஊக்குவிப்பு கிடைத்து வந்தது. வங்கிகளும் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்குவதில் முனைப்பு காட்டின. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 40 சதவிகிதம் சிறுதொழில்கள் மூலம் கிடைத்தன. அதேபோல், விவசாயமும் குறிப்பாக, சிறு விவசாயிகள், முன் உரிமை அடிப்படையில் ஓர் அளவு கடனுதவி பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே, தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதமாக அப்போது இருந்தது என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.
இரண்டாவதாக, 1993 – 94 முதல் 1999 – 2000 வரையிலான காலத்தில் என்ன நேர்ந்தது? வேலைவாய்ப்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக, அதாவது 0.98 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்தது. 1992-ம் ஆண்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. அப்போதுதான், பொருளாதாரத் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற சித்தாந்தங்கள் அறிமுகமாயின. சிறு தொழில்களுக்கும், விவசாயத்துக்கும் அரசு அளித்து வந்த ஊக்குவிப்பும் உதவிகளும் சுணக்கம் அடைந்தன. எங்கும், எதிலும் கணினிமயம் என்ற நிலை ஏற்படத் தொடங்கியது. ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கம் தொய்வடைந்தது. இதை உறுதி செய்வதாகவே தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை தெரிவித்தபடி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதத்திலிருந்து வெறும் 0.98 சதவிகிதமாகச் சரிந்தது.
மூன்றாவதாக, அண்மையில் வெளியான அறிக்கையின்படி, 1999 – 2000 முதல் 2004 – 05 காலத்தில், முந்தைய சரிவு சரிசெய்யப்பட்டு, 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, உண்மையிலேயே ஒரு மைல் கல் வளர்ச்சி என்பது தெளிவு. இந்த ஆறு ஆண்டு காலத்தில் மக்கள்தொகையில், வேலைக்குப் போகக்கூடிய வயதுடையவர்களின் எண்ணிக்கை, முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. அப்படி அதிகரித்த பின்னரும், வேலைவாய்ப்பு வளர்ச்சி முந்தைய 0.98 சதவிகிதத்திலிருந்து 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது ஓரளவு ஆறுதல் தரக்கூடிய ஒன்று என்றாலும், கவலை அளிக்கும் அம்சங்களும் உள்ளன. துறைவாரியாகப் பார்க்கும்போது, விவசாயம் மற்றும் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, 59.8 சதவிகிதத்திலிருந்து 58.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பதே அது.
அதேநேரம், எண்ணிக்கை அடிப்படையில் 3 கோடி பேருக்கு விவசாயத்துறையில் புதிய வேலைகள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ள வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையில் சரி பாதி எனலாம்.
நகர்ப்புறம், கிராமப்புறம் என்னும் வித்தியாசம் இல்லாமல், பரவலான அடிப்படையில், சுயவேலை வாய்ப்பைத் தேடிக் கொண்டவர்களின் எண்ணிக்கை முன்எப்போதையும்விட கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படி சுயவேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டுள்ளவர்கள் 26 கோடி பேர்.
அதேநேரம், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில், வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், போதிய ஊதியம் மற்றும் குறைந்தபட்ச வசதிகள் கிடைக்கவில்லை என்பது வெளிப்படை.
வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் பசிக்கொடுமையைக் குறைத்திட இந்தியா செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி அமைப்பு தயாரிக்கும் “உலகளாவிய பசிக்கொடுமை குறியீடு’ (எகஞஆஅக ஏமசஎஉத ஐசஈஉல) என்னும் தரப்பட்டியல் அடங்கிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சர்வதேச அமைப்பு, சில தினங்களுக்குமுன், ஒரு தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது, பசிக்கொடுமையால் வாடும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்திட முயலும் 118 நாடுகளைக் கொண்ட பட்டியல் அது. அதில், இந்தியா 94வது இடத்தில்தான் உள்ளது என்பது வேதனை தரும் விஷயம். மிகவும் பின்தங்கிய நாடாகிய எத்தியோப்பியாகூட நம்மைவிட முன்னேறிய நிலையில், 93வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 88வது இடத்திலும் சீனா 47வது இடத்திலும் உள்ளன. நாம் தினமும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
நமது வளர்ச்சி வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக மாறுவது எப்போது? இதற்கு விடையளிக்கும்வகையில், மிகவும் மதிக்கப்படும் பொருளாதார நிபுணரும், பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்ட குழுவின் தலைவருமான டாக்டர் சி. ரங்கராஜன் அண்மையில் எழுதியுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
1999 – 2000 முதல் 2004 – 05 காலகட்டத்தில் என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வில் காணப்படும், அதே சாதகமான அம்சங்கள் நீடிக்கும்பட்சத்தில், ஜி.டி.பி. 9.1 சதவிகிதமாகத் தொடர்ந்து இருக்குமேயானால், விவசாயத்துறை வளர்ச்சி சற்று குறைந்தால்கூட, 2009ம் ஆண்டு முடிவிற்குள், வேலைவாய்ப்பு வளர்ச்சி நமது முழு தேவையை பூர்த்தி செய்துவிடும் என்கிறார்.
ஒருவேளை, இது நிறைவேறாதபட்சத்தில் டாக்டர் ரங்கராஜன் முன்வைக்கும் இன்னொரு சாத்தியக்கூறு வருமாறு:
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 8.5 சதவிகிதமாகவே இருந்து, விவசாய வளர்ச்சி வீதம் 2 சதவிகிதமாக மட்டுமே இருக்குமானால், வேலைவாய்ப்பு வளர்ச்சி நாட்டின் முழுத்தேவையையும் பூர்த்தி செய்வதற்கு 2017ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார்.
ஆக ஊரக மேம்பாட்டுக்கு திறவுகோல் விவசாய வளர்ச்சியே. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை ஆவணத்தில் (Approach Paper) விவசாய மேம்பாட்டுக்கும், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துக்கும் கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. காலம் தாழ்ந்தேனும், இந்த அவசியத்தை அரசு உணர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏழ்மை மற்றும் பசியை ஒழிப்பதற்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மட்டும் போதாது. அந்த வேலைகளுக்கான – அதிலும் குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் உருவாக்கப்படும் வேலைகளுக்கான – ஊதியம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.