Archive for the ‘Sale’ Category
Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007
ரேஷன் முறையில் புதிய அத்தியாயம்
டி. புருஷோத்தமன்
பொதுவிநியோக (ரேஷன்) திட்டத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் ரேஷனில் விநியோகிக்க வேண்டிய கோதுமை. அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதற்கும் ஒருபடி மேலே சென்று வெளிநாடுகளுக்கு கடத்தவும் துணிந்துவிட்டனர் கடத்தல்காரர்கள்.
ஏழை மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் பசியாற வேண்டும் என்பதற்காகவும் கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை ரேஷன் அட்டைகள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்து வருகிறது.
ஆனால் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு தொடங்குதல், வங்கிகளிலிருந்தும் நிதி நிறுவனங்களிலிருந்தும் வீட்டுக் கடன் பெறுதல், வாகனக் கடன் பெறுதல், தனி நபர் கடன் பெறுதல் போன்றவற்றுக்கும் ரேஷன் அட்டைகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.
எனவே அனைவரும் எப்பாடுபட்டாவது ரேஷன் அட்டைகளைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இத்தகைய ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் வசதி படைத்தவர்கள் அனைவரும் ரேஷன் கடைகள் பக்கம் செல்வதேயில்லை. அட்டை காலாவதியாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் வீட்டு வேலைக்காரர்களை எப்போதாவது ஓரிருமுறை ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள்.
ரேஷன் அட்டைகள் அனைத்துக்கும் வழங்கவேண்டிய பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அரசு வழங்கும். ஆனால் வசதிபடைத்தவர்கள் வாங்காத ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தைக்கு சென்றுவிடும். இதனால் அரசுக்கும் இழப்பு; ஏழைகளுக்கும் பயனில்லை.
இதைத்தடுக்க தில்லி மாநில அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் குறைந்தபட்ச வருவாய் பிரிவினரையும் அதிக வருமானம் ஈட்டுவோரையும் இனம் கண்டறியப்படும்.
குறைந்தபட்ச வருவாய் உடையவர்களுக்கு ரேஷன் பொருள்கள் அனைத்தும் வழங்கப்படும். ஆனால் அதிக வருவாய் ஈட்டுவோரின் ரேஷன் அட்டையில், “நீங்கள் அதிக வருவாய் பெறுபவராக இருப்பதால் ரேஷன் பொருள்களைப் பெற இயலாது’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதன்மூலம் ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்களை தங்குதடையின்றி விநியோகிக்க வழியேற்படும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை இன்னும் 10 அல்லது 15 நாளில் செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் 30 முதல் 40 சதவீதம் பேர் ரேஷன் பொருள்களைப் பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன்மூலம் அரசின் நிதிச்சுமை பெருமளவு குறையும். நிர்வாகச் சீர்கேடுகளும் ஓரளவு தவிர்க்கப்படும்.
அதிக வருமானம் பெறுவோர் ரேஷன் கடைகளுக்கே செல்வதில்லை. அவர்களுக்கு அரசு ஒதுக்கிவந்த அவசியப் பொருள்கள் அனைத்தும் கள்ளச்சந்தைக்குதான் சென்றன. எனவே புதிய திட்டம் ரேஷன் முறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
தில்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ரேஷன் முறையில் மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ரேஷன் முறையை சீர்திருத்தி அரசின் நிதிச்சுமையைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறேன். இத்திட்டத்தின் பலன்கள் அனைத்தும் ஏழை மக்களையும் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பாமரர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரேஷன் அட்டைகள் அனைத்துமே ரேஷன் பொருள்களை வாங்குவதற்காகத்தான் என்ற அடிப்படைக் கருத்தை மாற்றி ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் என்ற உயரிய நோக்கத்தை செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அதிக அளவில் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தடுக்கவும் ஏழை மக்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெறவும் வழிவகை செய்யப்படும் என்றும் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
மேற்குவங்கத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் நிகழும் குளறுபடிகளால் பெரும் கலவரமே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்கப்பட வேண்டிய அரிசி, தங்குதடையின்றி கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கடத்தப்படுகிறது. விலைகுறைவான ரேஷன் அரிசியை ஆலைகளில் பாலிஷ் செய்து உயர்ரக அரிசி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
லாரிகளிலும் இதர வாகனங்கள் மூலமும் கடத்தப்பட்டுவந்த ரேஷன் அரிசி தற்போது ஒருபடி மேலேசென்று புதுவையில் சரக்கு ரயில் மூலமும் கடத்தப்படும் நிலைக்கு முன்னேறிவிட்டது. புதுவையில் இருந்து இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை சரக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி 14 ஆயிரம் டன்கள் அளவுக்கு இருக்கும் என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.
ஏழை மக்களைச் சென்றடைய வேண்டிய அரிசி கள்ளச்சந்தைக்கு திசைமாறியது வேதனை அளிக்கிறது.
இந்நிலையில் ரேஷன் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மேற்கொண்டுள்ள நடவடிக்கை புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.
Posted in Accounts, Allocation, bank, Biometric, Bribery, Bribes, Cards, Census, Citizen, Color TVs, Colour TV, Corruption, dealers, Distribution, Distributors, DL, Driving License, Economy, Eigen, Elections, Expiry, Finance, Food, H, Head, Id, ID Cards, Identity, Immigration, Income, Infiltration, Iris, IT, kickbacks, Lease, Licenses, Mortgage, Multipurpose, Needy, NRI, Officials, Pan, Passport, PDS, Polls, Poor, Population, Protection, Ration, Rent, Rich, Sale, Scan, Sugar, tasildar, Tax, tehsildars, Television, Terrorism, Terrorists, TV, TVs, Validation, Validity, Verification, voters, Wealthy | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007
நந்திகிராமுக்கு நன்றி!
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில், ஏற்றுமதியை மட்டும் கருத்தில்கொண்டு தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குவது என்கிற மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் இருந்து வந்தன. வரிச்சலுகை, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று பல்வேறு சலுகைகளை இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிப்பது தேவைதானா என்கிற கேள்வி பரவலாகவே காணப்பட்டது.
ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த அத்தனை தொழிற்சாலைகளும் ஒரே இடத்தில் நிறுவப்படுகிற ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். அதாவது, ஜவுளித்துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், பஞ்சில் தொடங்கி ரெடிமேட் ஆடைகள் வரை ஜவுளி சம்பந்தப்பட்ட எல்லா தொழிற்சாலைகளும் இருக்கும். இதனால், மதிப்புக் கூட்டுவரியிலிருந்து விலக்குக் கிடைக்கும். வரி பளு மற்றும் போக்குவரத்துச் செலவு இல்லாமல் இருப்பதால் தயாரிக்கப்படும் பொருள்களின் விலை குறைவாக இருக்கும்.
சீனாவில் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேறுவிதமாக உருவாக்கப்பட்டன. மொத்த நிலப்பரப்பில் நாற்பது சதவிகிதம் தொழிற்சாலைகளும், இருபது சதவிகிதம் சிறப்புப் பொருளாதார மண்டல ஊழியர்களின் வசதிக்காக அமைந்த வணிக வளாகங்களும் அமைவது பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மீதமுள்ள நாற்பது சதவிகித இடத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டி விற்பனை செய்யும் திட்டம்தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சந்தேகப்பட வைத்துவிட்டது.
தனிநபரின் விளைநிலங்களையும், பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த இடங்களையும் குறைந்தவிலைக்கு அரசு கையகப்படுத்தி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்றுமதியின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்களே என்பதுகூட வருத்தமான விஷயமல்ல. அப்பாவி மக்களின் விளைநிலங்களைக் குறைந்தவிலைக்கு வாங்கி, அடுக்குமாடி வீடுகள் கட்டி அதில் கொள்ளை லாபம் அடிக்க விரும்புகிறார்களே என்பதுதான் எதிர்ப்புக்கான அடிப்படைக் காரணம்.
மேற்கு வங்கம் நந்திகிராமில் நடந்த கலவரமும் துப்பாக்கிச் சூடும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் விளைவாக, ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் இப்போது சில பரிந்துரைகளையும் செய்திருக்கின்றனர்.
அதன்படி, முன்பு திட்டமிட்டதுபோல வளர்ச்சித்துறை இயக்குநரின் முழுப்பொறுப்பில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கும் என்றாலும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பொருத்தவரை மாநில அரசின் தொழிலாளர் துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டும்தான் எதையும் செய்ய முடியும்.
நாடாளுமன்றக் கமிட்டியின் இன்னொரு பரிந்துரை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,254 சிறுதொழில்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் எழுபது அரசு நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளால் மூடிக் கிடக்கின்றன. செயல்படாத பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் இடங்களையும், தொழிற்பேட்டைகளையும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலனை செய்ய விழைகிறது நாடாளுமன்றக் கமிட்டியின் பரிந்துரை.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இடமும் கிடைத்துவிட்டது. தொழிலாளர் நலச் சட்டங்களில் எந்தவித மாற்றங்களையும் செய்ய வேண்டாம். நந்திகிராமில் தங்களது உரிமைக்காகப் போராடியதன் விளைவுதான் இப்போது இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு முடிவைத் தந்திருக்கிறது. நிச்சயமாக, நன்றி நந்திகிராமத்து ஏழை விவசாயிகளுக்குத்தான்!
————————————————————————————————————————————-
முரண்பாடு தேவையில்லை
சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, காங்கிரஸ் கட்சியிலேயே பலர் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தின் தற்போதைய முதல்வரான திகம்பர் காமத், முந்தைய பிரதாப் சிங் ரானே தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதி அளித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கலைப்பது என்று முடிவெடுத்திருப்பது அதைத் தெளிவுபடுத்துகிறது.
கோவா மாநிலத்தில் 15 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் ஒத்துழைப்புடன் மூன்று மண்டலங்களில் பணிகளும் தொடங்கிவிட்டன. சுமார் 500 கோடி ரூபாய் மூலதனம் வர இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் பெறப்படவில்லை என்றாலும் இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.
ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம், மருந்து தயாரிப்புக்காக உருவாக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கான அதிநவீன இயந்திரங்களையும் இறக்குமதி செய்து விட்டோம் என்று பரிதாபக் குரல் கொடுக்கின்றன. சட்டப்படி, அனுமதி பெற்ற மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் நிராகரிக்கும் உரிமை மாநில அரசுக்குக் கிடையாது என்கிறார்கள் இந்த உரிமையாளர்கள்.
மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கோவா என்று பல மாநிலங்களில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் பொதுமக்களே போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பெரிய அளவில் தனியாரிடம் இடங்களை வாங்கி இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது என்பது இயலாத விஷயம். காரணம், ஒரே இடத்தில் 1000 ஏக்கர் இடம் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசின் தலையீடு நிச்சயம் தேவைப்படுகிறது.
அதேநேரத்தில், தனியார் லாபம் சம்பாதிக்க ஏழை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை ஏன் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல, இதற்கு ஏன் நிலத்தைக் குறைந்த விலைக்கு அரசு கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இல்லாமல், சிறப்புச் சலுகைகள் பெறாமல், இந்தத் தயாரிப்பாளர்கள் ஏன் உலகச் சந்தையில் போட்டிபோட முடியாது என்கிற கேள்விக்கும் அவர்கள் தரப்பில் சரியான பதில் தரப்படுவதில்லை. சீனாவுடன் போட்டி போட வேண்டும் என்று பயமுறுத்துகிறார்களே தவிர அதற்குச் சரியான காரணங்கள் தருவதில்லை.
போதிய மகசூல் தராத விளைநிலங்களும், தண்ணீர் இல்லாத விவசாய நிலங்களும் தொழில் மண்டலங்களாக மாறுவது தவறு என்று சொல்லிவிட முடியாது. நமது உணவு உற்பத்தி பாதிக்கப்படாத வரையில், தன்னிறைவுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் இந்த விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்கள் தொழில் மண்டலங்களாகவோ, அறுபதுகளில் செய்ததுபோலத் தொழிற்பேட்டைகளாகவோ மாற்றப்படுவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தொழில் மண்டலங்கள் தனியாருடையதாக இல்லாமல், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்கும், அந்த நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அங்கே நிறுவப்படும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை.
தெளிவான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலைமை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை தொடர்வது நல்லதல்ல. ஆளும் கூட்டணிக்குள்ளும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காணப்படும் முரண்பாடும், தெளிவின்மையும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்துவதுதான் மிச்சம். தொழில் வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடிப்படை இந்தியனின் வயிற்றில் அடிப்பதாக அமைந்தால் அதனால் என்ன பயன்?
சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, தேவை தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் மனோபாவமும். அரசிடம் இவை காணப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் கோவாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பம்!
Posted in Agriculture, Assets, Bengal, China, Clothes, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Concessions, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Economy, Employment, Exports, Farmer, Farmers, Farming, Garments, Goa, HR, Industry, IT, Jobs, Knit, Knitwear, Land, maharashtra, Mamta, Mamtha, Manufacturing, Nandhigram, Nandigram, Nanthigram, Op-Ed, peasant, peasants, Property, Resources, Sale, Sector, SEZ, States, Tariffs, Tax, Textiles, VAT, WB, workers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007
கலை: பிரெட்டின் விலை ரூ.500!
இட்லி வகையாக இருக்க விரும்புகிறீர்களா? பிரெட் துண்டு வகையாக இருக்க விரும்புகிறீர்களா?
மீந்துபோன இட்லியை உதிர்த்து அம்புஜம் பாட்டி உப்புமா கிண்டுவது -இட்லி வகை!
மீந்துபோன பிரெட் துண்டுகளை உதிர்த்து சென்னை ஆழ்வார்பேட்டை சிந்துசுரேஷ் பல்வேறு அலங்காரப் பொருட்கள் செய்வது -பிரெட் வகை!
மேற்சொன்ன பிரெட் வகையைச் சேர்ந்த சிந்துசுரேஷ் பிரெட்டில் மட்டுமல்ல காகிதம் உட்பட பல பொருட்கள் பயன்படுத்தி ஏ டு இசட் கலைப்பொருட்களைச் செய்யக்கூடியவர். செராமிக் ஒர்க், கிளாஸ் பெயின்டிங், மட்பாண்டங்களில் அலங்காரம், எம்ப்ராய்டரி என எல்லாவற்றிலும் கலைத்தேர்ந்தவர். தமக்குத் தெரிந்த கலையைப் பிறருக்குச் சொல்லியும் கொடுக்கக் கூடியவர். வீட்டையே தம் கைவண்ணத்தில் கலைக்கோயிலாக மாற்றியுள்ள அவரின் கலைப்பேச்சு:
“”பி.எஸ்ஸி மேக்ஸ் படித்து முடித்துள்ளேன். எனக்கு ஏனோ படித்து முடித்து வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலிருந்தே இருந்தது இல்லை. பெற்றோர்கள் படிக்க வைத்தார்கள் என்பதற்காகப் படித்தேன். ஆனால், எனக்கு ஓவியம் வரைவது என்றால் சிறு வயதிலிருந்தே கொள்ளை ப்ரியம். சிறிது நேரம் கிடைத்தால்கூட ஏதாவது படங்கள் வரைந்துகொண்டு இருப்பேன். இது திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்தது. என்னுடைய கணவர் பிசினஸ்மேன். அவர் இல்லாத நேரங்களில் வரைவதோடு புதியபுதிய பொருட்களைச் செய்து பார்க்கத் தொடங்கினேன். எளிதாக வந்தது. அப்படி நான் செய்த பல பொருட்கள்தான் இப்போது எனது வீட்டை அலங்கரிக்கிறது.
கலைப்பொருட்கள் செய்வதற்கு நான் எங்கும் சென்று பிரத்யேகப் பயிற்சி எதுவும் பெறவில்லை. துணிகளில் செய்யக்கூடிய பெயின்டிங் மட்டும் ஒருவரிடம் கற்றுக்கொண்டேன். மற்றபடி எந்தவகையான கலைப்பொருட்கள் செய்யவும் நான் பயிற்சி பெறவில்லை. ஒரு பொருளைப் பார்த்தே அந்த வகையான முறையில் வெவ்வேறு வடிவங்களில் புதுப்புதுப்பொருட்களைச் செய்யக்கூடிய திறன் எனக்கு இயல்பாக இருக்கிறது. இதற்காக நான் செய்வது ஒன்றே ஒன்றுதான்.
கைவினைப்பொருட்கள் கண்காட்சி எங்கு நடந்தாலும் சென்று பார்ப்பேன். அங்கு என்னென்ன பொருட்கள் வந்திருக்கின்றன. அதன் புதிய வேலைப்பாடுகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு அப்படியே நான் செய்துவிடுவேன். இப்படித்தான் எல்லாவகையான கலைப்பொருட்களையும் செய்யத் தொடங்கினேன். நான் கற்ற கலையை கடந்த பத்துவருடமாக பலருக்குச் சொல்லியும் தருகிறேன்.
கிளாஸ் பெயின்டிங், ரிவர்ஸ் கிளாஸ் பெயின்டிங், மதுபானி கிளாஸ் பெயின்டிங், செராமிக் வேலைப்பாடுகள், போன்ஸôய் செயற்கை மரங்கள் தயாரிப்பு போன்றவை சொல்லிக் கொடுத்தாலும் கிளாஸ் பெயின்டிங் கற்றுக்கொள்வதற்குதான் அதிகமானோர் வருகிறார்கள். இதோடு சீனா நாட்டைச் சேர்ந்த மேக்ரேம் வகையிலான அலங்காரப் பொருட்களையும் செய்கிறேன். கற்றும் கொடுக்கிறேன்.
மேக்ரேம் வகையான பொருட்கள் செய்வதற்கு அதிகச் செலவினங்கள் ஆகாது. சணல், நைலான், என எதில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆரம்பத்தில் அரைஞாண்கயிறு கொண்டுதான் செய்துகொண்டிருந்தேன். விதவிதமான பைகள், பாத்திரங்களுக்குக் கீழே வைக்கக்கூடிய மேட்கள், விநாயகர் போன்ற கடவுளின் உருவங்கள் என எதையும் இதில் செய்யலாம். மிகவும் அழகாக இருக்கும். இந்தவகையான கலைப்பொருட்களுக்கு அதிக வரவேற்பு இப்போது மக்கள் மத்தியில் இருக்கிறது.
ஒரு கலைப்பொருளை செய்வதற்குக் கற்றுக் கொள்ளக்கூடிய காலகட்டம் அவரவர்களின் திறமையைப் பொறுத்திருக்கிறது. சிலர் மூன்று வகுப்புகளிலேயே ஒரு பொருளைக் கற்றுகொடுத்துவிடுகிறார்கள். நான் ஐந்து வகுப்பு முதல் எட்டு வகுப்புவரை கூட எடுக்கிறேன். நான் ஒரு கலைப்பொருளைச் செய்வதற்குக் கற்றுகொடுத்தால், கற்றவர்கள் அவர்களே பல புதிய பொருட்களைச் செய்யக்கூடிய திறனைப் பெறுவார்கள். அதைப்போல என்னிடம் பயிற்சி பெற்ற பிறகு எந்தப் பொருளையும் அவர்கள் தூக்கிப் போடமாட்டார்கள். பழைய காகிதங்களாக இருந்தால் அதை ஒரு கலைப்பொருளாகப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். என் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களில் பெரும்பாலானவை பழைய பொருட்களிலிலிருந்து செய்யப்பட்டவை. பார்ப்பவர்களுக்கு அவை ஒருபோதும் தெரியவே தெரியாது. பழைய காகிதங்கங்களை எல்லாம் சேர்த்து பூக்கூடை ஒன்றும், பேனா, பென்சில் போட்டு வைக்கிற ஸ்டாண்ட் ஒன்றும் செய்துள்ளேன். இதைப்போலவே சாப்பிடுகிற பிரெட்டைக் கொண்டும் ஒரு புதுவித ஒர்க் செய்கிறேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இரண்டு மூன்று நாட்களான பிரெட்டுகளைத் தூளாக்கிக் கொள்ளவேண்டும். பிரெட் என்றால் எறும்பு வரும் இல்லையோ? எறும்போ பூச்சிகளோ வராமல் இருக்க சிங் ஆக்ûஸடு ஒரு சொட்டு மற்றும் ஃபெவிகால் கலந்து சாப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். இதன்பிறகு நமக்கு தேவையான உருவங்களில் எதைவேண்டுமானாலும் வடித்துக்கொள்ளலாம். இதன் பிறகு காய வைத்து பெயின்டு மற்றும் வார்னிஷ் அடித்துவைத்துக்கொள்ளலாம். இது எத்தனை ஆண்டுகளானாலும் கெடாமல் இருக்கும். செய்வதும் சுலபம். பார்த்தவுடனேயே எல்லோரையும் கவரும். 10 ரூபாய்க்கு பிரெட் வாங்கி 500 ரூபாய் வரையிலான பொருட்கள் செய்து விற்கலாம்!
என்னிடம் எல்லாவகையான கலைகளையும் கற்றுக் கொள்வதற்கு 2 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறேன். ஒரு பொருளை மற்றும் கற்றுக்கொள்வதற்கு 450 ரூபாய் வரை வசூலிக்கிறேன். 450 ரூபாய் கட்டிப் பயிற்சி பெறுகிறவர்கள் பயிற்சி பெறுவதற்கான பொருட்களையும் அவர்களே வாங்கி வரவேண்டும்.
என்னிடம் பயிற்சிபெற்ற பலபேர் அவர்களும் பலருக்குப் பயிற்சி அளித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இந்தப் பயிற்சியைப் பெற்றவர்கள் சாதாரணமாகவே அறுபதாயிரம் வரை சம்பாதிக்கலாம்.” என்கிறார் சிந்துசுரேஷ்.
-சாப்பிடுவது ஒருவகை. சாப்பிடுகிற பொருட்களைக்கொண்டே புதுப்புது பொருட்களைச் செய்து சாதிப்பது புதுவகை!
Posted in Arts, Bread, Ceramic, chemicals, Crafts, Decorations, Earn, Exhibition, Exports, Gift, Handicrafts, job, Learn, Opportunity, Paintings, profile, Sale, Sculptures, Sindhu, Sindhu suresh, Sindhusuresh, Sindu, Skill, Suresh, Teach | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 10, 2007
உயரும் நில மதிப்பு
தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அதிகம் வருவதால் நன்மைகள் அதிகம் உள்ளன. நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. இருப்பினும் சில இடையூறுகளும் உடன் வருகின்றன.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் அப் பகுதியில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிடுவது (அல்லது உயர்த்தப்படுகிறது?) இயல்பான நிகழ்வாகிவிட்டது. சாதாரண தொழிற்சாலை வந்தாலும் நிலத்தின் மதிப்பு உயரும்தான். ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறை என்றால் நிலத்தின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து விடுகிறது.
சென்னை, கோவை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் திடீரென நிலத்தின் விலை பல கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதற்கு இதுதான் முக்கியக் காரணம்.
இதனால், சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் காலிமனைகளை வளைத்துப்போடுவது அல்லது குறைந்த விலைக்கு மிரட்டி வாங்குவது, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகியன அதிகரித்துள்ளன. அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான இடங்களை விற்கும் நிலையை உருவாக்கி, அதை கூட்டணி அமைத்து ஏலத்தில் எடுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
சென்னை நகரில் இதுபோன்ற ரியல் எஸ்டேட் முறைகேடுகள் பற்றிய புகார்கள் ஆயிரத்துக்கும் மேலாக உள்ளன. தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதேபோன்ற முறைகேடுகள் வேகமாக நடைபெற்று வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
இதற்குப் பின்புலமாகவும், பலமான ஆதரவாகவும் இருப்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்தான். இப்படி வாங்கப்படும் மனை, நிலம் ஆகியவற்றின் “உயர்த்தப்பட்ட’ மதிப்பு இவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் இத்தகைய ரியல் எஸ்டேட் முறைகேடுகளை விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவுகள் உள்ளன. என்றாலும், யாரும் தண்டனை பெறவில்லை. இந்த முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படவில்லை.
இதில் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொண்டால் முறைகேடுகளைத் தடுக்கவும், நிலத்தின் போலியான உயர் மதிப்பீட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும். இல்லையெனில், நகரின் மையப்பகுதிகளில் வசிக்கும் “எதிர்ப்பு சக்தி’ இல்லாத சாதாரண மக்கள் உயிருக்குப் பயந்து தங்களுக்குக் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாக மாறும்.
தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் நினைத்தால் இத்தகைய நிலமதிப்பு உயர்வைத் தடுக்க முடியும். இந்நிறுவனங்களைக் காட்டிலும், அதில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மனது வைத்தால் அந்தந்த நகரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு உயர்வதைத் தடுக்க முடியும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். இவர்களது செலவிடும் திறன் சாதாரண மக்களைக் காட்டிலும் மிக அதிகம்.
ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வாடகை கொடுப்பது அவருக்குச் சிரமமில்லை. ஆனால் அவரை அறியாமலேயே அப்பகுதியின் வாடகையை உயர்த்துகிறார். அவரால் குறைந்தபட்ச தூரத்துக்கு ஆட்டோவில் செல்ல ரூ.30-ஐ வீசிவிட முடியும். அப்பகுதியில் ஆட்டோ கட்டணம் உயர அவர் காரணமாகிறார். அதைவிட மோசமாக. அவரால் ரூ.10 லட்சம் பெறுமானமுள்ள ஒரு குடியிருப்பை ரூ.15 லட்சத்துக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாங்க முடியும். ஆனால், சம்பளத்தைத் தவிர “வேறு வருமானம்’ எதையும் பார்க்க முடியாத நடுத்தர மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் விலை கூடுதல் என்றாலும் அது பெரும் சுமை. சொந்த வீடு எனும் கனவை மண்ணுக்குள் அழுத்துகிற சுமை.
Posted in Apartments, Appreciation, Asset, Bangalore, Bid, Biotech, Boom, Bust, Chennai, Compensation, Construction, CRR, Deflation, Delhi, Discrepancy, Economy, Employment, Estate, Exports, Finance, Flats, Hyderabad, India, Industry, Inflation, InfoTech, Interest, Investment, IT, Jobs, Labor, Land, Madras, Manufacturing, Plots, Poor, Property, Real Estate, Recession, REIT, Rich, Salary, Sale, SEZ, Stagflation, Telecom, workers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007
‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்
சென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.
ஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.
இதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.
ஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.
எங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.
ஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Posted in Abroad, Aingaran, Andhra, Andhra Pradesh, AP, ARR, Audio, AVM, AVM Sarvanan, Ayngaran, Aynkaran, Canada, Distributor, DVD, Europe, Iyngaran, Iynkaran, Karunamoorthy, Karunamurthy, Kerala, Kolywood, Market, NRI, Overseas, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rehman, Rumour, Sale, Sarvanan, Shankar, Shivaji, Shivaji the boss, Sify, Singapore, Sivaji, Sivaji Story, Sivaji the Boss, Sri lanka, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Pictures, Tamil Stars, Telugu, Tollywood, VCD, video | Leave a Comment »