தலித் வழக்கறிஞரின் வாயில் மலம் திணிப்பு – மதுரையில் கொடுமை
மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இந்த மகா பாதகச் செயலைச் செய்த பாமக செயலாளர் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளவனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சுரேஷ் தனியே சென்றபோது அவரை வழிமறித்த கிள்ளிவளவன் மற்றும் மதுரை பாமக மாவட்ட செயலாளர் கிட்டு ஆகியோர் கொண்ட கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளது. அத்தோடு விடாமல் அவரது வாயில் மலத்தையும் திணித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சுரேஷ் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளன் மற்றும் அவரது அடியாட்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் பாமக மாவட்ட செயலாளர் கிட்டுவை போலீசார் கைது செய்யவில்லை. இந் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி மதுரை வந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர் பாமக செயலாளரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.