சுற்றுலாவை மேம்படுத்த ரூ.330 கோடியில் திட்டம்
பா. ஜெகதீசன்
சென்னை, மார்ச் 5: கடலோரச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.330 கோடி செலவில் “கடலோரப் பாதுகாப்புத் திட்ட’த்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்கள், மத்திய அரசின் 4 நேரடி ஆட்சிப் பகுதிகள் ஆகியவற்றில் அமைந்துள்ள மொத்தம் 7 ஆயிரத்து 517 கி.மீ. நீளக் கடற்கரைப் பகுதிகள் இதன்மூலம் பலன் பெறும்.
இத்திட்டத்தின் கீழ் படகுகள், வாகனங்கள் வாங்குவது, காவல் நிலையங்களை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவிகளை அளிக்கும்.
குறைந்த செலவில் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாகக் கடற்கரை திகழ்கிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் அங்கு வருகின்றனர். அப்படி வருபவர்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைச் செய்து தருவது மிக அவசியம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தெரிவித்தார். தமிழகத்தில் இன்னும் அதிகமாக பிரபலம் ஆகாத கடற்கரைப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவை மேம்படுத்தப்படும் என்றார் அவர்.
விபத்துகளில் இருந்து காக்க…: கடற்கரைப் பகுதிகளில் விபத்துகள், எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும்போது அங்கு உள்ள சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பொது மக்கள் ஆகியோரை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும்.
அதற்கு வசதியாக, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட “உயிர் காக்கும் பாதுகாவலர்’களை முக்கிய கடற்கரைப் பகுதிகளில் நியமிக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் எவ்வித ஆபத்தும் இன்றி நீச்சல் அடிப்பதற்கு உதவும் வகையில் “பாதுகாப்பு வலை’களை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையோரத்தில் நீந்துபவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதை இப் பாதுகாப்பு வலைகள் தடுக்கும். அத்துடன் மக்கள் நீந்தும் கடலோரப் பகுதிகளுக்குள் ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் நுழைவதையும் தடுத்து நிறுத்தும்.
பாரம்பரியக் கட்டடங்களைப் பாதுகாக்க…: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாரம்பரியக் கட்டடங்களைப் பாதுகாக்கவும், அப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு மத்திய அரசின் மானிய உதவியாக ரூ.40 கோடி கிடைக்கும். 4 ஆண்டுகளில் இக்குறிப்பிட்ட திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும்.