செய்யூர் அருகே 2000 ஏக்கர் பரப்பில் ரூ.16000 கோடியில் அனல் மின் நிலையம்
காஞ்சிபுரம், நவ. 2: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 2000 ஏக்கர் பரப்பில், 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்துக்கு வரும் 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்படும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
செய்யூரில் அவர் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:
மறைந்த மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் காலத்தில் இத்திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டது. பின்னர் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இத்திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைத்தோம். தற்போதைய மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மீண்டும் இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
செய்யூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய பகுதியில் இதற்காக ஏற்கெனவே 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அனல் மின் நிலையம் அமைக்கப்படும்.
தேசிய அனல் மின் கழகம்
தேசிய அனல் மின் கழகம் இத்திட்டத்தை ரூ.16 ஆயிரம் கோடியில் செயல்படுத்துகிறது. இத்திட்டத்துக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. நாட்டிலேயே முதன் முறையாக மெகா அனல் மின் நிலையம் இம்முறையில் அமைக்கப்படுகிறது.
வரும் 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் இத்திட்டத்துக்கு மத்திய மின்சார அமைச்சர் ஷிண்டே அடிக்கல் நாட்டுகிறார். இரண்டரை ஆண்டுகளில் திட்டம் முடிவடையும்.
இதன் மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் அவர்களுக்கு தேவையான குடியிருப்புகள், அலுவலகங்கள் நெய்வேலியை போன்றே ஏற்படுத்தப்படும். இத்திட்டம் முடிந்தால் செய்யூர் பகுதி மிகுந்த வளர்ச்சி பெறும் என்றார்.