Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sarvanan’ Category

Notable Women series in Kumudham: Thiruvengimalai Sarvanan – Rukmani Arundale

Posted by Snapjudge மேல் ஜூலை 28, 2007

குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
ருக்மணி அருண்டேல்
திருவேங்கிமலை சரவணன்

25.07.07  தொடர்கள்


‘‘எங்க வீட்டுப் பெண் பரதநாட்டியம் கத்துக்கிறா’’ _ பொது நிகழ்ச்சியில் பட்டுப்புடவை சரசரக்கும் பெண் தன் செல்ல மகளை இன்னொரு பெண்மணிக்கு பெருமையுடன் அறிமுகப்படுத்துவதைப் பார்க்கலாம். இன்று பரதநாட்டியம் கற்றுக்கொள்வது என்பது மிகப்பெரிய கௌரவமாகி விட்டது. குறிப்பாக நகரங்களில் மாலை வேலைகளில் பல வீடுகளில் ‘தக திமி’ ‘தகதிமி’ என்று ஜோராக சலங்கை ஒலி கேட்க முடிகிறது. அது ஒரு இதமான அனுபவம். சொல்லப்போனால் ‘என், பெண் பரதநாட்டியம் ஆடுவாள்’ என்பது பெண் பார்க்கும் படலத்தின் போது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது. இன்று பரத நாட்டியம் ஒரு தெய்வீக கலையாக தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் ஊடுறுவி விட்டது:

இந்தக் கலைக்கு மிகப்பெரிய அந்தஸ்தை தந்து தெய்வீக நிலைக்கு உயர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர்களில் முக்கியமானவர் ருக்மணி அருண்டேல் என்கிற அற்புதப் பெண்மணி!

‘‘பரதநாட்டியம் என்பது இந்திய பாரம்பரியத்தின் முக்கியமான அடையாளம்!’’ உலகத்தில் இருக்கிற அத்தனை கலை ஆர்வலர்களும் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால், முன்னொரு காலத்தில் பரதநாட்டியம் என்பது மிகப்பெரிய சமூக இழுக்காக கருதப்பட்டது. அந்தச் சூழலைப் புரிந்து கொண்டால்தான் ருக்மணி என்கிற சாதனைப் பெண்ணின் எதிர்நீச்சல் உங்களுக்குப் புரியும்!

‘கலா«க்ஷத்ரா’ என்ற சாம்ராஜ்யத்தை நிறுவி பரதநாட்டியத்துக்கு மறுபிறவி கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் ருக்மணி அருண்டேல்.

நீலகண்ட சாஸ்திரி_சேஷம்மாள் தம்பதியினருக்கு 1904_ம் ஆண்டு பிப்ரவரி 29_ம் நாள் மதுரையில் பிறந்தவர் ருக்மணி. நீலகண்ட சாஸ்திரிகள் வடமொழியில் ஞானம் நிரம்பப் பெற்றவர். நிறைய வேதாந்தப் புத்தகங்கள் எழுதியவர்.

அந்தக் காலகட்டத்தில் பால்ய விவாகம்தான் நடைமுறையில் இருந்தது. சிறுமி ருக்மணிக்கும் குழந்தைத் திருமணம் நடத்த பெரியவர்கள் முற்பட்டார்கள். ஆனால், ருக்மணி ஸ்திரமாய் மறுத்து விட்டார். சின்ன வயதிலேயே கர்நாடக சங்கீதம் பயின்றார். அப்போதே அவருக்கு கலைகளின் மீது நாட்டம் வந்துவிட்டது.

ருக்மணியின் தந்தைக்கு சென்னையிலுள்ள தியாஸாஃபிகல் சொஸைட்டியில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ருக்மணிக்கு வயது ஏழு. தந்தையுடன் சேர்ந்து தியாஸாஃபிகல் சொஸைட்டியில் தானும் சேர்ந்து கொண்டார் ருக்மணி.

அங்கு அவர் வாழ்க்கை கலைகளை நோக்கித் திரும்புகிறது. வாழ்க்கையில் காதலும் வருகிறது. தியாஸாஃபிகல் சொஸைட்டியில் அருண்டேல் என்ற வெளிநாட்டுக்காரரும் பணியாற்றி வந்தார். அருண்டேல் தலை சிறந்த கல்வியாளர். ருக்மணி, அருண்டேல் இருவரின் மன எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தனது பதினாறாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அருண்டேலுக்கு அப்போது வயது நாற்பது. பிறகு மும்பையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடன் ருக்மணி நிறைய பயணங்களை மேற்கொண்டார். ஒவ்வொரு இடத்திலும் தென்படும் ரசனையான விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதில் ருக்மணி கெட்டிக்காரர். அப்படித்தான் ரஷ்ய ‘பாலே’ டான்ஸரான ‘அன்னாபாவ்லா’ வின் நடனம் ருக்மணியை ஈர்த்தது. 1928_ல் அன்னாபாவ்லாவின் நடனம் மும்பையில் நடந்தது. தன் கணவருடன் மும்பைக்குச் சென்று பார்த்தார். பிறகு ருக்மணியும், அருண்டேலும் மும்பையிலிருந்து கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவிற்குப் பயணமானார்கள்.

அதிர்ஷ்டவசமாய் அருண்டேல் தம்பதிகள் சென்ற அதே கப்பலில் ‘அன்னாபாவ்லா‘வும் பயணம் செய்து கொண்டிருந்தார். இதைத் தெரிந்து கொண்ட ருக்மணிக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. ‘அன்னாபாவ்லா’ வைச் சந்தித்து நடன விஷயங்களைப் பற்றி நிறைய பேசித் தெரிந்து கொண்டார்.

அப்போதுதான் ‘அன்னாபாவ்லா’ திடீரென்று ருக்மணியைப் பார்த்து, ‘‘நீங்கள் கலாரசனை உடையவராக இருக்கிறீர்கள். நடனத்திற்கேற்ற உடற்கட்டும் இருக்கிறது. நீங்கள் ஏன் டான்ஸ் கற்றுக் கொள்ளக் கூடாது?’’ என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய நடன குருவான ‘கிளியோநோர்டி’யை ருக்மணிக்கு ரஷ்ய நடனம் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். ஆக, ருக்மணி முதன் முதலில் ரஷ்ய நடனத்தைத்தான் கற்றார். ‘‘ரஷ்ய பாலே நடனத்தைத் தொடர்ந்து நாட்டியமும் கற்றுக் கொள்ளுங்களேன்…’’ என்று அன்னா பாவ்லாவே ருக்மணிக்கு ஆலோசனை கொடுக்க, ருக்மணியின் ஆர்வம் பரதம் பக்கம் திரும்பியது. அந்தச் சமயத்தில் பரதநாட்டியம் இந்தியாவில் அவ்வளவு பிரபலம் கிடையாது. நாட்டியங்களை பெண்கள் ஆடுவது இழுக்கு என்கிற தவறான எண்ணம் அப்போது மக்களிடையே இருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் 1933 மியூசிக் அகாடமியில் ‘சதிர்’ எனும் நடனக் கச்சேரியை பந்தநல்லூர் ராஜேஸ்வரி, ஜீவரத்தினம் சகோதரிகள் நிகழ்த்தினார்கள் ‘சதிர்’ நடனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ருக்மணி அந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார்.

ஆனால், அவர் நினைத்த மாதிரி அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ள முடியவில்லை. பல பரதநாட்டிய ஆசிரியர்கள், ருக்மணியைப் பார்த்து. ‘‘நீங்கள் எல்லாம் புதுமை, புரட்சி என்ற பேரில் வருவீர்கள். இதெல்லாம் கலைக்கு உதவாது’’ என்று அவரை ஏளனமாக விமர்சித்தார்கள். ஆனால், ருக்மணிக்கு இந்தக் கலையை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம். பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சிஷ்யை ஆனார். சிறப்பாகக் கற்றார்.

தியாஸாஃபிகல் சொஸைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் சுமார் இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு முன்னிலையில் நடந்த பிரமாண்ட நடன நிகழ்ச்சியில் ருக்மணியின் பரதம் அரங்கேறியது. சீனிவாச சாஸ்திரி, ராமசாமி ஐயர், சிவஸாமி ஐயர் என்று ஏகப்பட்ட ஜாம்பவான்கள் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் ருக்மணியின் நடனத் திறமை பளீரென்று பளிச்சிட்டது.

ஜேம்ஸ் கஸின்ஸ் என்கிற பிரபலமான அயர்லாந்துக் கவிஞர் ருக்மணியின் அந்த நடனத்தை வெகுவாகப் பாராட்டினார். அது மட்டுமில்லாமல், ‘‘ருக்மணி தன்னுடைய இந்த அற்புதமான நடனத் திறமையை நாலு பேருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நடன மையத்தை ருக்மணி ஏற்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இந்த வார்த்தைதான் ருக்மணிக்கு நடன மையத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது.

நினைத்ததோடு மட்டுமில்லாமல் செயலிலும் சுறுசுறுப்பாக இறங்கினார் ருக்மணி. ஆரம்பத்தில் தான் ஆரம்பித்த நடனப் பள்ளிக்கு ‘இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ்’ என்று பெயர் வைத்தார். பல முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடனப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே பின்னர் கலா«க்ஷத்ராவாக உருப்பெற்றது.

ருக்மணியின் நடன குருக்களான பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், அவரது மருமகனான சொக்கலிங்கப் பிள்ளையும் தான் கலா«க்ஷத்ராவின் முதல் நடன ஆசிரியர்கள். ஆரம்பத்தில் கலா«க்ஷத்ராவில் நடனம் கற்றுக் கொள்ள வந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் நான்குதான்.

துவக்க காலத்தில் ருக்மணி தேவியின் நடனத்திற்கு டாக்டர் பத்மாஸினியும், கமலா ராணியும்தான் பாடுவார்களாம். அப்போது வீடு வீடாகச் சென்று டிக்கெட்டுகளை விற்று நடன நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். ருக்மணி தேவியின் ஒரே குறிக்கோளே ‘நடனத்தில் இருக்கிற சர்ச்சைக்குரிய சில விஷயங்களை நீக்கினாலே மக்கள் எல்லோருமே நடனத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். நடனத்துக்கென்று ஒரு புனிதத் தன்மை இருக்கிறது. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்’ என்பதுதான்.

கொஞ்சம், கொஞ்சமாக நடனமும் ஓர் அற்புதமான கலைதான் என்பதை ருக்மணி அருண்டேல் எல்லோருக்கும் புரிய வைத்தார். கலா«க்ஷத்ராவை ருக்மணி தேவி கலைகளின் பிறப்பிடமாகவே நினைத்தார். அதனால்தான் கலா«க்ஷத்ராவில் நடனத்திற்கு மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளுக்கும் முக்கியத்துவம் தந்தார். பல்வேறு சமூகப் பணிகளிலும் கலா«க்ஷத்ரா ஈடுபட்டது.

ருக்மணி அருண்டேல் தமிழ் மொழி மேல் அளவு கடந்த பற்று வைத்திருந்தார். உ.வே.சா. கண்டெடுத்த ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒன்று திரட்டி ‘டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் லைப்ரரி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் தமிழ் மக்களுக்குக் கிடைத்திட வழி செய்தார்.

1939_ல் மரியா மாண்டிஸோரி வரவழைத்து குழந்தைகள் பள்ளிகளை இந்தியாவில் பல இடங்களிலும் துவக்கினார். 1945_ல் ருக்மணியின் கணவர் அருண்டேல் இறந்த பிறகும் கூட இவரது சமூகப் பணிகள் ஒளிவிட்டுப் பிரகாசித்தன. பரத நாட்டியக் கலைஞர்களுக்கான ஆடைகளைச் சீரமைத்த பெருமை ருக்மணி அருண்டேலுக்கு உண்டு. நடனத்துக்காகவே பாடுபட்ட ருக்மணி விலங்குகளின் நேசிப்பாளர். பெண் குலத்திற்கே ஒரு ரோல்மாடலாக விளங்கிய இவர். தனது 82வது வயதில் 1986_ல் மறைந்தார். பரதநாட்டியத்தின் ஒவ்வொரு அசைவும், அந்த மகா மேதையை உச்சரித்துக் கொண்டே இருக்கும்!.

Posted in Arundale, Biography, Biosketch, Faces, Females, Kumudam, Kumudham, Notable, Notes, people, Rukmani, Rukmani Arundale, Sarvanan, Series, She, Thiruvengimalai, Thiruvenkimalai, Women | 1 Comment »

Kumudhini: Notable Women series in Kumudham: Thiruvengimalai Sarvanan

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

குமுதம் ரிப்போர்ட்டர்
மறக்க முடியாத மங்கைகள்
குமுதினி
திருவேங்கிமலை சரவணன்

1934. அன்றைய ஆனந்த விகடனில் ‘குமுதினி’ என்ற நாவல் வெளிவந்தது. தாகூர் எழுதிய கதையின் தமிழாக்கம்தான் அது. அந்த நாவல் கொளுத்திப்போட்ட தீப்பொறி வெளிச்சத்தில் பெண் சமுதாயமே விழித்துக் கொண்டது. பெண்களுக்கு அவர்கள் பெறும் தாய்மையே ஒரு சிறைவிலங்காக மாறும் அவலத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண்ணின் கதை இது.

பெண்களைப் படிக்கவிடாமல், அடக்கி ஒடுக்கி வைத்திருந்த காலகட்டத்தில் இப்படியரு நாவல் வந்தது, பலரை உணர்வு கொண்டு எழச் செய்தது.

பெண்ணிய சிந்தனையாளர்கள் இந்நாவலை தமிழில் எழுதிய பெண்ணை வியந்து பார்த்தார்கள். தொடர்ந்து அவர் எழுதிய பல கதைகளிலும் கட்டுரைகளிலும் காந்தியமும் பெண்ணியமும் ஆட்சி செய்ததைக் கண்டு தேடிப்பிடித்துப் படித்தார்கள்.

அந்தப் பெண்ணின் பெயர் ‘குமுதினி’. இயற்பெயர் ரங்கநாயகி. நாவலில் வரும் கதாநாயகி ‘குமுதினி’யின் பெண்ணிய போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, தன் பெயரை ‘குமுதினி’ என்றே மாற்றிக் கொண்டவர்.

ரங்கநாயகியின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாச்சாரியார், லக்ஷ்மி தம்பதியினருக்கு மகளாக, 1905, நவம்பர் மாதம் இருபத்து மூன்றாம் தேதி பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள், மூன்று சகோதரர்கள். நல்ல வசதியான குடும்பம். படித்தவர்கள் நிறையப் பேர் அந்தக் குடும்பத்தில் இருந்தார்கள். ஆசாரமான குடும்பம்.

பெண்களைப் படிக்க வைக்காமல், வீட்டில் முழுநேர வேலைக்காரியாகவும், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் குழந்தை பெற்றுத்தரும் இயந்திரமாகவும் கருதப்பட்ட காலத்தில் பிறந்தவர் ரங்கநாயகி.

பெண்களை பள்ளிக்கு அனுப்புவது வழக்கமில்லாமல் இருந்ததால், ரங்கநாயகியின் தந்தை அவரை பள்ளிக்கு அனுப்பாமல் ஆசிரியர் ஒருவரை வரவழைத்து தமிழும், சமஸ்கிருதமும் கற்றுக் கொடுத்தார். பாடம் பயின்ற அத்தனை மாணவிகள் மத்தியில் ரங்க நாயகியின் அறிவாற்றலையும், கல்வி கற்பதில் உள்ள ஆர்வத்தையும் கண்டு ஆசிரியர் மட்டுமல்ல, பெற்றோரும் சந்தோஷப்பட்டார்கள். ஸ்ரீனிவாச்சாரியார் சட்டம் பயின்றவர். மாவட்ட நீதிபதியாகவும் இருந்தவர். அவருக்கு இலக்கியத்தில் இயல்பாக ஈடுபாடு உண்டு. தமிழ், சமஸ்கிருதம், இந்தி இந்த மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் என்பதால், தொடர்ந்து மகளுக்கு கல்வியிலும் இலக்கியத்திலும் பயிற்சி அளித்தார்.

அந்தக் காலத்தில் பெண்கள் சிறுமியாக இருக்கும்போதே பால்ய விவாகம் நடப்பது வழக்கம். அதிலிருந்து ரங்கநாயகியும் தப்பவில்லை. பத்து வயதிலேயே இவரது அத்தை மகன் ஸ்ரீனிவாசனுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருச்சி ஸ்ரீரங்கத்தின் பிரபலமான தாத்தாச்சாரியாரின் மூத்த மகன்தான் ஸ்ரீனிவாசன்.

ரங்க நாயகிக்கு பதின்மூன்று வயது இருக்கும்போது, ஸ்ரீனிவாசன் தன் மனைவியுடன் ஸ்ரீரங்கத்தில் குடியேறினார். ரங்கநாயகி தனது பதினைந்தாம் வயதில் கருவுற்றார்.

அந்தக் காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய புகழுடைய கல்லூரிகள் திருச்சியில் மட்டுமே இருந்தன. அதனால் கணவருக்கு வேண்டிய உறவினர்களின் ஏழை மாணவர்கள், இவர்களின் வீட்டில்தான் தங்கி, கல்லூரிகளுக்குப் போய் படித்து வந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் சமைத்துப் போடும் பெரிய பொறுப்பு ரங்கநாயகிக்கு வந்தது.

சமையல், வீட்டு வேலை என்று பம்பரமாகச் சுழன்ற அவருக்கு உட்கார்ந்து படிக்க நேரமில்லாமல் போய்விட்டது. நல்ல பொறுப்புள்ள மருமகள் என்ற பெயரை எடுத்திருந்த போதும், அதில் அவருக்கு மனநிறைவில்லை.

ஆண்களைப் போல் வேலைக்குப் போவது, வெளியில் சுற்றி வரும் சுதந்திரம் என்று எதுவுமே தன்னைப் போன்ற பெண்களுக்கு இல்லையே என்று வருந்தினார்.

ஆண்களுக்கு இருக்கும் திறமை நமக்கும் வரவேண்டும் என்றால் முதலில் கல்வியில் தேர்ச்சிபெற வேண்டும். அப்போதுதான் உலக அறிவை நம்மால் பெறமுடியும். அதனால் தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் இரவிலும் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் என்று விடாமல் படித்து வந்தார். அவரது அப்பா அவருக்கு வேண்டிய நூல்களை வாங்கி அனுப்பி வைத்தார். அவரது கணவரும் வேண்டிய நூல்களை திருச்சி கல்லூரிகளின் நூலகங்களில் இருந்து வரவழைத்து உதவினார். அது ரங்கநாயகிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

ரங்கநாயகி வீட்டு வேலைகள் செய்தபிறகு, அவருக்கு இன்னொரு பெரிய பொறுப்பு காத்துக் கொண்டிருந்தது. குழந்தைகளுக்கு தினசரி ஏதாவது ஒரு புத்தம் புதிய கதை சொல்ல வேண்டும். இதனால் சார்லஸ் டிக்கன்ஸ், ஸர்வால்டர் ஸ்காட் போன்றவர்களின் கதைகளைப் படித்து, நமது கலாசாரத்திற்குத் தகுந்தாற்போல் சொல்லி வந்தார். கதையைச் சொல்லிக் கொண்டு போகும்போதே ஒரு சுவாரசியமான கட்டத்தில் கதையைச் சட்டென்று நிறுத்தி விடுவார். ‘‘மீதிக் கதையை நாளைக்குச் சொல்கிறேன்’’ என்று கூறி விடுவார். குழந்தைகள் எவ்வளவு கெஞ்சினாலும் சொல்லமாட்டார். கதை கேட்பவர்கள் சின்னக் குழந்தையிலிருந்து 15 வயது வரை இருப்பார்கள். இந்த உத்திதான் பிற்காலத்தில் அவரது கதைகளை வாசகர்கள் தேடிப் பிடித்து படிக்க உதவியிருக்கிறது.

ரங்கநாயகிக்கு இருபத்திரண்டு வயதிருக்கும். ஒரு மகன், ஒரு மகள் என்று வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க் கொண்டிருந்தபோதுதான் அந்த சோகம் நடந்தது.

திடீரென்று அவரது இரண்டு காதுகளும் கேட்காமல் போய்விட்டன. மற்றவர்கள் பேசுவதையும் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் அவர் மற்றவர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டார். அதற்குப் பதிலாக, இது தனக்கு விடப்பட்ட சவாலாகக் கருதி படிப்பதில் முழு கவனத்தைக் கொண்டுவந்தார். அதன்மூலம் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முயன்றார்.

தனது மனைவியின் வேதனையைப் புரிந்து கொண்ட ஸ்ரீனிவாசன், அவருக்கு இலக்கியம் ஆறுதல் அளிக்கும் என்று நினைத்து அதில் ஈடுபட வைத்து உற்சாக மூட்டினார். கணவர் கொடுத்த உந்துதலால், அவர் பல கதைகளை எழுதினார். அவை பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்தன. ரங்கநாயகி பத்திரிகைகளில் எழுதுகிறார் என்று அவர்கள் குடும்பத்தார் தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் ஆயின. அந்தளவிற்கு புனைபெயர்களில் எழுதித் தள்ளினார்.

தான் எழுதிய கதைகள் மூலம் முதன்முதலாகத் தான் பெற்ற பணத்தைக் கொண்டு தன் கணவருக்கு மேஜை ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அதை அவர் தன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தினார். இன்றைக்கும் அந்த மேஜை அவர் நினைவாக அவர் வீட்டை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது.

சிறுகதை, நாவல், கட்டுரை, பயணக்கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று இலக்கியத்தின் பல தளங்களில் வேகமாக முன்னேறிய ரங்கநாயகி, விடுதலைப் போராட்டத்திலும் தன் பங்கை விட்டு வைக்கவில்லை.

அவருடைய மாமா, கே.வி. ரங்கசாமி ஐயங்கார் காங்கிரஸ்காரர். ராஜாஜி தலைமையில் ஒரு பெரும் தொண்டர் படை திருச்சியிலிருந்து புறப்பட்டது. ரங்கநாயகியும், அவரது கணவரும் அப்போதிருந்தே காந்தியின் சத்தியாகிரகத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். கதர் ஆடை மட்டும் உடுத்துவது என்று முடிவெடுத்தார். தனது கதை, கட்டுரைகளில் காந்தியத்தின் உயர்வை ஒலிக்கச் செய்தார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற ரங்கநாயகியின் இன்னொரு பலம் அவர் இந்தியையும் நன்கு கற்றிருந்தார். இந்தி மொழியில் வந்த தாகூரின் ‘யோக யோக்’ என்ற கதையைத்தான் ‘குமுதினி’யாக தமிழுக்குத் தந்து, கல்கி போன்றோரின் பெரும் பாராட்டைப் பெற்றார்.

காந்தியடிகளின் ஆசிரமத்திற்குச் சென்று சேவை செய்ய வேண்டும் என்று ரங்கநாயகி விரும்பினார். ஆனால் முடியவில்லை. அதே நேரம் மகாத்மாவுடன் தொடர்ந்து கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். காந்தியடிகள் ரங்க நாயகியைத் தன்னுடைய மகள் என்றே குறிப்பிட்டு கடிதம் எழுதுவார். ரங்கநாயகியின் திறமை, அறிவாற்றலைத் தெரிந்து கொண்ட மகாத்மாகாந்தி, ‘‘இந்தப் பெண்ணுக்கு மட்டும் காது கேட்கும் திறன் இருந்தால் மிகச் சிறப்பான தேச சேவை செய்வார்’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். அதற்காக நிறைய வைத்திய முறைகளை ரங்கநாயகிக்குக் கடிதம் மூலம் தெரிவித்து வந்தார் மகாத்மா.

காந்திஜி மரணமடைந்தபோது, டெல்லி சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று துடித்தார். அதற்குள் காந்திஜியின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதால், மருமகன் பார்த்தசாரதியுடன் வார்தாவில் உள்ள காந்தியின் ஆசிரமத்திற்குச் சென்றார். இங்குதான் பெண்களுக்குப் பல வழிகளில் முன்னேற்றம் தரும் அமைப்பான சேவா சங்கத்தினை ஆரம்பிக்க முடிவு செய்தார். பொன்விழாவைத் தாண்டி இச்சங்கம் திருச்சியில் இன்றும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

குடும்ப சூழ்நிலை காரணமாக ரங்கநாயகி சிறிது காலம் எழுதாமல் இருந்தார். மீண்டும் 70_களில் எழுத ஆரம்பிக்கும்போது, அவரிடம் காந்திய சிந்தனைகள் அதிகம் வெளிவரத் தொடங்கின. காந்தியின் தாக்கத்தால் ஓரிரு நாடகங்கள் எழுதி பெரும் பாராட்டைப் பெற்றார்.

1975ல் பேரன் உத்தமனுடன் மலேசியா, சிங்கப்பூர், பினாங்கு சென்று வந்தார். மகள் தேவகியுடன் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து சென்றார். வெளிநாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் அவர் தன்னுடைய கதர் மடிசார் புடவையை மாற்றிக் கொள்ளவில்லை. கட்டுப்பாடான தன் வாழ்க்கை முறையையும் விட்டுத் தரவில்லை.

உடல் நலம் குன்றிய நிலையில் கூட அவர் தொடர்ந்து எழுதினார். 1986 அக்டோபர் 16_ம் தேதி அவரது கை எழுதுவதை நிறுத்தியது. உடல் இயக்கத்தை நிறுத்தியது.

பெண்கள் கல்வி கற்பது ஒன்றே ஆண்களுக்கு நிகராக அவர்களைக் கொண்டு செல்லும் என்பதில் ரங்கநாயகி ஒரு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர். அதேசமயம், திருமணம் என்ற நெறியை மீற வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை, சொல்லவும் இல்லை. மாறாக, இந்நெறியை நன்கு பின்பற்றி அவர்கள் உண்மையான இல்லத்தரசிகளாக விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். கணவன் மனைவியர் இடையே ஒரு காசுக்கும் பெறாத மனபேதம் வரவே கூடாது என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் ‘இரு மனைவிகள்’, ‘பிடிவாதம்’ போன்ற கதைகள்.

தன்னை அடக்கிக் கொள்ளுதல், தன் மதிப்பை இழக்காமல் இருத்தல், தனது கடமைகளைச் சரியாகச் செய்தல், பொழுதைச் சிறிதும் வீணாக்காமல் இருத்தல், தன் வீட்டிற்கும் தன் தேசத்திற்கும் சாதகமாக உழைத்தல் இவைதான் குமுதினி தமிழ்ப் பெண் களுக்கு விட்டுச் சென்றிருக்கும் படிப்பினைகள்.

நன்றி: பெண்ணியத்தின் விடிவெள்ளி _ குமுதினி, டாக்டர். பிரேமா நந்தகுமார்
வானதி பதிப்பகம்.

Posted in Biosketch, Kumudhini, Kumuthini, Sarvanan, Series, Thiruvengimalai, Women | Leave a Comment »

“Sify gives wrong details on Rajni & Shankar with AR Rehman’s ‘Sivaji’ The Boss” – AVM

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்

சென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

ஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.

இதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.

ஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.

எங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.

ஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Abroad, Aingaran, Andhra, Andhra Pradesh, AP, ARR, Audio, AVM, AVM Sarvanan, Ayngaran, Aynkaran, Canada, Distributor, DVD, Europe, Iyngaran, Iynkaran, Karunamoorthy, Karunamurthy, Kerala, Kolywood, Market, NRI, Overseas, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rehman, Rumour, Sale, Sarvanan, Shankar, Shivaji, Shivaji the boss, Sify, Singapore, Sivaji, Sivaji Story, Sivaji the Boss, Sri lanka, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Pictures, Tamil Stars, Telugu, Tollywood, VCD, video | Leave a Comment »