Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Self Actulaization’ Category

Literacy Development in India

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

எழுதப் படிக்கத் தெரிவதே எழுத்தறிவா?

ஆர். இராஜன்

சமீபத்தில் மாவட்ட அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்கல்வி / எழுத்தறிவு மையங்களை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலான மையங்களில் பெண்கள், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களே பயனாளிகளாக இருந்தனர். முதல் மையத்தில் கற்போரிடம் கலந்துரையாடினேன்.

ஏன் எழுத்தறிவு? எழுத்தறிவு பெறுவதால் என்ன பயன்?

இதுதான் கேள்வி. படிப்பதால் ஊர் பேர் படித்து பஸ்ஸில் ஏறலாம். அருகில் உள்ள ஊருக்குச் சென்று வரலாம் என்றனர் ஒரு சிலர். மற்றொரு பிரிவினர் – கடிதம் எழுதலாம் அல்லது நமக்கு வரும் கடிதங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்றனர். அடுத்த சிலர் நம்மைச் சுற்றி நடைபெறும் அன்றாடச் செய்திகள் / நாட்டு நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம் என்றனர். ஆனால் ஒரு பெண்மணி, தற்போது எங்கள் பகுதி மக்களுக்குக் கடிதம் எழுதும் வாய்ப்போ, கடிதம் வரும் வாய்ப்போ பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம். ஏன் எனில், இது தொலைபேசி யுகம். எங்கு பார்த்தாலும் “செல்’ அல்லது பொதுத் தொலைபேசி இல்லாத கிராமமே இல்லை. இதன் மூலமே அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறோம் என்றார்.

அடுத்து பேச வந்த பெண்மணி செய்திகள் / நாட்டு நிலவரம் பற்றி கூறினார். ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்கு முன்னர்தான் இது ஒரு பிரச்சினை எனலாம். அதனால் தற்போது எங்கு பார்த்தாலும் கேபிள் டிவிக்கள், பல்வேறு சேனல்கள். இது தவிர செய்திகளுக்கே எனத் தனிச் சேனல்கள். அப்படியிருக்க எழுதப் படிக்கத் தெரிந்தால்தான் இதை அறிய முடியும் என்று எப்படி கூற முடியும் என்று கேட்டார்.

நம்மில் பெரும்பாலோருக்கு இதே மாதிரி எண்ணங்களே. “எழுத்தறிவு’ என்பதை வெறுமனே எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வது என்ற குறுகிய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளக் கூடாது. “செயல்முறை எழுத்தறிவு’ என்ற பரந்த அர்த்தத்தில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். “தேசிய எழுத்தறிவு இயக்கம்’ “எழுத்தறிவை’ வரையறுக்கும்போது செயல்முறை எழுத்தறிவு ( Functional Literacy) என்று வலியுறுத்துகிறது.

* “செயல்முறை எழுத்தறிவு’ என்பது~

எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதில் சுயசார்பு அடைதல்.

தங்களின் ஏழ்மை நிலைக்கான காரணங்களைப் புரிந்து கொண்டு சிறுசிறு குழுக்களாக ஒன்று சேர்ந்து அமைப்பு ரீதியாக வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிடுவது முதல் செயல்பாட்டில் ஈடுபடுதல் வரை முழுமையாகப் பங்கேற்றுத் தங்கள் நிலையை மேம்படுத்த முயலுவது.

பொருளாதார அந்தஸ்து (அல்லது) தமது வருவாயைப் பெருக்கும் வகையில் ஏற்கெனவே செய்து வரும் தொழிலிலோ, புதுத் தொழிலிலோ ஈடுபட்டு தம் வருமானத்தைப் பெருக்குதல்.

தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆண் / பெண் சமத்துவம் போன்ற தேசிய நலன் சார்ந்த பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல்.

எழுதப் படிக்கத் தெரியாதவர்களைவிட எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்குத் தன்னம்பிக்கையும் சொந்தக் காலில் நிற்கும் திறனும் அதிகம். எழுதப் படிக்கத் தெரிவதால் தனக்குக் கிடைக்கும் தகவல்களைப் பகுத்துப் பார்த்துச் சொந்தமாக முடிவு எடுக்கும் ஆற்றல் ஏற்படுகிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாகத் தன்னைப் பற்றிய சுயமதிப்பும் ஆற்றல் உணர்வும் அதிகரிக்கிறது.

தற்போதைய வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுக்குத் தேவையான திறமைகளான தன்னைத் தாமே அறிந்து கொள்ளுதல், பிரச்சினைக்குத் தீர்வு காணல், முடிவு எடுக்கும் திறமை, நேர மேலாண்மை, தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளுதல், சகிப்புத் தன்மை, தோல்விகளையும் பிறர் விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளுதல், குழுவாகச் சேர்ந்து பணியாற்றுதல், சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளுதல் போன்ற பண்புகளை உள்ளடக்கியதாக எழுத்தறிவு மற்றும் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது. அரசு கிராமப்புற மக்களுக்காக, பின்தங்கிய மக்களுக்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்ற மக்களுக்காக, பெண்களுக்காக, எத்தனைத் திட்டங்கள் போட்டாலும் அவை முழு அளவில் அவர்களைச் சென்றடைவதில்லை. அவர்களுக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது தெரியாமலேயே இன்றும் அந்தக் குறிப்பிட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களிடையே உள்ள எழுத்தறிவின்மைதான்.

1965 செப்டம்பர் 8ஆம் நாள் டெஹரான் நகரில் உலக அளவிலான கல்வி அமைச்சகர்கள் மாநாடு கூட்டப்பட்டது. எழுத்தறிவின்மையால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் நாளை உலக எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானமாகும்.

எல்லோருக்கும் கல்வி தந்து இந்த நாட்டினை உயர்த்திட வேண்டும் என்றார் மகாகவி பாரதியார். கல்வி ஒன்றினால்தான் சமுதாயத்தில் நிலையான மாற்றத்தினைக் கொண்டு வர முடியும். முறையான கல்வியின் மூலம் ஏற்படுகின்ற மாற்றங்களே நிலையானவை என சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். அதனைக் கருத்தில்கொண்டே “எல்லோருக்கும் கல்வி’ என்ற நோக்கில் தேசிய / மாநில அளவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுதந்திரம் பெற்ற நாள் முதல் நம் நாட்டில் கல்விக்காக குறிப்பாக அடிப்படை எழுத்தறிவு அளிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திட்டங்களில் மிக முக்கியமானவை.

  • 1952 – சமுதாயக் கல்வித் திட்டம்;
  • 1967 – உழவர் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம்;
  • 1975 – பள்ளிசாராக் கல்வித் திட்டம்;
  • 1978 – தேசிய வயதுவந்தோர் கல்வித் திட்டம்;
  • 1985 – மக்கள் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம்;
  • 1988 – தேசிய எழுத்தறிவு இயக்கம்;
  • 1990 – முழு எழுத்தறிவு இயக்கம் (அல்லது) அறிவொளி இயக்கம்;
  • 1992 – தொடர்கல்வித் திட்டம்;
  • 1998 முதல் – வளர்கல்வித் திட்டம்.

இந்திய அளவில் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டோர் நிலை பெருகிக் கொண்டே வந்தாலும் பெண்களில் பெரும்பகுதியினர் இன்னமும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர்.

தேசிய அளவில் நூற்றுக்கு 53.66% பெண்களுக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும் என்றாலும் தமிழகத்தில் நூற்றுக்கு 64.43% பெண்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும் தமிழகத்தில் கிராமப்புறப் பெண்களில் நூற்றுக்கு 55.28% மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும். பெரும்பாலான மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பெண்களின் மத்தியில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. மனித உரிமைகளில் முதன்மையானது கல்வி பெறும் உரிமை. கல்வி ஒன்றினால்தான் மனித உரிமையைக் காக்க முடியும்.

இதனைக் கருத்தில்கொண்டு பெண்களிடையே எழுத்தறிவுச் சதவீதத்தினை உயர்த்துவதற்கு மத்திய / மாநில அரசுகள் இணைந்து மகளிருக்கு என சிறப்பு மகளிர் எழுத்தறிவுத் திட்டத்தினைத் தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 2007க்குள் பெண்களின் எழுத்தறிவு சதவீதத்தை 75க்கு மேல் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தீவிர முயற்சிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. “அறிவு’ என்பது ஓர் ஆயுதம் என்கிறார் திருவள்ளுவர். “கல்லாதவன் வாழும் வீடு வெளிச்சமில்லா இருண்ட வீடு’ என்று கூறினார் பாரதிதாசன். அறியாமை இருளை அகற்றினால்தான் இந்தியா உண்மையான சுதந்திர நாடாக மாற முடியும்.

Posted in backward, Economic, Education, Functional Literacy, Learn, Literacy, Oppressed, Self Actualization, Self Actulaization, Self realization, Tamil | 2 Comments »