Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘scientist’ Category

Tamil Nadu to set up electronics export center, TIDEL-III Park

Posted by Snapjudge மேல் மே 9, 2007

மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மே 9: தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில்

  • சென்னை தரமணி,
  • ஸ்ரீபெரும்புதூர்,
  • அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன.

இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:

மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும்.

ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.

சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.

  • காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர்,
  • பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.
  • கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும்
  • சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும்
  • திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும்
  • மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.
  • நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.

இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.

இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்” என்றார் கருணாநிதி.

———————————————————————————–

புதிய ஜமீன்தார்கள்!

கல்கி – Kalki 10.06.2007 (தலையங்கம்)

நந்தி கிராமில் டாடா நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை ஒதுக்கித் தந்து, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாயிற்று மேற்கு வங்க அரசு. கலவரம், உயிர்ச் சேதம் என்று பிரச்னை வளர்ந்து, கடைசியில் திட்டம் ரத்தாயிற்று.

உ.பி.யில் அதே விதமான நில ஒதுக்கீட்டை ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக முலாயம்சிங் அரசு செய்திருந்தது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்துவிட்டு, “தொழிலதிபர்கள் வேண்டுமானால் சந்தை விலைக்கு நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளட்டும்; அரசு கையகப்படுத்தி சலுகை விலையில் அவர்களிடம் விற்காது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

ஆனால், தமிழ்நாட்டில் விஷயம் நேர்மாறாக இருக்கிறது.

இராணிப்பேட்டையில் இரண்டு கொரிய நிறுவனங்களுக்கு ஆற்காடு வீராசாமி நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக வாக்களித்திருக்கிறார். இதற்காக அரசு மக்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தும்! காஞ்சிபுரம் அருகே ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ, ஒரு துபாய் நிறுவனம் ஒன்று, 350 ஏக்கர் நிலம் வாங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது!

ஐம்பதாயிரம் பேருக்கு இந்த மண்டலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிறார்கள். ஆனால், அதற்கு 350 ஏக்கர் நிலம் என்பது மிக மிக அதிகம். ஐ.டி. சார்ந்த தொழிலகங்கள் ஐம்பது ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் மீதி நிலம் வாழிடம், பள்ளி, ஷாப்பிங் மால் போன்றவற்றுக்கு என்றும் விவாரிக்கிறார்கள்!

பெரிய தொழிலதிபர்கள் சலுகை விலையில் அரசிடமிருந்து நிலம் பெறும் ஏற்பாட்டை இரு தரப்பினரும் துஷ்பிரயோகம் செய்வது வழக்கமாகிவிட்டது. அதிகார வர்க்கம் இலஞ்ச – ஊழலில் ஈடுபடுகிறது. தொழிலதிபர்களோ, தேவைக்கதிகமான நிலத்தை வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் அதன் விலை உயரும்போது, லாபம் சம்பாதிக்கிறார்கள். நிலத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயரவும் இவர்கள் காரணமாகிறார்கள். இது ஏழைகளையும் சராசாரி மக்களையும்தான் வதைக்கிறது.

‘உணவு உற்பத்தி, விவசாயப் பெருக்கம் நோக்கி அரசின் திட்டப் பணிகள் திசை திரும்ப வேண்டும்’ என்று தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், தமிழகத்தில் என்ன செய்கிறார்…? விவசாயம் சார்ந்த பகுதியில், அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொழில்நுட்ப நிறுவனம் கிளை பரப்ப வழி செய்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குப் பலமான அஸ்திவாரம் அமைக்கிறார்.

ஒரு குடிசை அமைத்துக்கொள்ளக்கூட நிலமின்றி அவதிப்படும் இலட்சக்கணக்கானோர் வாழும் நாடு இது. இங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலம் பொதுமக்களின் சொத்து. அதைக் கண்ணை மூடிக்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலதிபர்களுக்கு வாரி வழங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! தனியார் நிலமாயினும் பெரிய தொழிலதிபர்கள் 300 ஏக்கர் 500 ஏக்கர் என்று தேவைக்கு அதிகமாக வாங்கி, வளைத்துப் போட அனுமதிப்பது பெரும் அநீதி!

பெரிய தொழிலதிபர்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஏராளமான வேறு பல சலுகைகளையும் பெறுகிறார்கள். மொத்தத்தில், விவசாய ஜமீன்தாரி முறையையும் பெரிய மிராசுதாரர்களையும் ஒழிக்கப் போராடி சட்டமும் இயற்றிய நமது ஆட்சியாளர்கள், இன்றைக்குப் புதிய சலுகைகள் மூலம் நவீன ஜமீன்தாரி தொழிலதிபர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

Posted in 3, Ambathur, Ambattoor, Ambattur, Biotech, Chennai, Coimbatore, College, computers, Development, Education, Electronics, Employment, Export, Factory, Industry, InfoTech, IT, ITES, Jobs, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjipuram, Karunanidhi, Kottoor, Kottur, Kovai, Madras, Madurai, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MNC, multinational, Nellai, Orgadam, Paper, Perumpakkam, Research, Salem, Science, scientist, SEZ, SIPCOT, Software, Special, Sriperumputhoor, Sriperumputhur, Students, Tamil Nadu, TamilVU, Tax, Tech, Technology, Tharamani, Thiruchi, Thiruchy, Thirunelveli, Three, Thruchirappalli, TIDEL, TIDEL-III, TN, Trichirappalli, Trichy, University, Virtual, Virtual University, VU | Leave a Comment »

Kalki & Nellai Su Muthu – Women’s Day Special

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

பெண் தெய்வங்கள் இருக்கும் திக்கு நோக்கி, பயபக்தியுடன் தண்டம் சமர்ப்பிக்கும் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிச் சிறிது
காலமாயிற்று.

என்னைப் பொருத்த அளவில், உலகில் சாதாரண ஸ்திரீகள் யாருமே
கிடையாது. எல்லாரும் மாதரசிகள், பெண்மணிகள், ஸ்திரீ ரத்தினங்கள், பெண் தெய்வங்கள், இன்ப விளக்குகள், இளங்குயில்கள், பொன்
மயில்கள்தான். உலகம் இத்தகைய ஆனந்தக் காட்சியாக அடியேனுக்குத் தோற்றம் அளிப்பதற்கு முக்கியக் காரண புருஷர்கள் கவி சுப்பிரமணிய பாரதியும், திரு.வி.கலியாண சுந்தர முதலியாருமேயாவர். படிக்கப் படிக்க, மிகவும் சாதாரண ஸ்தீரிகளெல்லாம் என் கண்முன்னே தெய்வ மகளிராகக் காட்சி தரலாயினர்.

ஆரம்பத்தில், மேற்கூறிய பெரியார்களுடனே நான் முற்றும் மாறுபட்ட குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.

‘‘நல்ல
காதல் புரியும் அரம்பையர்
போலிளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு’’

எனும் பாரதியார் பாட்டின் அடிகளை முதன்முதலில் நான் கேட்டபோது, இதைப் போன்ற வெள்ளைப் புளுகு அல்லது பச்சைப் பொய் – உலகில் வேறொன்றும் கிடையாது என்று எண்ணினேன். தற்கால தமிழ்நாட்டின் இளங்கன்னியர் அரம்பைகளல்லர் என்பது சர்வ நிச்சயம். அவர்கள் காதல் புரிவதில்லையென்று கோயிலில்
விளக்கு வைத்து அணைப்பேன்.
தமிழ்நாடு மற்ற எத்தனையோ
துறைகளில் மேன்மை பெற்றிருக்கலாம். ஆனால், பெண்களின் அழகுக்கு நமது நாடு பெயர் போனதல்ல. இச் சிறப்பை கேரளம், சிந்து, காஷ்மீரம் போன்ற நாடுகளுக்குக் கொடுத்து விடத் தான் வேண்டும். மேலும், இந் நாளில் நமது பெண்களுக்குக் கன்னிப் பருவத்தில் காதல் புரியும் சந்தர்ப்பம்தான் ஏது? ‘பாரதியார் ஏன் இவ்வளவு பச்சைப் பொய் சொல்கின்றார்?’ என்று இவ்வாறு சிந்திக்கலானேன்.

ஸ்திரீகளைப் ‘‘பெண்மணிகள்’’ என்றும், ‘‘பெண் தெய்வங்கள்’’ என்றும் ‘‘மாதரசிகள்’’ என்றும் திரு.வி.க. முதலியோர் புதுத் தமிழில்
சொல்கின்றார்கள் என்னும் சந்தேகமும் முதலில் எனக்கிருந்தது.
ஆண்களைப் பற்றிச் சொல்லுங்கால், ‘‘ஆடவ தெய்வங்கள்’’ என்றாவது, ‘‘ஆண்மணிகள்’’ என்றாவது, ‘‘ஆணரசர்கள்’’ என்றாவது சாதாரணமாகச் சொல்கிறோமா? கிடையாது. பழைய நூல்களிலே ‘‘புருஷ வியாக்ரம்’’, ‘‘ஆண் சிங்கம்’’, ‘‘இளங்காளை’’ போன்ற சொற்றொடர்கள் வருவது உண்மை. ஆனால் ஆண்மகனுக்கு இவையெல்லாம் சிறப்பா, இழிவா என்பதே ஐயத்துக்கிடமானது. அறிவுக்கே சிறப்பு மிகுந்த இந்நாளில் யாரையாவது பார்த்து ‘‘அடே ஆண் புலியே! ஏ இளம் மாடே!’’ என்று அழைப்போமாயின் அவன் உண்மையிலேயே புலியின் குணமும், மாட்டின் குணமும் பெற்று அறையவோ, முட்டவோ வந்தால்
ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்ல வேளையாக, இவ்வழியில்
ஆண்களைச் சிறப்பிப்போர் இந் நாளில் யாரும் கிடையாது.

பாரத நாட்டில் நான் அறிந்த வரையில் புருஷர்களுக்குள்ளே
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒருவர்தான் ‘‘தேவர்’’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளார். ஆனால் ஸ்திரீகளிலென்றால், எல்லாரும் கமலாதேவி, விமலாதேவி, லக்ஷ்மிதேவி, பார்வதி தேவி, ருக்மணி தேவி, சகுந்தலா தேவிதான். ஏன்?

பெண் தெய்வங்காள்! மன்னியுங்கள். இந்தச் சந்தேகங்களெல்லாம்
பின்னால் எனக்குப் பூரணமாய் நிவர்த்தியாகிவிட்டனவென்று
தெரிவித்துக் கொள்கிறேன். எப்படியிருந்தாலும் தமிழ்நாடு நமது நாடு. தமிழ்நாட்டுப் பெண்கள் நமது சகோதரிகள். எனவே, பாரதியார்
பாடியதில் தவறு என்ன? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? ‘‘மணி’’ என்றால் பொன் மணியாய்த்தான் இருக்க வேண்டுமா? கருமணி அல்லது நீலமணியாகவும் இருக்கலாமன்றோ? பார்க்கப் போனால், ரூப சௌந்தரியத்தில் என்ன இருக்கிறது? குண சௌந்தரியமன்றோ உண்மை சௌந்தரியமாகும்! கல்வியழகே யழகு! கற்பின் புகழே புகழ்! நமது இளங்கன்னியர் புரியும் காதலைப் பாடியபோது, பாரதியார் கேவலம் கீழ்த்தர நாவல்களில் காணப்பெறும் இழிவான காதலையா குறிப்பிட்டார்? இல்லை; இல்லை. தமிழ்ப் பெண்களின் காதல், இல்வாழ்க்கையோடியைந்த உயர் காதலாகும் _ என் உள்ளத்திலே பெரியதொரு புரட்சி உண்டாயிற்று. எவ்வளவு பெரிய புரட்சியெனில் வங்கத்தின் பிரபல நாடகாசிரியரான துவிஜேந்திரலால் ராய் என்பவர் ஓரிடத்திலே,

‘‘பகவானே! பெண் தெய்வங்களைப் படைத்து இவ்வுலகை இன்பமயமாக்கிய நீ, அவ்வின்பத்தைக் கெடுப்பதற்கு இந்த ஆண்
மிருகங்களை ஏன் படைத்தாய்?’’

என்று எழுதியிருந்ததைப் படித்தபோது, ‘‘உண்மை! உண்மை!’’ என்று கதறினேன்.

ஏ! ஆண் மிருகங்காள்! பெண் தெய்வங்களைப் போற்றுங்கள்.

– ‘பெண் தெய்வங்கள்’
வானதி வெளியீடு

======================================================

அறியாப் பெண்களின் அறிவியல் முகங்கள்

நெல்லை சு. முத்து

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நோபல் பரிசு பெற்ற உலகின் முதலாவது பெண் விஞ்ஞானி மேரி ஸ்கலோதோவ்ஸ்கா கியுரி (1867 – 1934). ரேடியம், பொலோனியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்தவர்.

முதன்முறையாக இரண்டு தடவை பரிசு வென்ற முதல் பெண்ணும் இவர்தான். இயற்பியலுக்கும் (1903) வேதியியலுக்கும் (1911) பரிசுகள். இத்தனைக்கும் நான்கு வயதிலேயே தாயை இழந்தவர்.

ஆனால், உலக வரலாற்றில், அறிவியல் துறையில், முதல் “முனைவர்’ பட்டம் பெற்றவரும் இவரே. பாரீஸ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியர். இவரது கணவர் பியரி கியுரியும் நோபல் விருது பெற்றவர். மகள் ஐரின் கூட 1935 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் வென்றவர். உன்னத நோபல் குடும்பம்.

பிரெஞ்சு அறிவியல் அகாதமிக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது போட்டியாளர் எட்வார்டு பிரான்லி என்கிற கத்தோலிக்க வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். காரணம் அவர் ஒரு யூதப் பெண்மணியாம். நிறுவன அதிபர் எம். அமாபாத், “பெண்கள் பிரெஞ்சு நிறுவனத்தில் அங்கம் வகிக்கக் கூடாது’ என்றே அறிவித்தார். ஆயினும் மேரி கியுரி தன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார். நீண்டகாலமாக கதிர்வீச்சுப் பொருள்களுடன் ஆய்வு நடத்தியதால் கண்புரை, விரல் சிதைவு, ரத்தசோகை போன்ற நோய்கள் பாதித்து மரணம் அடைந்தார்.

இன்னொரு வகையில் ஆராய்ந்தால் நோபல் பரிசைப் பொருத்தமட்டில் ஆணாதிக்கம் சொல்ல வேண்டியது இல்லை. 671 முறை ஆண் விஞ்ஞானிகள். வெறும் 29 முறை மட்டுமே பெண் விஞ்ஞானிகள். இவர்களில் கூட சமாதானத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் முறையே 10, 9 பெண்மணிகள் புகழ் பெற்றனர். ஏனையோரில் 5 பேர் மருத்துவம், இருவர் வேதியியல், ஒருவர் இயற்பியல், ஏற்கெனவே குறிப்பிட்ட கியுரி அம்மையார் மட்டும் இரண்டு முறை.

ஏனோ தெரியவில்லை. இன்றுவரை பொருளாதாரத் துறைக்கு நோபல் பரிசு பெறவில்லை என்பது ஒரு வினோதக் குறிப்பு.

உலக அளவிலும் பெண் விஞ்ஞானிகள் ஓரங்கட்டப்படுவது ஓர் அதிர்ச்சித் தகவல். நோபல் தகுதி கொண்டு இருந்த ராச்சேல் கார்சன் என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர் பெண்ணை யாருக்கும் தெரியாது. அணுகுண்டு சோதனைக்குத் தடை விதிக்கப் பாடுபட்டு 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் தெரியும். அவருடன் ஊர்ஊராகப் பிரசாரம் செய்த துணைவியார் அவாஹெலன் தனியே சிறப்புப் பெறவில்லை.

பிரான்சிஸ் எச்.க்ரிக், ஜேம்ஸ் டி வாட்சன், மௌரிஸ் எச். வில்கின்ஸ் ஆகியோர் கண்டு துலக்கிய டி.என்.ஏ. மரபணுவின் ஏணித் தோற்றம் மரபியலில் பிரபலம். மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு உடலியங்கியல் அல்லது மருத்துவம் என்கிற பிரிவின்கீழ் நோபல் பரிசு வழங்கப் பெற்றது.

ஆனால் டி.என்.ஏ. கட்டமைப்பு குறித்த எக்ஸ்கதிர் படிகவியல் நிரூபணம் வழங்கியவரை உலகம் அறியாது. உண்மையில் 1962 ஆம் ஆண்டின் நோபல் பரிசு ரோசலிண்ட் எல்சி ஃப்ராங்ளின் என்னும் பெண் விஞ்ஞானிக்கும் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் அவரும் அதற்குள் 37ஆம் வயதிலேயே புற்றுநோயால் இறந்து போனார்.

விண்வெளியில் அண்டக் கதிர்வீச்சு மற்றும் துடிப்பு விண்மீன்களைக் கண்டறிவதற்காக அந்தோனி ஹூவிஷ், மார்ட்டின் ரைல் ஆகியோருக்கு 1974 ஆம் ஆண்டு நோபல் பரிசு. அவர்களின் முன்னோடியாக முதலில் இவற்றைக் கண்டுபிடித்த மாணவி ஜோசிலைன் பெல் நிலை கேள்விக்குறிதான்.

அது மட்டுமா; 1944 ஆம் ஆண்டு அணுக்கருப் பிளவு குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கு நோபல் பரிசு வென்றவர் ஓட்டோ ஹான். அமெரிக்காவின் மன்ஹாட்டன் திட்டத்தில் அவருடன் பணியாற்றிய லீஸ் மெய்த்னர் அங்கீகாரம் பெறவே இல்லை.

நம் நாட்டிலோ நோபல் பரிசு பெற்ற இந்தியக் குடிமக்கள் நால்வர். சர் சி.வி. ராமன் (இயற்பியல், 1930), ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம், 1913), அமார்த்திய சென் (பொருளாதாரம், 1998), அன்னை தெரசா (சமாதானம், 1979) ஆகியோர். அதிலும் இந்தியாவின் ஒரே ஒரு நோபல் பரிசுப் பெண் என்ற பெருமைக்கு உரியவர் துருக்கியில் பிறந்தவர். இந்தியக் குடியுரிமை பெற்றவர். இவர்கள் நால்வருக்குமே பெரும்பாலும் வங்காளம் அல்லது கோல்கத்தாதான் பணிக் களம்.

எப்படியோ, சர்வதேச அளவில் இன்னோர் உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் சார்ந்த பருவங்கள், நோய் சார்ந்த மருந்துகள், மூளை சார்ந்த எண்ணங்கள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உண்டு.

இதனாலேயே 1991 ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் “மகளிர் உடல்நல முன்நடவடிக்கை’ என்கிற தொலைநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் ஐம்பதுக்கும் எண்பதுக்கும் உள்பட்ட 1.61 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டு விட்டனர். நம் நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.

ஐரோப்பாவின் வாலென்டைன் நினைவுதாம் முக்கியமா? இந்த வாலென்டைன் யார் என்றுதானே. ரோம் நாட்டில் இரண்டாம் கிளாடியஸ் அரசருக்குத் தெரியாமல் உள்ளூர் வாலிபர்களுக்குத் திருட்டு விவாகம் நடத்தி வைத்த புண்ணியவான். ராஜத் துவேஷச் செயலில் ஈடுபட்டவர்தான் இந்த வாலென்டைன்.

அவர் நினைவு 1700 ஆண்டு நீள் உறக்கத்தில் இருந்த இந்தியக் காதலர்களுக்கு இப்போதுதான் பொத்துக் கொண்டு வந்தது. இன்று நாய்க்குட்டியிடம் அன்பு செலுத்தவும் வாலென்டைன் ஆசீர்வாதம் வேண்டிக் காத்து இருக்கிறோம். உயிர்களிடத்து அன்பு வேணும் என்கிற பாரதி தெரியாது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடிய வள்ளலார் அன்பு தினம் அறியோம். மக்கள்தொகைப் பெருக்கும் காதலர் தினம் மட்டும் கடற்கரையில் கற்போம். வேறு வழியே இல்லை பாருங்கள்.

இளைஞர்களே, இரவில் கண்விழித்துப் பாடம் படித்தால் உழைப்பு. படம் பார்த்தால் கொழுப்பு. நடுமூளையில் பீனியல் சுரப்பி ஒன்று ஒவ்வொருவர் மண்டைக்கு உள்ளும் இருக்கிறது. அதில் இருந்து சுரக்கும் மெலாட்டோனின் ஹார்மோன் நீர் பெருகினால் உறக்கம் கண்ணைச் சொக்கும். விடலைப் பருவத்தினருக்கு அது நடுராத்திரியில் தாமதமாகச் சுரக்கிறதாம். அதனாலேயே இரவு எல்லாம் கண் துஞ்சாமல் காலையில் உறங்குகிறார்கள் என்றோர் ஆய்வு.

ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் வருகிறது. ஆனால் “ராமன் விளைவு’ பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டு கொண்டதாக இல்லை. “வாலென்டைன் விளைவு’ காதலர் தினம் கொண்டாடினால் தான் அன்பு மலர்கிறதாம். சின்னக் கடைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வியாபாரம்.

சொந்தச் செலவில் வெளிநாட்டுப் “பெரிய சகோதரர்கள்’ வீட்டில் தங்கி அவமானப்படுவதே நம் பாரத வீராங்கனைகளின் சாதனை. மானம் கெட்டுப்போய் பரிசு வாங்குவதுதான் இனவெறித் தாக்குதலுக்கு எதிரான வெற்றியாமே.

பொதுவாக, ஆண்கள் தங்களை ஒரு பெரும் சமூக அமைப்பின் அங்கமாகக் கருதுவர். சராசரி விகிதாசார அளவில் ஆண்களே மதம், கட்சி, மொழி என்று ஒரு சமூக ஆதாரம் சார்ந்து தான் கூடுதல் ஆவேசப்படுகிறார்களாம். பெண்கள் குடும்பச்சூழல் அடிப்படையிலேயே இயங்குகின்றனர். அமெரிக்காவில் சார்லோத்தெஸ்வில்லி நகரில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மனநோய் மருத்துவர் ஆண்டர்சன் தாம்சன் கருத்து இது.

ஜே.அண்டர்சன் தாம்சன் ஜூனியர் அறிவித்த ஆய்வு முடிவு பெண்கள் மனத்தில் பொறி கிளப்புகிறது. உலகின் பல்வேறு தீவிரவாதத் தற்கொலைப் படைகளில் பெரும்பான்மை பெண்களாம். மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராயிட் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மனித இனவியல் கழக மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்து இது.

அறியா விடலைப் பருவத்தில் கற்பு இழப்பு, கனவு கண்ட திருமண வாழ்க்கை அமையாத ஏமாற்றத்தால் விவாகரத்து, எதிரிகளால் கணவர் அல்லது சகோதரர்கள் கொலையுண்ட பரிதவிப்பு என ஏதேனும் ஒரு காரணம் போதும். பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுதல் எளிதாம்.

(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).

Posted in Analysis, Awards, Backgrounder, Chauvinism, Discoverer, Doctor, Equal Opportunity, Facts, Famous, Females, History, Information, Inventor, Kalki, Lady, male, Men, Nobel, Ph.d, Prizes, Professor, Research, Science, scientist, Scientists, Woman, Women | Leave a Comment »

CU Sooriyamoorthy: Science Column – The hidden power behind the dark energy

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

“இருளாற்றலை’ விளக்கும் புதிய அறிவியல் கொள்கை

சி.இ. சூரியமூர்த்தி

19-ம் நூற்றாண்டின் முடிவில், மிகச் சிறந்த கண்டுபிடிப்பார்களான மைக்கேல்சன், தாம்சன் போன்றவர்கள் அறிவியலின் புதுக்கண்டுபிடிப்புகள் அநேகமாக முடிந்துவிட்டதாகவே குறிப்பிட்டனர்.

அவர்கள் 20-ம் நூற்றாண்டில் ஒளியின் வேகம், மின்னணுவின் மின்னூட்டம் போன்ற அடிப்படைப் பண்புகள் மிகத் துல்லியமாக அளக்கப்படும் என்றும், புதிய கொள்கைகள் ஒன்றும் தோன்றாது எனவும் எண்ணினர்.

ஆனால் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியல் ஆய்வுகளில் மிகப் பெரிய புரட்சியே நடந்தது என்பது நாம் அறிந்த செய்தி. பிளாங்கின் “ஒளித்துகள்களாக’ வரும் “வெப்பக்கதிர்வீச்சுக் கொள்கையும், ஐன்ஸ்டீனின் சிறப்பு ஒப்புமைக் கொள்கையும்’ இயற்பியலின் போக்கையே மாற்றிவிட்டன. அதைத் தொடர்ந்து டென்மார்க் அறிவியலாளர் போர் அறிவித்த அணு அமைப்புக் கொள்கையும், ஷாடிஞ்சர், ஹைசன்பர்க் முதலானோர் நிறுவிய “குவாண்டா எந்திர இயலும்’ உலகப் பொருள்களை மேலும் விளக்கமாக அறிய உதவின.

இந்தப் புதுக் கொள்கையால் ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் புதிய புதிய ஆய்வுகளை உலகெங்கும் மேற்கொண்டனர். அவை இன்றும் தொடர்கின்றன.

இனி இந்தப் புதிய 21-ம் நூற்றாண்டின் அறிவியல் ஆய்வுகள் எந்த அமைப்புகளை நோக்கிச் செல்லும் என்பது நமக்குள் எழும் இயற்கையான கேள்வி. இன்றுள்ள ஆய்வுகளின் போக்கை வைத்து ஓரளவுக்கு அதைக் கணிக்கலாம். வருங்கால ஆய்வுகளுக்கு விடைகளை விட கேள்விகளே அதிகமாக உள்ளன.

அறிவியல் ஆய்வுகளில் முதல் தடுமாற்றம் 1930-ல் நிகழ்ந்தது. நட்சத்திரங்களின் நிறையை இரண்டு முறைகளில் அளக்கலாம். ஒன்று, அது வெளியிடும் ஒளியின் அளவை வைத்து அதன் நிறையைக் கணிக்கலாம். மற்றது அது சுழலும் வேகத்தை வைத்தும் கணிக்கலாம்.

ஊட் என்ற அறிவியலாளரும், ஸ்விக்கி என்பவரும், நட்சத்திர மண்டலங்களின் நிறையை இந்த இரண்டு முறைகளிலும் கணித்தார்கள். ஆனால் கணிப்புகள் மிகவும் மாறுபட்டன. அவர்கள் மிகத் துணிச்சலுடன் அண்டத்தைப் பற்றிய ஒரு புதுக் கொள்கையை அறிவித்தனர். அதன்படி நட்சத்திர மண்டலங்களில் நாம் காண முடியாத பொருள்கள் அதிகமாக உள்ளன. இவைகள் ஒளியை உமிழ்வதும் இல்லை, சிதற வைப்பதும் இல்லை. அதனால் இவை அண்டத்தில் மறைந்து உள்ளன. அதற்கு அவர்கள் “”இருள் பொருள்” என்று பெயரிட்டனர்.

இக்கொள்கையின்படி இருள் பொருள்களின் அணுக்கள் நாம் காணும் சாதாரண அணுக்களின் அமைப்பிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும். இதுவரை நாம் அறிந்த அறிவியல் கொள்கைகள் இவைகளுக்குப் பொருந்தாது. ஆனால் புவியீர்ப்பு விசை மட்டும் இவைகளைக் கட்டுப்படுத்தும்.

வானியல் ஆய்வாளர்கள் சில நட்சத்திரங்கள் சில சமயங்களில் பெரியதாகத் தெரிவதைக் கண்டனர். நட்சத்திர ஒளி, இருள் பொருள்கள் அருகில் செல்லும்போது அவைகள் வளைக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இருள் பொருள்களின் ஈர்ப்புத் தன்மையே என்று ஒரு விளக்கம் தரப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு “புவியீர்ப்பு ஒளிகுவிப்பு’ என்று பெயர். கடந்த 10 ஆண்டுகளில் இவ்வகை நிகழ்வுகள் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டன.

சிறப்பு ஒப்புமைக் கொள்கையால் இதை விளக்கலாம். இந்த நிகழ்வுக்கு, காண முடியாத “”இருள் பொருள்களே” காரணமாக இருக்க வேண்டும். இதற்குப் பிறகு அறிவியல் உலகில் இருள் பொருள்களைப் பற்றிய நம்பிக்கையும், ஆய்வுகளும் தொடங்கின. 21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ்வாராய்ச்சிகள் வேகம் பெறத் தொடங்கின.

இதுவரை தெரிந்த முடிவுகளின்படி இந்த இருள் பொருள்களின் அமைப்புகள் மூன்று வகையாக இருக்கலாம். அவைகளாவன 1. விம்ப் 2. மாக்கே 3. நியூட்ரினோ இவைகள் உலகப் பொருள்கள் வழி எந்தத் தடையுமின்றி ஊடுருவிச் செல்லும். இந்தக் கொள்கையின்படி விம்ப் துகள்கள் கோடிக்கணக்கில் ஒவ்வொரு விநாடியும், நம் உடலில் பாய்ந்து செல்கின்றன. இவைகள் சாதாரண உலகப் பொருள்களுடன் தொடர்பு கொள்ளாததால் நாம் எளிதில் உணர முடியாது.

1998-ல் ஜப்பான் நாட்டில் ஒருவகை நியூட்ரினோ இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக நோபல் பரிசும் அளிக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் உலகின் பல நாடுகளில் சிறப்பாக நடைபெறுகின்றன.

இதற்கிடையில் மற்றொரு பெரிய கண்டுபிடிப்பும் நிகழ்ந்துள்ளது. 1919-ல் ஹப்பில் என்ற வானியலாளர் அண்டத்தின் விளிம்பில் உள்ள நட்சத்திர மண்டலங்கள் வேகமாக வெளிநோக்கி ஓடுவதைக் கண்டார். ஐன்ஸ்டீனின் சிறப்பு ஒப்புமைக் கொள்கைப்படி புவிஈர்ப்பினால் விண் பொருள்கள் மையம் நோக்கி வர வேண்டும். “”பெரு வெடிப்பினால்” ஓடும் விண் பொருள்கள் பின் ஈர்ப்பினால் அண்டத்தைச் சுருங்க வைக்கும்.

ஆனால் தொலைநோக்கி ஆய்வுகளில், அண்டத்தின் விரிவு உந்தப்படுகிறது. இதற்கு தற்போது உள்ள அறிவியல் விளக்கம் இல்லை. பல அறிஞர்கள் புதிய ஒரு கொள்கையை முன் வைத்துள்ளார்கள். அதன்படி புவியீர்ப்புக்கு எதிராக ஒரு எதிர்ப்புவிசை அண்டத்தில் உள்ளது. அது மிக வலிமை வாய்ந்தது. அதற்கு “இருளாற்றல்’ என்று பெயர். இது புதிய அறிவியல் கொள்கை.

இன்றுள்ள அறிவியலின்படி உலகை இயக்குவது நான்குவகை விசைகளே. 1. புவியீர்ப்பு விசை 2. மின்விசை 3. மெல்விசை 4. வல்விசை. கதிர் வீசலுக்கு காரணமாவது “மெல்விசை’ அணுசக்திக்கு ஆதாரம் “வல்விசை’. இந்த நான்கையும் ஒன்றிணைக்க ஐன்ஸ்டீன் தன் கடைசி 20 ஆண்டுகளில் ஆய்வுகள் செய்தார். வெற்றி பெறவில்லை.

உலகின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள் பல காலம் போராடி ஒரு புதுக் கொள்கையை வகுத்தனர். அதற்கு, சிறந்த இழைக்கொள்கை என்று பெயர். இதன்படி உலகில் நாம் அறிந்த பொருள்கள்யாவும் 16 வகை அடிப்படைப் பொருள்களால் ஆனவை. இந்த 16 பொருள்களும் சிறந்த இழையின் பல்வேறு ஓட்டத்தின் மூலம் உண்டாக்கப்படலாம். இதை மிகப்பெரிய அறிவியல் வெற்றியாகக் கருதினர். ஆனால் இருள் பொருள்களும், இருள் ஆற்றலும் ஓரளவு உண்மை என்று காணப்பட்டபோது, அதை விளக்க “சிறந்த இழைக்கொள்கை’ தவறிவிட்டது.

ஒரு கணிப்பின்படி நம் அண்டம் 70 விழுக்காடு இருளாற்றலாலும், 25 விழுக்காடு இருள்பொருளாலும் 5 விழுக்காடே நாம் கண்டு உணரும் பொருள்களாலும் ஆகியது. நாம் இதுவரை அறிய முடியாத 95 விழுக்காடு அண்டத்தை அறிய புதுக்கொள்கைகளும், புதுப்பரிசோதனைகளும் வேண்டும்.

ஐரோப்பாவில் மிகச் சக்தி வாய்ந்த “துகள் முடுக்கிகள்’ அமைக்கப்படுகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் அவை இயங்கத் தொடங்கும். அண்டம் தோன்றிய பெருவெடிப்பில் என்ன நிகழ்ந்தது என்பதை இந்த முடுக்கிகள் மூலம் அறிய முடியும். அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் ஒருவேளை இருள் பொருள்கள், இருள் ஆற்றல்கள் ஏன் தோன்றின? அந்த அணுக்களின் பண்புகள் என்ன? அமைப்புகள் என்ன? என்பதற்கு விடைகள் தெரியலாம்.

இன்றைய நம் நாட்டு இளம் அறிவியலாளர்கள்தான் இதில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். ஆய்வு உலகம் அகலத் திறந்து அவர்களை எதிர்நோக்கி உள்ளது. இவைகளை விளக்க ராமன்களையும், போஸ்களையும் இந்த நாடு எதிர்நோக்கியுள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவுகளே அண்டத்தின் விதியை நமக்குக் காட்டும். அந்த அறிவு விரைவில் ஒளிவீச வாழ்த்துவோம்.

(கட்டுரையாளர்: மதுரை காமராசர் பல் கலைக்கழக இயற்பியல் – சூரிய ஆற்றல் துறை முன்னாள் பேராசிரியர்).

Posted in Astronomy, Atom, Black, Bose, Chemistry, Column, Dark, Discovery, Education, Electircity, energy, Gravity, Institute, Invention, Meteorologist, Nuclear, Physics, Raman, Research, Science, scientist, Sky, Sooriyamoorthi, Sooriyamoorthy, Sooriyamurthy, Stars, Study, Suriyamoorthy, Suriyamurthy, Tamil, Technology | Leave a Comment »

Bharathidasan University’s Professor gets ‘Young Scientist’ award

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

பாரதிதாசன் பல்கலை. விரிவுரையாளருக்கு இளம் விஞ்ஞானி விருது

திருச்சி, பிப். 14: பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை உணர்வு மைய விரிவுரையாளர் சொ. இலக்குமணனுக்கு மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் “இளம் விஞ்ஞானி’ விருது வழங்கியுள்ளது.

இவருக்கு ஆய்வு நிதியாக ரூ. 10.80 லட்சமும் வழங்கப்படுகிறது.

தமிழக கடலோரப் பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், சுனாமி பேரழிவு, இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் கடலோர வேளாண் நிலங்கள், சதுப்பு நிலங்கள், இறால் வளர்ப்புப் பகுதிகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் ஆகியன எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றுக்கான மறுசீரமைப்பு ஏற்பாடுகள் குறித்தும் இவர் ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த ஆய்வை செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட நுண்ணிய புகைப்படங்களைக் கொண்டும், புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் மேற்கொள்ள உள்ளார்.

Posted in Agriculture, Award, Bharathidasan University, Environment, Factory waste, Forest, Global Warming, Impact, Lakshmanan, Pollution, Prize, Recognition, Research, S Lackumanan, scientist, Seashore, So Lakkumanan, Technology | Leave a Comment »

Amitabh Bhachan to contest for Indian President Election?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

ஜனாதிபதி பதவிக்கு அமிதாப்பச்சன் போட்டியா?

புதுடெல்லி, பிப். 12-

ஜனாதிபதி அப்துல்கலாமின் பதவி காலம் முடிகிறது. எனவே ஜுன் மாதத்துக் குள் புதிய ஜனாதிபதி தேர்ந் தெடுக்கப்பட வேண்டும். அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த சில கட்சிகள் விரும்பு கின்றன. ஆனால் அவர் 2-வது முறை யாக ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை.

காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, முன்னாள் மத்திய மந்திரி கரண்சிங் இருவரில் ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட பாரதீய ஜனதா கூட்டணி வற்புறுத்தி வருகிறது. அவர் நிற்காவிட்டால் தற்போதைய துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷேகாவத்தை நிறுத்த பாரதீய ஜனதா விரும்புகிறது.

சமாஜ்வாடி கட்சி நடிகர் அமிதாப்பச்சனை நிறுத்த விரும்புகிறது. தெலுங்கு தேசம், அ.தி.மு.க. கட்சிகளின் ஆதர வுடன் நிறுத்த அவர்கள் காயை நகர்த்தி வருகின்றனர். நான் அரசியலுக்கு ஏற்றவன் அல்ல என்று ஏற்கனவே அமி தாப்பச்சன் கூறி இருந்தார். எனவே அவர் இந்த பதவிக்கு போட்டியிட விரும்புவாராப என்று தெரியவில்லை.

கம்ïனிஸ்டு கட்சிகள் சபாநாயகர் சோம்நாத் சட் டர்ஜியை நிறுத்த விரும்பு கின்றன. இதற்கு காங்கிரசின் ஆதரவை பெறவே முயற்சித்து வருகின்றனர். ஆனால் கம்ï னிஸ்டு கட்சிக்கு துணை ஜனாதிபதி பதவியை வழங்க லாம் என காங்கிரஸ் நினைக் கிறது.

நாளை பஞ்சாப்பிலும், அடுத்து மே மாதத்தில் உத்தர பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட வேண்டும் என்பதால் தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சிகள் இதுபற்றி முடிவு எடுக்க உள்ளன.

Dinamani Editorial (Feb 13, 2007)

மீண்டும் கலாம்

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து இப் பதவிக்கான வேட்பாளராக யார் நிறுத்தப்படலாம் என்பது பற்றி ஊகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இப் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஷெகாவத் ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாகச் செய்திகள் கூறுகின்றன.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்து வருபவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்துவது ஒரு சம்பிரதாயமாக இருந்து வந்த காலம் உண்டு. கே.ஆர். நாராயணன், சங்கர்தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன் போன்றவர்கள் இவ்விதம் குடியரசுத் தலைவர்களாக ஆனவர்களே. எனினும் மத்தியிலும் பெருவாரியான மாநிலங்களிலும் காங்கிரஸின் ஆதிக்கம் நிலவிய காலங்களில் இதெல்லாம் சாத்தியமாக இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் சேர்ந்து யாரை ஆதரிக்கிறார்களோ அவர்தான் குடியரசுத் தலைவராக முடியும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கிறார்கள். எனவே காங்கிரஸ் தனது சொந்த பலத்தை நம்பி யாரையும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்ய இயலாது.

இப் பின்னணியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை இரண்டாம் முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என மக்களின் பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இணையதளத்தில் இதற்கான தீவிர இயக்கம் நடந்து வருகிறது. இதுதொடர்பான கருத்துக்கணிப்புகளில் அப்துல் கலாமையே மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெருவாரியானவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

நாடு இப்போது இருக்கின்ற தருணத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாமைவிடப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது எனலாம். கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், விஞ்ஞானி, அப்பழுக்கற்றவர், எந்த அரசியல் சார்பும் பெற்றிராதவர் என பல பரிமாணங்களைக் கொண்ட அப்துல் கலாம், குடியரசுத் தலைவர் பதவிக்குப் புதிய இலக்கணம் வகுத்துள்ளார். குடியரசுத் தலைவர் பதவி என்பது அலங்காரப் பதவியாகவும் அப் பதவியில் உள்ளவரை யாரும் எளிதில் நெருங்க முடியாது என்றும் இருந்த காலம் உண்டு. ஆனால் “அறிவியல் முனிவர்’ என்று வர்ணிக்கத்தக்க அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இறங்கி வந்து மக்களுடன் நெருங்கிப் பழகி வருபவர். குழந்தைகளின் அபிமானத்தைப் பெற்றவர். இளைஞர்கள் மனத்தில் லட்சியக் கனவைத் தோற்றுவித்து அவர்களிடையே எழுச்சியை உண்டாக்கி வருபவர்.

அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆக்குவதை பாஜக விரும்புவதாகத் தெரிகிறது. கடந்த டிசம்பரில் பாஜக தலைவர்கள் அப்துல் கலாமைச் சந்தித்து அவர் மீண்டும் போட்டியிடுவதானால் தங்களது ஆதரவு உண்டு என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இக் கட்டத்தில் தங்கள் நிலையை அறிவிக்க விரும்பவில்லை என்று தோன்றுகிறது. நீட்டிய காகிதத்தில் கையெழுத்துப் போடுகிறவர் அல்ல என்று அப்துல் கலாம் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நிரூபித்துள்ளதால் அவரை மீண்டும் நிறுத்துவதில் காங்கிரஸýக்குத் தயக்கம் இருக்கலாம். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளுக்கும் போதுமான பலம் உள்ளது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் மீண்டும் அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். அப்துல் கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல. அவர் இந்தியாவின் மாமனிதர் என்பதற்காக.

Posted in Affiliation, Amar Singh, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, APJ Abdul Kalam, Assembly, Author, BJP, Byron Singh Shekavat, Byronsingh Shekawath, Communist, Cong (I), Congress, Congress (I), Congress Party, CPI, CPI (M), Election, Indira Congress, Kalam, Karan Singh, KR Narayan, Lok Sabha, Marxist, Marxist Communist, MLA, MP, Mulayam, Mulayam Singh Yadav, Politics, President, President Election, Punjab, R Venkatraman, scientist, Shankar Dayal Sharma, SJP, Somnath Chatterjee, Sushil Kumar Shinde, Thinker, UP, Uttar Pradesh, vice-president | Leave a Comment »

New Invention by 7th grade student gets Intel innovation award

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

புதிய அறிவியல் கண்டுபிடிப்பு: தமிழக மாணவருக்கு 2 தங்கப்பதக்கம்


புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான இளம் சாதனையாளர் விருது பெற்ற கோவை மாணவர் அபிலாஷுடன் இன்டெல் நிறுவன இந்தியாவுக்கான மேலாளர் ராமமூர்த்தி, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த பேராசிரியர் அனுப் சின்ஹா (வலது).

கோவை, ஜன. 31: புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான இளம் சாதனையாளர் விருதாக கோவையைச் சேர்ந்த மாணவருக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இன்டெல் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறை, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த தேசிய அளவிலான கண்காட்சியை ஏற்பாடு செய்வதோடு, ஆண்டுதோறும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியையும் தில்லியில் நடத்துகின்றன.

கடந்த ஆண்டில் (2006) இத்தகைய போட்டி மற்றும் கண்காட்சிக்கான அழைப்பில் 2,000 பேர் விண்ணப்பம் செய்தனர். தேசிய அளவில் 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆக்கங்களை கண்காட்சியில் பார்வைக்கு வைத்தனர்.

இதில் கோவையைச் சேர்ந்த மாணவர் எம்.அபிலாஷ் (தற்போது திருச்சி சின்மயா வித்யாலயத்தில் ஏழாம் வகுப்பு பயில்கிறார்) இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். விலங்கியல் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்காகவும் வயது வரம்புத் தகுதிக்குள்ளான புதிய கண்டுபிடிப்பாளருக்கான விருதாகவும் ஒரே சமயத்தில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

வரும் பிப். 13 முதல் 16 வரை தில்லியில் நடைபெறும் சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் அபிலாஷ் கலந்துகொள்கிறார்.

பயன்படுத்திய பின் வீசியெறியும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பயன்படுத்திய எக்ஸ்ரே பிலிம்களைக் கொண்டு புதுமையான, அரிய பூச்சிப் பொறியை வடிவமைத்துள்ளார் அபிலாஷ்.

இவரது தாயார் சங்கீதா பணிக்கர், திருச்சி தாவரவியல் துறையில் பேராசிரியையாக உள்ளார்.

Posted in Abhilash, Abilash, Award, Biology, Chinmaya Vidhyalaya, Chinmaya Vidyalaya, Coimbatore, Gold Medal, Industry, Intel, Kovai, M Abhilash, precollege, Prize, Research, Science, scientist, Talent, Technology, Thiruchirapalli, Thiruchirappalli, Trichy, Winner, Young Achiever, Zoology | Leave a Comment »

Bt paddy trials raise a din in Tamil Nadu

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2006

பி.டி.படாமல் போகுமா?

கோவை அருகே ஆலாந்துறையில் தனியார் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பி.டி. நெற்பயிர்களை சில விவசாய அமைப்பினர் அழித்தனர்.

நவம்பர் 10-ல் சம்பவம் நடந்தது. பி.டி.நெற்பயிரை சாகுபடி செய்திருந்த நிறுவனம் இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்ததாகவோ, விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. இது குறித்து தமிழக அரசின் வேளாண்மைத் துறையும் வெளிப்படையான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. இந்த அமைதியில், நியாயத்தின் நிழல் தெரியவில்லை.

இதேபோன்ற சம்பவம் அக்.28-ம் தேதி ஹரியாணாவில் நடைபெற்றது. மரபீனி மாற்று பயிர்களுக்கு எதிரான அமைப்பினர் இந்த பி.டி.நெற்பயிரை அழித்தனர். இந்தியாவில் 9 இடங்களில் பி.டி. நெல் உற்பத்திக்கான சோதனைக் களங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் மரபீனி மாற்று பருத்தி உற்பத்திக்கு மட்டுமே இதுவரை அரசின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி (மனிதரின்) உணவுப் பொருள் பட்டியலில் இல்லை. இருப்பினும், பருத்திக்கொட்டைப் புண்ணாக்கை மாடுகளும் பசுவின் பாலை மனிதரும் சாப்பிடுவதை அரசு கணக்கில் கொள்ளவில்லை.

தற்போது மரபீனி மாற்று நெற்பயிரை அறிமுகம் செய்ய, சோதனைக்களம் அமைத்து விதை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தச் சோதனைக்களத்தில் விளையும் நெல்மணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, பின்னர் அதன் புள்ளிவிவரங்களை அரசுக்குத் தெரிவித்து, அனுமதி பெறும் முயற்சி “முறைப்படி’ நடக்கும்.

இந்தியாவில் நெல் உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் இல்லை. எந்த மாநிலத்திலும் அரிசித் தட்டுப்பாடு இல்லை. வெளிச்சந்தையில் கிடைப்பதுடன், கடத்தலுக்கும் நிறைய அரிசி மூட்டைகள் கிடைக்கின்றன. அப்படியிருக்க எதற்காக இந்த பி.டி.நெற்பயிரைத் திணிக்கும் முயற்சி?

பி.டி. நெல் ரகம் என்பது நெற்பயிரைத் தாக்கக்கூடிய முக்கிய புழுக்கள், நோய்களை எதிர்க்கும் மரபீனிகளைக் கொண்டுள்ளதால் பூச்சிகொல்லி செலவுகள் மிச்சமாகும் என்பது மட்டுமே மேலோட்டமாகச் சொல்லப்படும் தகவல். ஆனால் இதனை உணவாகச் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று யாராலும் உறுதி கூற முடியாது. சுற்றுச்சூழல், உடல்நலக் கேடுகள் என்பதைவிட இதில் வேறுவகையான அரசியலும் கலந்திருப்பதை உணர்ந்தால் இந்திய அரசு இதில் மெத்தனம் காட்டாது.

உயர்ரக அரிசி உள்பட பல்வேறு வகை அரிசிகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கும் அன்னியச் செலாவணி ஆண்டுக்கு ரூ.7000 கோடி. நாம் ஏற்றுமதி செய்யும் அரிசியை வாங்கும் நாடுகள் பூச்சிகொல்லி மற்றும் மரபீனி மாற்று பயிர்களுக்கு எதிரானவை. இந்திய மண்ணில் பி.டி. நெல் ரகங்களை மலிவு விலையில் அறிமுகம் செய்து உற்பத்தி நடக்கும் நேரத்தில் “இந்தியாவில் பல லட்சம் எக்டேரில் பி.டி. நெல் சாகுபடி’ என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் செய்திகள் (உள்நோக்கத்துடன்) வெளியாகும். இந்திய அரிசி அனைத்தையும் அந்நாட்டினர் சந்தேகத்துடன் வாங்கத் தயங்குவர். இந்திய நெல்லுக்கு சந்தை வாய்ப்பு வீழ்ச்சியடையும். இது ஒருவகையில் வர்த்தகப் பயங்கரவாதம்.

பி.டி. ரகப் பயிர்களைச் சோதனை அடிப்படையில் பயிரிடும்போது, சோதனைக்களம் அமைந்துள்ள பஞ்சாயத்துக்கு இது பற்றிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதி வலியுறுத்துகிறது. ஆலாந்துறையில் நிலத்தை குத்தகைக்கு விட்ட விவசாயிக்கு பி.டி.நெல் பற்றி தெரிந்திருக்கவில்லை. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.

================================================

மீண்டும் பிரச்சினை

மரபீனி மாற்றப்பட்ட விதைகள் மீண்டும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளன. மரபீனி மாற்றப்பட்ட விதைகளின் நச்சுத்தன்மை குறித்த புள்ளிவிவரங்களைத் தருவதற்கு மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை மறுத்துள்ளது.

கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த திவ்யா ரகுநாதன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு தகவல்களைக் கேட்டு இத்துறையிடம் சென்ற ஆண்டு மனு கொடுத்தார். முதல் கோரிக்கை – மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய், கடுகு ஆகியன பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள இடங்கள் யாவை? இதற்கான பட்டியலை உயிரி தொழில்நுட்பத் துறை தெரிவித்தது.

இரண்டாவது கோரிக்கை – இந்த மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய், கடுகு ஆகியவற்றில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் ஒவ்வாமை குறித்த தகவல்கள். இதை உயிரி தொழில்நுட்பத் துறை தர மறுத்துவிட்டது. இதற்காக அவர் உயர்நிலைக் குழுவுக்கு முறையீடு செய்துள்ளார். ஒருவேளை அவருக்கு அப் புள்ளிவிவரங்கள் கிடைத்தாலும் கிடைக்கும்.

இருப்பினும், உயிரி தொழில்நுட்பத் துறை சொல்லும் காரணம் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதுதான் கவலை அளிப்பதாக உள்ளது. “தகவல் அறியும் சட்டத்தின் பகுதி 8.1.டி-யின்படி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் அல்லது அறிவுக் காப்புரிமை ரகசியங்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதன் மூலம் அந்த நிறுவனத்தின் தொழில்போட்டியில் பின்னடைவு ஏற்படுமெனில் அத்தகவல்களை வெளியிட வேண்டியதில்லை’ என்பது ஏற்புடையதாக இல்லை.

மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் மூலமாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிட்டால் நிச்சயமாக எந்த நோயும் பின்விளைவும் ஏற்படாது என்று எந்த ஆய்வுக் கூடமும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இன்னும் சில ஆண்டுகளில் மரபீனி மாற்றப்பட்ட அரிசியும் காய்கறிகளும் இந்தியச் சந்தையை நிறைக்கப் போகின்றன. இந்த உணவுப் பொருள்கள் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களில் விளைந்தவை என்ற அறிவிப்புடன் விற்கப்படும் என்பதும் நிச்சயமில்லை. இதை உண்ணும் இந்தியர்கள், அதன் புள்ளிவிவரங்களை அறிந்துகொள்ளாமலேயே சாப்பிடலாம் என்பது தற்கொலைக்குச் சமமானது.

மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்படும் இடங்களின் பட்டியலைத் தெரிவித்தவுடன் இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் அந்தப் பகுதிகளுக்குச் சென்று அப்பயிர்களை நாசம் செய்த சம்பவம் உயிரி-தொழில்நுட்பத் துறைக்கு சில சங்கடங்களைத் தந்திருக்கக் கூடும் என்பது உண்மையே. அதற்காக, ஒரு நிறுவனத்தின் தொழில்போட்டி பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிரையும் உடல்நலத்தையும் புறக்கணிப்பது சரியான முடிவாக இருக்குமா?

பாரம்பரிய வேளாண்மையில், குறிப்பிட்ட பூச்சியை, நோயை எதிர்த்து வளரும் பயிர்களின் விதைகளைத் தனியே பிரித்து, அவற்றை மீண்டும் மீண்டும் பயிரிட்டு, அதிலிருந்து விதை உற்பத்தி செய்வார்கள். ஆனால், மரபீனி விதைகளில் வேறு ஒரு மரபீனியை உட்செலுத்துவதன் மூலம் ஒரே சாகுபடியில் அதன் போக்கை மாற்றுகிறார்கள். இதனால்தான் அதன் பின்விளைவு எந்தத் திசையில் செல்லும் என்பதை உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. ஆகவே இதற்கு எதிர்ப்பு உள்ளது.

பாரம்பரிய வேளாண்மையில் நோய் தாங்கும் பயிர் விதைகளை உற்பத்தி செய்ய குறைந்தது 5 ஆண்டுகளாகும். மரபீனி விதைகளை ஒரே சாகுபடியில் உற்பத்தி செய்துவிடலாம். ஆனால், அதன் விளைபொருளைச் சாப்பிடுவோருக்கு ஏற்படும் நோய்க்கான காரணங்களை அறிந்துகொள்ள 5 ஆண்டுகள் ஆகும். சிறிய வேறுபாடுதான்! ஆனால் இதுதான் சிக்கலாக இருக்கிறது.

Posted in Agriculture, Andhra Pradesh, Bt paddy, Chhattisgarh, Climate, Consumption, Environment, Exports, Farming, Food, Genetic, Genetic Manipulation, genetically-engineered, Government, Greenpeace, K Chellamuthu, Karnataka, maharashtra, Maharashtra Hybrid Seed Company, Mahyco, Monsanto, P Nammalwar, Paddy, rice, S Martin, Science, scientist, Surjit Choudhary, Tamil Nadu, Tamil Nadu Farmers’ Association, Uttar Pradesh, V Duraimanickam, West Bengal | 1 Comment »