மத்தியப் பிரதேச சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு – முதல்வர் மீது ஊழல் புகார்
போபால், நவ. 28: மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüகான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க் கட்சிகள் மூன்றாவது நாளாக மேற்கொண்ட அமளி காரணமாக அவை காலவரையின்றி புதன்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு முதல்வருக்கு எதிராக அவையின் மையப் பகுதியில் திரண்டனர். தனது மனைவி சாதனா சிங்கின் பெயரில் ரூ. 2 கோடி மதிப்புமிக்க 4 டம்பர் ரக லாரிகளை வாங்கியுள்ளார் முதல்வர்.
பதவியை தவறாகப் பயன்படுத்தியே இந்த ரூ. 2 கோடியை அவர் சம்பாதித்துள்ளார். எனவே முதல்வர் செüகான் தலைமையிலான பாஜக அரசு ராஜிநாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், டம்பர் லாரி படங்களை கையில் ஏந்தியபடி திரண்டுவந்தனர்.
அமைதி காக்கும்படி அவைத் தலைவர் ஈஸ்வர் தாஸ் ரொகானி கோரிக்கை விடுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசியவில்லை. பதிலடியாக ஆளும் கட்சி உறுப்பினர்களும் கூச்சல் குழப்பத்தில் இறங்கினர்.
கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் ரூ. 2144.41 கோடிக்கான துணை பட்ஜெட் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. மூன்று மசோதாக்கள் மீது விவாதம் நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் 5 நிமிடத்தில் கேள்வி நேரம் முடிந்தது.
பின்னர், அவையை சுமுகமாக நடத்த எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்ற தீர்மானத்தை அவைத் தலைவர் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆட்சேபம் எழுந்தபோதும் குரல் வாக்கெடுப்பில் அவையில் அது நிறைவேறியது.
இதையடுத்து அவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் ரொகானி அறிவித்தார்.
பேரவையின் குளிர் காலக் கூட்டத் தொடர் நவம்பர் 26-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 7 வரை கூட்டத்தை நடத்துவது என்று ஏற்கெனவே முடிவாகி உள்ளது.
இதனிடையே, முதல்வர் செüகான் பேரவைக்கு வெளியே மகாத்மா காந்தி சிலையின் அருகே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தன் மீதான புகார்கள் ஆதாரமற்றது என்றார். துணிவிருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரலாமே. விவாதம் நடத்துவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்கின்றன என்றார்.
காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி கழுவிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்: இதனிடையே, ஊழலில் சிக்கியுள்ள முதல்வர், காந்தி சிலை அருகே செல்லத் தகுதியில்லை. சிலை அருகே அவர் சென்றதால் அதன் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று கூறி காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் எதிர்க் கட்சித் தலைவர் ஜமுனா தேவி தலைமையில் சிலையை கழுவி விட்டனர்.
பின்னர் ஆளுநர் பல்ராம் ஜாக்கரைச் சந்தித்து முதல்வர் மீதான ஊழல் புகார் தொடர்பாக மனு கொடுத்தனர்.