“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது; ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்”
கருணாநிதி முன்னிலையில் ரஜினிகாந்த் பேச்சு
சென்னை, ஜன.12-
“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.
வெள்ளி விழா
ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகிய இருவரும் தயாரித்த `சிவாஜி’ படம் 175 நாட்களை தாண்டி ஓடி வெள்ளி விழா கண்டது. இதையொட்டி அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசளிக்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு `சிவாஜி’ படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.
ரஜினிகாந்த்
விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
“சிவாஜி படத்தில், சில அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பெருமைக்குரிய படத்தில் நான் இருந்தது, பாக்கியம். ஏவி.எம்.சரவணன், ஷங்கர், படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பணம்
பணம் இருந்தால், உன்னையே உனக்கு தெரியாது. பணம் இல்லையென்றால் யாருக்கும் நீ தெரியமாட்டாய் என்று சொல்வார்கள். அந்த பணம் இருந்தபோதும், அது தலைக்கு போகாமல் தொழில்தான் முக்கியம் என்று அப்பா ஸ்தாபித்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக சரவணன் படும் சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தலைவணங்குகிறேன்.
அவருடைய மிகப்பெரிய சொத்து, அவருடைய மகன் குகன். தாத்தா மாதிரி நீங்களும் பெரிய பட அதிபர் ஆக, என் மனமார்ந்த வாழ்த்துகள்.
கே.பாலசந்தர்
`சிவாஜி’ படம் பார்த்துவிட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் எப்படி இப்படி எல்லாம் நடித்தாய்? என்று கேட்டபோது, அவர்கள், மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களில் நடித்தபோது, உங்களிடம் எப்படி நான் கேள்வி கேட்காமல் நடித்தேனோ, அதேபோல்தான் ஷங்கர் என்ன சொன்னாரோ, அதைத்தான் செய்தேன் என்று சொன்னேன்.
பாலசந்தர் சாருக்கு பின்னால், நான் புளோரில் ஒரு டைரக்டரை பார்த்தேன் என்றால், அது ஷங்கர்தான். இப்படி சொல்வதால் நான் மற்ற டைரக்டர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தம் அல்ல. ஷங்கர், ஏகலைவன் மாதிரி. அது, பூர்வஜென்ம புண்ணியம்.
கபிலமுனி
நான் செய்யும் `சாங்கியோகா’வை கண்டுபிடித்த கபிலமுனி, “ஆசைப்படு…ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை…அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை சரியாக செயல்படுத்து…அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி… அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு” என்று கூறியிருக்கிறார்.
சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக்கொண்டால், உடம்பு கெட்டுப்போய்விடும். சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால், வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.
ஆசைப்படுவதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா? என்று முதலில் பார்க்கணும். சைக்கிள் வாங்குவதற்கே கஷ்டப்படுகிற ஒருவன், கார் வாங்க ஆசைப்பட்டால் எப்படி? ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்றால், சரியான ஆட்களை சேர்த்துக்கொள். அதன்பிறகு ஆகாயமே கீழே விழுந்தாலும், `காம்ப்ரமைஸ்’ ஆகாதே. நினைத்ததை செயல்படுத்திவிடு… இதைத்தான் ஷங்கர் செய்துகொண்டிருக்கிறார்.
`ரோபோ’
அடுத்து, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யப்போகிற படம், `ரோபோ.’ மிகப்பெரிய படம்.
`ரோபோ’ படம், கடவுள் ஆசீர்வாதத்தில், சிவாஜி அளவுக்கு வெற்றிபெறவேண்டும்.
அடுத்து கே.பாலசந்தர் சாருக்காக ஒரு படம் நடிக்கிறேன். அதையடுத்து சவுந்தர்யா டைரக்ஷனில், `சுல்தான் தி வாரியர்’ படத்தில் நடிக்கிறேன். அதையடுத்து, `ரோபோ’ வரும்.
சாய் பாபா
சாய்பாபாவை நேரில் பார்க்க, நான் நான்கு முறை முயற்சி செய்தேன். பெங்களூரில் இரண்டு தடவை. புட்டபர்த்தியில் ஒரு தடவை. இங்கே சென்னையில் ஒரு தடவை. இங்கே வந்தபோது, அவரை நான் சந்தித்தேன். வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுங்க, வருவார் என்று சொன்னார்கள். நானும் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டேன். அவர், பெருந்தலைவர் காமராஜர் `டயலாக்’க்கை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
கடவுளுக்கு பிடிக்கும்
ஆனால், அதே சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்தார். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும்.
வேண்டுகோள்
இந்த சமயத்தில், கலைஞர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கலையுலக விழாவாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, உங்களை தவிர யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரும் கிடையாது. நீங்கதான் கலந்துகொள்ள வேண்டும்.
அதற்காக, உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
ஷங்கர்
டைரக்டர் ஷங்கர் பேசும்போது, “ரோபோ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தமிழ் பட பட்ஜெட் தாங்காது என்பதால்தான், இந்தியில் படமாக்க முயன்றேன். சில காரணங்களால், அந்த திட்டம் நின்றுபோனது. `சிவாஜி’ படத்தின் வெற்றியும், வசூலும் `ரோபோ’ படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தது. ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய சக்திகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால், ரோபோவை மிக சிறந்த படமாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.
வைரமுத்து
கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ஏவி.எம். நிறுவனத்தின் மகுடம், `சிவாஜி’ படம். நான் ரஜினியை பற்றி ஒரு விஷயம் பேசவேண்டும். ஒரு மனிதன் பேசுவதில்லை. ஆனால் பேசப்படுகிறார். அவர் விளம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால், அவர் இல்லாமல் விளம்பரம் இல்லை. அவருக்கு அரசியல் இல்லை. ஆனால், அவரை சுற்றி அரசியல் இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டுக்கு ரஜினி கொடுத்த உற்சாகம் கொஞ்சம் அல்ல. அவர் நினைத்தால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விதம்விதமாக செய்திகள் சொல்லலாம்” என்றார்.
நடிகை ஸ்ரேயா பேசும்போது, “சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். மீண்டும் அவருடன் நான் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.
ஏவி.எம்.சரவணன்
நடிகர்கள் சுமன், விவேக், வி.எம்.சி.அனீபா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பேச்சாளர் ராஜா, கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.
ஏவி.எம்.சரவணன் வரவேற்று பேசினார். படத்தின் இணை தயாரிப்பாளரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் நன்றி கூறினார்.