குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மூன்றாவது அணி வேட்பாளர் ரஷீத் மசூத்
மும்பை, ஜூலை 17: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மூன்றாவது அணி சார்பில் போட்டியிடுகிறார் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரஷீத் மசூத்.
இத்தகவலை, சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலர் அமர் சிங் மும்பையில் திங்கள்கிழமை நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மசூத் பல சிறப்புகளைப் பெற்றுள்ளவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மக்களவைத் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வென்றுள்ளார்.
மத்தியில் வி.பி. சிங்கின் ஜனதா தள அரசில் அமைச்சராக இருந்துள்ளார் மசூத்.
மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மசூத் வேட்பாளராக தேர்வு பெற்றுள்ளார். இப்பதவிக்கு மேலும் பலரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. அவர்களைக் குறித்து இப்போது குறிப்பிடுவது சரியல்ல.
ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் முக்கியத் தலைவர்களான ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் முன்னிலையில் மசூத் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார்.
எமது கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி காங்கிரஸ், பாஜக கூட்டணியினரிடம் பேசவில்லை. அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கவும் இல்லை.
அதேவேளையில் இடதுசாரிகளிடம் மசூத் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்துள்ளோம்.
இடதுசாரிகளுடன் எப்போதுமே எங்களுக்கு தொடர்பு உண்டு. இருப்பினும் அரசியல் நிர்பந்தம் காரணமாக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை இடதுசாரிகள் ஆதரிப்பர் என்பது தெரிந்த விஷயம்தான் என்றார் அமர் சிங்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 10-ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர் பெயரை அறிவித்த முதல் அரசியல் அணி என்ற பெருமை ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்துள்ளது.