குஜராத்தில் ஜாதி அரசியல் ஆதிக்கம்
ஆமதாபாத், ஆக.4: குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவில் ஜாதி அரசியல் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதி அரசியல் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா பாஜக என்ற கேள்வியும் குஜராத் அரசியலில் இதனால் எழுந்துள்ளது.
முந்தைய தேர்தல்களில் குஜராத்தில் ஜாதிய அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்த போதிலும் அதைக் காட்டிலும் மத ரீதியிலான அரசியல் கடந்த 20 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு முக்கிய காரணம் பாஜக போன்ற கட்சிகளால் உருவான ஹிந்துத்துவா அலையே ஆகும்.
ஆனால் தற்போது அந்த அலை குஜராத்தில் குறைந்து விட்டது என்றே சொல்லாம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதி அரசியலே கோலோச்சும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியாக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து படேல் ஜாதி இருந்து வந்தது என்று கூறலாம். ஆனால் அந்த ஜாதியில் உள்ள லோவா படேல் பிரிவினர் பாஜகவுக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளனர்.
இப் பிரிவினர் சர்தார் படேல் சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக தாலுகா அளவில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மாநிலத்தில் 102 தாலுகாவில் இதே போன்ற பிரசாரத்தை தேர்தலுக்கு முன்னதாக நடத்தி முடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். குஜராத் மக்கள் தொகையில் படேல் ஜாதியினர் 20 சதவீதம் உள்ளனர்.
மோடிக்கு எதிரணியில் இருக்கும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கேசுபாய் படேல் லேவா படேல் பிரிவைச் சேர்ந்தவர். அண்மையில் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 பாஜக எம்.எல்.ஏ.க்களும் அதே பிரிவைச் சேர்ந்தவர்கள்தான்.
படேல் ஜாதியில் மற்றொரு பிரிவு கத்வா படேல். இவர்கள் நரேந்திர மோடியை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கோலி ஜாதியினர் குஜராத் மக்கள் தொகையில் 15 சதவீதம் உள்ளனர். இந்த ஜாதியைச் சேர்ந்த பெண் கற்பழிக்கப்பட்டு கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்டார். குற்றவாளியை இதுவரை போலீஸôர் கைது செய்யவில்லை. இது அந்த ஜாதியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கோலி வகுப்பைச் சேர்ந்தவரான பாஜக எம்.பி. சோம படேல் முதல்வர் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளராகி விட்டார். முதல்வருக்கு எதிரான பொதுக்கூட்டங்களுக்கு அவர் பகிரங்கமாகவே ஏற்பாடு செய்துவருகிறார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.பி.யான நளின் பட் பிராமணர்களை பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் பொருட்டு அவர் விரைவில் கூட்டம் ஒன்றை கூட்ட இருப்பதாகவும் சொன்னார்.
இதனிடையே, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே நடவடிக்கையை தொடங்கிவிட்டது.
தெற்கு, மத்திய குஜார் பிராந்தியத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த அவர்கள் கடந்த 2002 தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பழங்குடியினர் வாக்குகளை மீண்டும் பெற காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பேரணிகள், பொதுக்கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை எதிர்கொள்ளும் வகையில் பழங்குடியினருக்கு ரூ.13,000 கோடி அளவிலான திட்டங்களை தடாலடியாக நரேந்திர மோடி அரசு அறிவித்தது. இவ்வாறு பழங்குடியினர் வாக்குகளை கைப்பற்றுவதில் காங்கிரஸ்- பாஜக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
குஜராத் மக்கள் தொகையில் சிறுபான்மையினர் 14 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் மதச்சார்பற்ற கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸின் வாக்கு வங்கியாக தொடர்ந்து இருந்து வருகின்றனர். சத்ரிய வகுப்பைச் சேர்ந்த சங்கர் சிங் வகேலா காங்கிரஸ் கட்சிக்கு சென்றதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு அந்த வகுப்பினரின் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது.
ஜாதி அரசியலின் ஆதிக்கம் குஜராத் அரசியலில் ஆட்சி மாற்றத்தை இந்த முறை ஏற்படுத்தும் வாய்ப்பை மறுப்பதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். பாஜக தரப்பில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி குஜராத்தில் மீண்டும் மலரும் என்கின்றனர் அக்கட்சியினர்.