இட ஒதுக்கீட்டில் “கிரீமி லேயர்’: உச்ச நீதிமன்ற ஆணை பிற்போக்கானது -இந்திய கம்யூனிஸ்ட்
புதுதில்லி, அக். 21: தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு (கிரீமி லேயர்) இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மிகவும் பிற்போக்குத்தனமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதை மாற்றுவதற்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு;
நமது சமுதாயத்தில் உள்ள மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீது நீதித்துறை தொடுத்துள்ள தாக்குதல் இது.
இதை மாற்றவில்லை என்றால், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற லட்சியத்தையே இது தகர்த்துவிடும்.
இடஒதுக்கீட்டுக் கொள்கையையும், அதன் அமலாக்கத்தையும் மறுவரையறை செய்திருப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் அத்துமீறி பிரவேசித்துள்ளது.
இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டும் என்பதை, பாரபட்சமற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியது நாட்டின் கொள்கை வகுப்பாளர்களே தவிர, உச்ச நீதிமன்றம் அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு: எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது சரியான நடவடிக்கை அல்ல; இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தில்லியில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறினார்.