Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘sectors’ Category

Indian Budget 2008 by P Chidhambaram: Finance, Economy, Analysis, Taxes, Exemptions

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

குறையுமா வரிச்சுமை?

எஸ். கோபாலகிருஷ்ணன்

புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில், பலர் மனதில் எழும் கேள்வி, “”வரிச்சுமை குறையுமா?” என்பதே.

மக்களவைக்கு திடீர் தேர்தல் வரக்கூடும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நேர்ந்திருந்தால், இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க ஒரு “தேர்தல் பட்ஜெட்’ ஆக இருந்திருக்கும். சலுகைகளுக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று! குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நிலைமையை மாற்றிவிட்டன. மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னர் மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தகைய சூழலில் தற்போதைய மக்களவைக்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் வர இருக்கும் பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.

ஏற்கெனவே, விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள், பட்ஜெட் சுமை தங்களை மேலும் வாட்டாமல் இருக்க வேண்டுமே என்று அஞ்சுவது இயல்பு.

இதை மனதில்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் சிதம்பரம் தனது பட்ஜெட்டில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

அரசியல் தேவைகள் ஒருபுறம் இருக்க, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் புதிய பட்ஜெட் சற்று மென்மையாக இருக்க வேண்டும். காரணம், தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டுமல்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.டி.பி. விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது. வளர்ச்சி, ஏதோ மின்னல்போல் தோன்றி மறையாமல் ஸ்திரமடைந்து வருகிறது.

மற்றொரு சாதகமான அம்சம், கடந்த சில ஆண்டுகளாக வரி வசூல் படிப்படியாக அதிகரித்து, இப்போது கணிசமாகவே உயர்ந்துள்ளது. துல்லியமாகச் சொல்லுவதானால், 2003 – 04ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 302 லட்சமாக இருந்தது. 2006 – 07ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 320 லட்சமாகப் பெருகியுள்ளது.

வருமான வரியை மட்டும் எடுத்துக்கொண்டோமானால், இதே காலத்தில், வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 235 லட்சத்திலிருந்து, 275 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஆக, தனிநபர் வருமான வரித்தொகையும் சரி, கம்பெனிகளின் வருமானவரித் தொகையும் சரி, சமீபகாலமாக அபரிமிதமாகப் பெருகி வருகிறது. மொத்தத்தில் வருமான வரியாக வசூலிக்கப்படும் தொகை ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து வருகிறது.

இதற்கு பொருளாதார வளர்ச்சியும், நிதி அமைச்சகம் எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒரு காரணம் ஆகும்.

அத்துடன், வரிவிகிதங்கள் நியாயமாகவும், மக்களின் சக்திக்கு ஏற்பவும் இருக்குமானால், வரி ஏய்ப்பு நிச்சயமாகக் குறையும். அதேநேரம், மக்கள் தானாக முன்வந்து வரி செலுத்துகையில், வரிச்சுமை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாமல் போனால், தானாக முன்வந்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அரசு இதனைக் கருத்தில்கொண்டு செயல்படுவது அவசியம்.

கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்ததுபோலவே இந்த ஆண்டும், நிதி அமைச்சர் விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருடன் பட்ஜெட் குறித்து ஆழமாகக் கலந்து ஆலோசிப்பார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் உற்பத்தி வரி உள்ளிட்ட வரிவிகிதங்கள் குறைக்கப்படக் கூடும். ஏற்றுமதி குறைவதால் வேலைவாய்ப்பும் கடுமையாகக் குறைகிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் ரூ. 53 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சரே அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின்படி விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம்.

இதுதவிர, உணவு மற்றும் உரம் சார்ந்த மானியங்கள், எளிய மக்களைப் பாதிக்காதவண்ணம், திருத்தி அமைக்கப்படக்கூடும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இது உலக வங்கியைத் திருப்தி செய்வதற்காக அல்லாமல், உண்மையிலேயே மானியத் தொகை உரியவர்களைச் சென்றடையும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

வருமான வரித் துறையில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவினரும் உள்ளனர். உதாரணமாக, மூத்த குடிமக்கள். ஒரு பக்கம் சராசரி வயது உயருகிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மற்றும் அதிகரிக்கும் மருத்துவச் செலவு. இவர்களுக்குக் கடந்த ஓரிரு ஆண்டுகளில் எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.

இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தற்போது வழங்கப்படும் சொற்ப சலுகைகள் நியாயமான அளவு விரிவுபடுத்தப்பட வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாத ஒருநிலையில் இது உடனடித் தேவை.

அடுத்து, சிறு முதலீட்டாளர்களுக்கும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஊக்குவிப்பு அளிக்கப்படவில்லை. 80இ பிரிவின்படி, ஒரு லட்சம் ரூபாய்வரை சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால், அந்தத் தொகையை வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகை சிறு முதலீட்டாளர்கள் என்ற பெயரில், பங்குச் சந்தையில் பெரும்பாலும் முதலீடு செய்பவர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது.

அஞ்சல் அலுவலக முதலீடுகளுக்கும் 5 ஆண்டுகளுக்குக் குறைவான வங்கி முதலீடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்பதே உண்மை.

5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வங்கி முதலீடுகளுக்கு 80 இ பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை அளித்திருப்பது வங்கிகள் டெபாசிட் திரட்டுவதற்கு உதவுகிறது. ஆனால், சிறு முதலீட்டாளர்களுக்கு உதவக்கூடியதாகத் தெரியவில்லை.

அனைத்துக்கும் மேலாக, சிறு முதலீட்டாளர்கள் முக்கியமாக எதிர்பார்ப்பது தற்போதுள்ள E.E.E. (Exempt, Exempt, Exempt) முறை தொடர வேண்டும் என்பதே. அதாவது முதலீடு செய்யும்போது, வரிவிலக்கு. இதைத்தான் ‘E’ (Exempt) என்ற வார்த்தை குறிக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரிவிலக்கு. இதை இரண்டாவது ‘E’ (Exempt) என்ற சொல் குறிக்கிறது. கடைசியாக, முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போதும் வரிவிலக்கு கிடைக்கிறது. இதனை மூன்றாவது ‘E’ (Exempt) குறிக்கிறது.

உதாரணமாக, பொது வருங்கால வைப்புநிதி (PPF), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC.) இன்சூரன்ஸ் ஆகிய பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் EEE. என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. இது தொடர வேண்டும்.

ஆனால், EET. (Exempt, Exempt, ், Tax) என்ற புதிய முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் சிதம்பரம் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த உத்தேச முறையின் கீழ், மூன்றாவது கட்டத்தில், அதாவது முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டும். இதைத்தான் T(Tax) என்ற சொல் குறிக்கிறது.

இத்திட்டத்தை கேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கேல்கர் குழுவினர் கூறிய காரணங்கள் விசித்திரமானவை. “”பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு இடையே நிலவும் பாகுபாட்டை அகற்றுவது என்பது ஒன்று. இரண்டாவது, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இந்த முறை ஏற்கெனவே அமல் செய்யப்பட்டுள்ளது” என்பதுதான் அது.

நம் நாட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டால் சிறு முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்தப் பரிந்துரையை நிதி அமைச்சர் ஏற்கலாகாது.

ஏட்டளவில் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், வரிச்சுமையாவது குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

————————————————————————————————————————————————————

சீனாவின் சவாலை எதிர்கொள்ள…

புது பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் முன்னர் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த முன்னணி தொழிலதிபர்கள் வழக்கமான வரிச்சலுகைகளுடன் கூடுதலாக ஒரு வரம் கேட்டுள்ளனர். அது, சீனத்திலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 150 சதவீத “இறக்குமதி வரி’ விதிக்க வேண்டும் என்பது.

தசரதனிடம் கைகேயி கேட்ட வரம்போல அல்ல என்றாலும் சீனத்துப் பண்டங்களால் இந்தியத் தொழிலதிபர்களின் தூக்கம் கெட்டு வருவதை இது நன்கு உணர்த்துகிறது. பொம்மை, பேட்டரி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், டெலிவிஷன், செல்போன், காகிதம், அச்சு இயந்திரம், ஆலைகளுக்கான இயந்திரங்கள், உதிரி பாகங்கள் என்று எல்லா துறைகளுக்கும் தேவைப்படும் பொருள்களைத் தயாரித்து அதை மிகக் குறைந்த விலையில் உலகச் சந்தையில் கொண்டுவந்து குவிக்கிறது சீனா.

தனிநபர் வருமான வரிவிகிதத்தை 30%-லிருந்து 25% ஆகக் குறைக்க வேண்டும், வருமான வரி விலக்கு வரம்பை ஒரேயடியாக

5 லட்ச ரூபாய் வரைக்கும் உயர்த்த வேண்டும், கம்பெனிகள் மீதான வரியை இப்போதுள்ள நிலையிலேயே அனுமதித்துவிட்டு, “”சர்-சார்ஜ்” எனப்படும் கூடுதல் தீர்வையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று நமது தொழிலதிபர்கள் கேட்டிருக்கிறார்கள்.

கம்பெனிகள் தாங்களே மேற்கொள்ளும் ஆராய்ச்சி-வளர்ச்சிகளுக்கான செலவுக்குத் தரும் வரிச்சலுகையை, வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியமான கோரிக்கையாகும்.

மக்களவைக்குப் பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தொழிலதிபர்கள் கேட்ட வரங்களில் பெரும்பாலானவற்றை “சிதம்பரசாமி’ அருளக்கூடும். ஆனால் சீனாவின் சவாலை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறார்?

சீனாவில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் அங்கு உற்பத்திக்குச் சாதகமாக அமைந்துவிட முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட சோஷலிச முறை உற்பத்தி, விநியோகம் எல்லாம் டெங் சியோ பெங் காலத்திலிருந்து படிப்படியாக நீங்கி, உலக அளவில் போட்டி போடத்தக்க கட்டமைப்பு அங்கே வளர்ந்து வந்திருக்கிறது. சீனத்தின் “பட்டுத் திரை’க்குப் பின்னால் நடந்தவை என்னவென்று உலகம் இதுவரையில் புரிந்து கொள்ளவே இல்லை.

சீனத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. அங்கும் தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுகிறது. சொந்த வீடு, நகை, வெளிநாட்டு உல்லாசப் பயணம் என்று சீனர்களால் மெல்லமெல்ல வெளியில் வரமுடிகிறது. சீனத்தில் ஒரே சமயத்தில் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தாராளமயம், உலகமயமாக்கலின் சிற்பி என்று இந்தியாவில் நாம் சிலரை அடையாளம் கண்டு பாராட்டி (அல்லது வசைபாடி) வரும் நிலையில், சீனா உண்மையிலேயே விசுவரூபம் எடுத்து நிற்கிறது.

நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் இன்னமும் பெரும் அளவுக்கு லாபகரமாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தில் நல்ல படிப்பும் பயிற்சியும் பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களும், தொழில்திறன் உள்ள தொழிலாளர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த அறிவும்-ஆங்கிலத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் உள்ளவர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி, நமது பொருளாதாரத்தை மேலும் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லாமல், அடுத்தடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களையும், மத்திய பட்ஜெட்டையுமே மையமாக வைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதால், நாம் செக்குமாடு போல ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

சீனாவுக்கு இணையான தொழில்வளத்தை நாமும் அடையத் தடையாக இருப்பது எது என்று ஆராய்ந்து, அதை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் தொடர்ந்து பின்தங்கியே இருப்போம்; சீனா, அமெரிக்காவையே மிஞ்சிவிடும்.

———————————————————————————————————–
சிதம்பர ரகசியம்

விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட வேண்டும், முடிந்தால் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் இந்திய அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் விஷயம். இதை மாநிலங்களுக்காகத் தரப்படும் நிதி கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கச் செலவிடப்பட வேண்டும் என்பது அவர்களது அபிப்பிராயம்.

மக்கள் நிர்வாகம், தேச நிர்வாகம் போன்ற விஷயங்கள் வியாபார ரீதியாகச் செய்யப்படுபவை அல்ல. லாப நஷ்டங்களை மட்டும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட முடியாது. குறிப்பாக, இந்தியா போன்ற விவசாயம் சார்ந்த நாடுகள் வேலைவாய்ப்பை மட்டுமல்லாமல் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேளாண் தொழிலை நம்பி இருக்கும் நிலையில், விவசாய மானியங்களை அகற்றுவது என்பது, இந்தியாவை சோமாலியா ஆக்கும் முயற்சி. அது விபரீதத்தில் முடிந்துவிடும்.

அதேநேரத்தில், அரசின் மானியங்கள் சேர வேண்டிய விவசாயிகளைப் போய்ச் சேர்கிறதா என்பதும், மானியம் பயனுள்ளதாக அமைந்து விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய உர அமைச்சகம் நடப்பு ஆண்டுக்குத் தரப்படும் உர மானியம், அடுத்த நிதியாண்டில் இரட்டிப்பு செய்யப்பட்டு சுமார் 50,000 கோடி ரூபாயாக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. நிதியமைச்சகம் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்.

யூரியா போன்ற உரங்களுக்கான உற்பத்திச் செலவில் பாதிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயிகள் தருகிறார்கள் என்றும், தங்களுக்குத் தரப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உரத் தயாரிப்பாளர்கள் மத்திய உர அமைச்சகத்தின் மூலம் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள். தற்போது, மானியம் விவசாயிகளுக்கு நேரடியாகத் தரப்படாமல் உர உற்பத்தியாளர்களுக்குத் தரப்படுகிறது. அவர்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குகிறார்கள். அதனால், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும், 100 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும் ஒரே விலையில்தான் உரங்கள் தரப்படுகின்றன.

பெரிய நிலச்சுவான்தார்களுக்கு இந்த மானியத்தின் பயன் சென்றடைய வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, மானியத்தின் பயன் உர உற்பத்தியாளர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கிறது என்பது அதைவிட வேதனையான விஷயம். தங்களுடைய நிர்வாகச் செலவுகளை அதிகரித்து மானியத்தின் பெரும்பகுதி பயனை உரத் தயாரிப்பாளர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள்.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, மானியம் நேரடியாக விவசாயிகளைப்போய் சேரும்படியான வழிமுறைகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் கொடுத்த உறுதிமொழி, செயல்படுத்தப்படவே இல்லை. உரத் தயாரிப்பாளர்கள் அதைச் செயல்படுத்தவிடவில்லை என்றுகூடக் கூறலாம். அப்படிச் செய்திருந்தால், பெரிய நிலச்சுவான்தார்கள் மானியம் வழங்கும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருப்பார்கள். சுமார் எட்டு கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகள் பயன்பெற்றிருப்பார்கள்.

தற்போது விவசாயிகள் தாங்கள் எந்த உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். மானிய விலையில் உரத் தயாரிப்பாளர்கள் வழங்கும் யூரியா போன்ற உரங்களைத் தான் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு. மானியம் நேரடியாக அவர்களைச் சேர்கிறது எனும்போது, தங்களது பயிறுக்கு ஏற்ற கலவை உரங்களைப் பெறும் வசதி அவர்களுக்கு ஏற்படும். விவசாய உற்பத்தி பெருகும்.

சிறு விவசாயிகளை எப்படி அடையாளம் காண்பது? அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது?~ இதைக்கூடச் செய்ய முடியாவிட்டால் இந்த அரசும், நிர்வாக எந்திரமும், அதிகாரிகளும் எதற்கு?

விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்படவோ, நிறுத்தப்படவோ கூடாது. மாறாக, முறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் பெயரைச் சொல்லி பெரிய உர நிறுவனங்கள் மானியத்தை விழுங்குவது தடுக்கப்பட வேண்டும். சேர வேண்டியவர்களைப்போய் மானியங்கள் சேராமல் இருப்பதற்கு யார் காரணம்? நிதியமைச்சருக்குத்தான் வெளிச்சம்!

————————————————————————————–

நிதியமைச்சரை நம்புவோமாக!

உலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என்று இந்தியப் பொருளாதாரம் திசைதிரும்பிய நாள் முதல், பல்வேறு தரப்பிலிருந்தும் எச்சரிக்கைக் குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. பலமான பொருளாதார அடித்தளம் என்பது ஒரு தேசத்தின் அன்னியச் செலாவணி இருப்பும், ஏற்றுமதியும் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தன்னிறைவும்கூட என்பதைத்தான் இந்த எச்சரிக்கைக் குரல்கள் வலியுறுத்தின.

பங்குச் சந்தைப் பொருளாதாரம் என்பது, தனியார்மயம், உலகமயம் போன்ற கொள்கைகளிலிருந்து இணைபிரிக்க முடியாத விஷயம். சந்தைப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆபத்தே, ஒரு சில தனிநபர்களின் அதிபுத்திசாலித்தனம் பங்குச் சந்தையில் பூகம்பத்தை ஏற்படுத்தி அப்பாவி முதலீட்டாளர்களை ஓட்டாண்டிகளாக்கி விடும் என்பதுதான். ஹர்ஷத் மேத்தா மற்றும் யு.டி.ஐ. மோசடிகள் எத்தகைய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின என்பதைத் தங்களது சேமிப்புகளை ஒரே நொடியில் இழந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் சோகக்கதைதான் எடுத்துரைக்கும்.

பங்குச் சந்தைப் பொருளாதாரத்தின் இன்னொரு மோசமான பரிமாணத்தை விரைவில் இந்தியா சந்திக்க இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவால், உலக அரங்கில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களும், பிரச்னைகளும் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பும் என்பதை நாம் சந்திக்க இருக்கிறோம்.

அமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க இருக்கிறது என்பதை உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமன்றி, அமெரிக்க அரசே உணர்ந்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட இருக்கும் பின்னடைவைச் சரிக்கட்ட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 140 பில்லியன் டாலர் திட்டமொன்றை அறிவித்திருக்கிறார். வரிக்குறைப்பு மூலம் அமெரிக்கப் பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுதான் இதன் நோக்கம். வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விற்பனையும், அதன் மூலம் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதுதான் அதிபர் புஷ்ஷின் எதிர்பார்ப்பு.

பொருளாதாரப் பின்னடைவின் விளைவால், உற்பத்தி குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என்பதுதான் அவர்கள் கவலை. ஏற்கெனவே புஷ் நிர்வாகத்தின்மீது காணப்படும் அதிருப்தி, இதுபோன்ற வேலைக்குறைப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களால் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் தலைவலி அது.

பெரிய அளவில் அமெரிக்காவுக்கு நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி இல்லை என்பதால் அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு நம்மைப் பாதிக்காது என்று வாதிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நமது ஐ.டி. நிறுவனங்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவை நம்பித் தொழில் செய்பவர்கள். நமது இந்தியப் பங்குச் சந்தை மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் அன்னிய மூலதனத்தில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, டாலர்களாக வந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது.

அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு, அங்குள்ள முதலீட்டாளர்களைத் தங்களது மூலதனத்தை இந்தியாவுக்குத் திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதுபோன்ற முதலீடுகள் திடீரென திரும்பப் பெறப்படும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமது பொருளாதாரத்தையே தகர்த்துவிடும் தன்மையது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவின் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல், அமெரிக்காவைச் சார்ந்த அத்தனை நாடுகளும் குழம்பிப் போயுள்ளன.

இந்தியப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அமெரிக்கப் பின்னடைவு நம்மைப் பெரிய அளவில் பாதிக்காது என்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதி கூறியிருக்கிறார். நமது அடிப்படைப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அதனால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தைரியம் கூறியிருக்கிறார். நல்லது, நம்புவோம். ஆனாலும் சிறு சந்தேகம்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கப் பொருளாதாரமும் பலமாகத்தானே இருந்தது? எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறோமே, அமெரிக்கா ஆட்டம் கண்டால் நாமும் ஆட்டம் காண மாட்டோமா?

—————————————————————————————-

நேர்முகமா, மறைமுகமா?

மத்திய பட்ஜெட் தயாராகி வருகிறது. வழக்கம்போல தொழில்துறையினர், சேவைத்துறையினர், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துப் பேசி ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்.

ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், கணினித்துறையில் ஈடுபட்டோர், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், மருந்து-மாத்திரை தயாரிப்பாளர்கள், புத்தக பதிப்பாளர்கள், தகவல் தொடர்பில் முதலீடு செய்தோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், கட்டுமானத் துறையில் உள்ளோர், கணக்கு தணிக்கையாளர்கள், மருத்துவத் தொழிலைச் செய்வோர், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்துவோர் என்று வசதி படைத்தவர்களே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.

“”மோரீஷஸிலிருந்து முதலீடு செய்தால் வரி விதிப்பு கிடையாது” என்ற மொட்டையான சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று “”சமீபத்தில்தான்” நிதி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைத் தடுக்க இந்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கை வருமாம். மத்திய பட்ஜெட் என்பதே பணக்காரர்கள், வசதி படைத்தவர்களின் நலனுக்காக ஏழைகள் மீது வரியைச் சுமத்தி கறாராக வசூலிப்பதற்குத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு ஊதியம் இருந்தால் எல்லோருக்குமே 30%தான் வருமான வரி என்பது எந்த ஊர் நியாயம்? 20 லட்சம் சம்பாதித்தாலும் 20 கோடி சம்பாதித்தாலும், 200 கோடி சம்பாதித்தாலும் உச்ச பட்சம் 30% தான். வாழ்க மத்திய அரசின் சோஷலிசம்.

ஏழைகள், நடுத்தர மக்களின் குடும்பங்களில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வயதான பெற்றோர்கள், கவனித்தே தீர வேண்டிய ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்கள், விதவையர், நிரந்தர நோயாளிகள் என்று பல பிரச்னைகள் உண்டு. சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்குவதே இவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. வருமான வரிச் சலுகைக்காக வீடு கட்ட ஆரம்பித்தவர்களின் நிலைமை வெளியில் சொல்லும்படியாக இல்லை. நம் நாட்டின் மருத்துவ இன்சூரன்ஸ் லட்சணம் மற்ற எல்லோரையும்விட சிதம்பரத்துக்கே தெரியும். ஆயினும் நடுத்தர வர்க்கத்துக்கு அவர் தரும் நிவாரணம் என்ன?

நடுத்தர வர்க்கத்தின் சேமிக்கும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தேசிய புள்ளிவிவர நிறுவனம் சமீபத்திய கணக்கெடுப்பிலிருந்து அறிந்து அரசுக்கு அறிக்கை தந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான அம்சம். நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பினால்தான் எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று வருகின்றன. அந்தத் தொகையிலிருந்துதான் அரசு, தனக்கு முக்கியச் செலவுகளுக்குக் கடன் பெறுகிறது. விதை நெல்லைப் போன்றதுதான் நடுத்தர மக்களின் சேமிப்பு. அதற்கு வழி இல்லாமல் வருமானம் ஒட்டத்துடைக்கப்படுகிறது என்றால் நிதி நிர்வாகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.

விலைவாசி உயர்வு, ஊதியக் குறைவு, நுகர்வு கலாசாரம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. முதல் இரண்டுக்கும் மத்திய, மாநில அரசுகளும் நம் நாட்டுத் தொழில்துறையும் காரணம். மூன்றாவதற்கு வெளிநாட்டு தனியார் வங்கிகளும் அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கிவிட்ட நம் நாட்டு நிதி நிறுவனங்களும் காரணம்.

உலகமயம், பொருளாதார தாராளமயம் ஆகியவற்றிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க முடியாது என்று கூறி சுங்கவரி, உற்பத்தி வரி, இறக்குமதி வரி ஆகியவற்றைக் கணிசமாக குறைக்கிறார் நிதியமைச்சர். வெளிநாடுகளிலிருந்து வரும் தேவையற்ற இறக்குமதியைக்கூட தவிர்க்க முடியவில்லை என்று சொல்கிறார். ஆனால் நேர்மையாக உழைத்து, வருமானத்தை மறைக்க முடியாத நிலையில் உள்ள மாதச் சம்பளக்காரர்களுக்கு சலுகை காட்டுவதை, தேவையற்ற செயல் என்று கருதுகிறார்.

வீட்டு வாடகை, மளிகைச் செலவு, வைத்தியச் செலவு ஆகிய மூன்றும் மாதாமாதம் விஷம்போல ஏறிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை; அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சம்பளத்தை அவர்களே கூட்டிக்கொண்டுவிடலாம். வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளுக்கு “”அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்” அளவுக்கு இது தீவிர பிரச்னை கிடையாதே? எல்லாம் நம் தலையெழுத்து!

———————————————————————————————————————–
“சிதம்பர’ ரகசியம் எடுபடுமா?

எம். ரமேஷ்

இம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் வெளியாக உள்ளது. தொழில்துறையைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்கள் பட்ஜெட்டை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்வதில்லை.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. லீப் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் வரிசையில் சிதம்பரமும் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு பட்ஜெட் இது.

பட்ஜெட்டின் இறுதிப் பலன் பெருவாரியான நடுத்தர மற்றும் சாதாரணப் பிரிவு மக்களின் வாழ்க்கையைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாக அமைவதில்லை. பல சமயங்களில் பட்ஜெட், இருக்கின்ற நிலைமைக்கும் வேட்டு வைப்பதாகத்தான் இருக்கிறது.

பட்ஜெட்டிற்கு முன்பும் பின்பும் விலைகள் உயரும். சராசரி இந்தியனுக்குச் சுமை கூடும். அறிவிப்புகள் நிறைய இருக்கும். ஆனால் அதனால் யாருக்குப் பலன் என்பது மட்டும் புரியாத “சிதம்பர’ ரகசியமாய் இருக்கும்.

கூடுதல் வரிச் சுமையில் சிக்காமல் தப்பித்தால் போதும் என்று நடுத்தரப் பிரிவு மக்கள் நினைக்கின்றனர். நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற சலிப்பே அடித்தட்டு மக்களிடம் அதிகம் நிறைந்திருக்கிறது.

பொதுவாக தாராளமயமாக்கலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்துமே நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு சுமையாகத்தான் இருந்துள்ளது.

நாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தக உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகமயமாக்கலின் ஓர் அங்கமான தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 1991-ல் நிதியமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அவரை அடியொற்றி சிதம்பரமும் பின்பற்றி வருகிறார். அந்த வகையில் தாராளமயம் தொடரும் என்பது உறுதி.

தாராளமயப் பொருளாதாரம் வேளாண் துறையை அறவே ஒதுக்கிவைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறை பக்கம் சிதம்பரம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

இருப்பினும் இந்தப் பட்ஜெட்டை சுமையில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யவே சிதம்பரம் விரும்புவார். ஏனெனில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்தித்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

அதேசமயம், சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான கூடுதல் செலவினம், 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதலாவது ஆண்டுக்கான ஒதுக்கீடு போன்ற பல பிரச்னைகள் சிதம்பரம் முன் நிற்கும் சவால்களாகும்.

வேளாண் துறை வளர்ச்சி தற்போது 2 சதவீதமாக உள்ளது. வேளாண் உற்பத்தியை 4 சதவீதமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பல நடவடிக்கைகளை சிதம்பரம் எடுத்தாக வேண்டியுள்ளது.

விவசாயக் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பல முனைகளிலிருந்து வலுத்து வருகிறது.

அதேபோல வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரர்களிடையே வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 29,200 கோடி டாலர் உள்ளது. அதேபோல பணவீக்கமும் 4.35 சதவீதமாக கட்டுக்குள் உள்ளதும் திருப்திகரமான விஷயம்.

தொழில்துறை வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு 13.4 சதவீதத்திலிருந்து தற்போது குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டவேண்டுமானால் வேளாண் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடு அவசியமாகிறது.

முந்தைய பட்ஜெட்டுகளைப் போலவே மூன்று முக்கிய விஷயங்களுக்கு மட்டும் சிதம்பரம் முன்னுரிமை அளிப்பார் என்பது திண்ணம். ஒன்று நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, இரண்டு, கட்டமைப்புத் துறையை விரிவாக்குதல், மூன்று, வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவையே.

வெறுமனே அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதிலோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதிலோ பொருளாதார வளர்ச்சியை எட்டிவிடமுடியாது.

கல்வி, இன்றைய நிலைமைக்கேற்ப வேலைவாய்ப்புப் பயிற்சி, ஆய்வு, புத்தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள்தானே நீண்டகாலத்தில் உண்மையான, உறுதியான வளர்ச்சிக்கு வித்திட முடியும்? வரும் பட்ஜெட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

கிராமப்புற வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி மேம்பாடு, வறுமை ஒழிப்பு, விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றம் போன்றவையெல்லாம் தாராளமய அலையில் எங்கோ தள்ளப்பட்டு விட்டன.

காங்கிரஸ் கூட்டணிக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வதுடன் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் சிதம்பரத்துக்கு உள்ளது.

வேளாண்மை மற்றும் மகளிர்க்கு இந்தப் பட்ஜெட்டில் அதிக சலுகை காட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது வார்த்தைகளைப் பூர்த்தி செய்ய சில நடவடிக்கைகளை சிதம்பரம் எடுப்பார் என உறுதியாக நம்பலாம்.

மற்றபடி, கிட்டத்தட்ட இன்னொரு மன்மோகன் சிங் பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்று நம்பலாம்.

Posted in 2008, America, Analysis, Balance, Budget, Business, Cheap, Chidambaram, Chidhambaram, China, Chithambaram, Commerce, Corporate, Currency, Deflation, Dollar, Economy, Exchange, Exempt, Exemptions, Expenses, Exports, Finance, Imports, Income, India, Industry, Inflation, Loss, Monetary, Profit, Recession, Rupees, sectors, SEZ, Tax, Taxes, US, USA | Leave a Comment »

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

Foreign Instituitional Investors – Lucrative opportunities in Emerging Indian markets & sectors

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

முதலீடுகளுக்கு காத்திருக்கும் தொழில்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

சமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் யார்? “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.

இந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.

அந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.

இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது!

ஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன? மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.

அவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன? எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது?

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன?

அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.

அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.

மாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.

உதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.

ஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.

சரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன? மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.

அடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).

ஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.

இன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.

இந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.

தற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.

இந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.

கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது

மேலாளர்.)

Posted in Analysis, Auto, Backgrounders, Bonds, Brazil, BRIC, BSE, Bus, Cars, China, Defaltion, Deflation, Diversify, ECE, Economy, EEE, Electrical, Electronics, Emerging, Employment, Exchanges, Exports, FDI, FEMA, FERA, FII, Finance, Funds, GDP, Globalization, Growth, Imports, Index, Industry, Inflation, InfoTech, Instrumentation, investments, job, Leather, Luxury, Manufacturing, markets, Metro, MNC, Model, Motors, NIFTY, NSE, Op-Ed, Opportunities, Options, Outsourcing, pension, Primers, Recession, Retirement, revenue, Risk, Russia, sectors, service, Shares, Stagflation, Stats, Stocks, Taiwan, Tech, Technology, Telecom, Textiles, Trucks | Leave a Comment »