மறக்கமுடியா அரசியல் அறிஞர்!
விக்கிரமன்
பேரறிஞர், மூதறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் பெயர் சொன்னால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது “பிளாட்டோவின் அரசியல்’ என்ற அவரது நூலாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த நூலை இன்று படிப்பவர்களும் அவரது தெளிந்த தமிழ் நடையைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.
தமிழில் அரசியல் நூல்களை எழுதி வெளியிட்ட முன்னோடி சர்மா. “கார்ல் மார்க்ûஸ’ அறிமுகப்படுத்தினார். “புதிய சீனாவைப்’ புரிய வைத்தார். லெனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கினார். ரஷியப் புரட்சியை எடுத்துக் கூறினார். கிரீஸ் வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டினார்.
வெ. சாமிநாத சர்மா அப்போதைய “வட ஆர்க்காடு’ மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில் 1895-ல் செப்டம்பர் 17-ல் பிறந்தார். தந்தை முனுசாமி அய்யர். தாயார் பார்வதி அம்மாள். செங்கல்பட்டிலுள்ள நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற சர்மா ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். இளம் வயதிலேயே தேசபக்தி, எழுத்தார்வம் மிகுந்த சர்மா தமது பதினேழாம் வயதில் – 1914 ஜூலையில் “கௌரிமணி’ எனும் சமூக நாவலை எழுதி வெளியிட்டார். அப்போது விலை மூன்றணா!
தேசிய இயக்கம் கொழுந்துவிடத் தொடங்கிய காலம். சர்மா “பாணபுரத்து வீரன்’ எனும் நாடகத்தை எழுதினார். டி.கே.எஸ். சகோதரர்கள் “தேசபக்தி’ எனும் பெயரில் அதை நாடகமாக நடத்தினார்கள். அந்த நாடகம் அக்கால மாணவரிடையே தேசபக்தியை எவ்வாறு வளர்த்தது என்பதை டி.கே. சண்முகம் நமது “நாடக வாழ்க்கை’ நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.
ம.பொ. சிவஞானம் தமது “விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’ எனும் நூலில் பாராட்டியுள்ளார். தமிழக அரசு முன்னாள் செயலர் க. திரவியம் தமது “தேசியம் வளர்த்த தமிழ்’ என்று நூலில் “தேசிய இலக்கியம்’ என்று அதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பகாலத்தில் “இந்து நேசன்’ “சுல்பதரு’ போன்ற பத்திரிகைகளில் சர்மா பணியாற்றினார். ஆனால், 1917-ல் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தொடங்கிய “தேசபக்தனில்’ தொண்டாற்றத் தொடங்கியது அவரது வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது பெரிய தேசபக்தர்களான சுப்ரமணிய சிவா. வ.வே.சு. அய்யர், மகாகவி பாரதியார் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. “கல்கி’ சர்மாவுடன் பணியாற்றினார். பின்னர் திரு.வி.க.வின் “நவசக்தி’யில் அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. சுவைமிகுந்த இலக்கியத் தொடர்களை, கட்டுரைகளைப் படைத்தார். செய்தித் தலைப்புகளை அமைப்பதில் சர்மா திறமை மிக்கவர்.
சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டினின்று பர்மா சென்றுவிட்ட சர்மா, 1937 – 42-ல் ரங்கூனில் “ஜோதி’ என்ற மாத இதழைத் தொடங்கித் திறம்பட நடத்தினார். பிற்காலத்தில் “சக்தி’ போன்ற சிறந்த மாத இதழ் தோன்றக் காரணமாயிருந்தது ஜோதியே. 1942-ல் ஜப்பானியர் பர்மாவில் குண்டு வீசத் தொடங்கியபோது சர்மாவும், அவரது துணைவியாரும் தமிழகம் திரும்பினர். பர்மாவினின்று நடந்தும், காரிலும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த அனுபவத்தை “பர்மா நடைப்பயணம்’ எனும் நூலில் எழுதி வைத்தார்.
சர்மா சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மட்டுமல்ல; அவர் முற்போக்குக் கருத்தும் கொண்டவர். வரதட்சிணை எதிர்ப்பு சங்கத்தை நிறுவினார். 1914-ல் நண்பர்கள் உதவியுடன் சென்னை செந்தமிழ்ச் சங்க சங்கத்தை ஆரம்பித்தார். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வைத் தலைவராக இருக்குமாறு அணுகினாராம்! 1958-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தார்.
1914-ஆம் ஆண்டில் மங்களம் என்ற பெண்மணியை மணம் புரிந்துகொண்டார். தம் துணைவியாரையும் இலக்கிய, தேசியத் தொண்டில் சமமாக ஈடுபாடு கொள்ளச் செய்திருக்கிறார். சர்மாவின் இலக்கியத் தொண்டுக்கு அம்மையார் 1956-ல் மறையும் வரை உறுதுணையாக இருந்திருக்கிறார். சர்மாவும் மங்களம் அம்மாளும் பெற்றெடுத்தவை அருமையான நூல்களே. மனைவியை இழந்த துக்கத்தில் அவர் எழுதிய “அவள்பிரிவு’ என்ற கடித நூல் கடிதக் கலையில் சிறந்ததாகும்.
திட்டமிட்ட வாழ்க்கையை உடையவர் சர்மா. ஆனால் கருணை உள்ளம் நிறைந்தவர். ஒழுக்கம், தமிழ்ப்பற்று இரண்டும் கலந்த உருவமே வெ. சாமிநாத சர்மா.
“உலகம் சுற்றும் தமிழர்’ என்ற புகழ்ப் பெயர் கொண்ட காந்தி திரைப்படச் சிற்பி ஏ.கே. செட்டியார் தொடங்கிய “குமரி மலர்’ எனும் மாத இதழின் ஆசிரியராக 1945-46ல் பணியாற்றினார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். தியாகராய நகரில் அவர் நடத்திய இலக்கியச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டேன். உஸ்மான் சாலையிலுள்ள பர்ணசாலை போன்ற குடிலில் நான் ஆசிரியராக இருந்த இதழுக்குக் கட்டுரை கேட்டுப் பெறச் சந்தித்தேன். 1978 ஆம் ஆண்டு நண்பர் பெ.சு. மணியுடன், கலாúக்ஷத்ரா விடுதியில் சந்தித்தேன். முதுமையும் நோயும் வாட்டிய நிலையிலும் தமிழ் வளர்ச்சியைப் பற்றியே அவர் பேசினார்.
பர்மா நடைப்பயணக் கையெழுத்துப் பிரதியை பெ.சு. மணி தேடி எடுத்து என்னிடம் தந்தார். தன் நூல்களை வெளியிடும் உரிமையை, சர்மாஜி அவரிடம் அளித்திருந்தார். நான் அப்போது ஆசிரியராக இருந்த “அமுதசுரபி’ மாத இதழில் வெளியிடச் சம்மதித்தேன். கட்டுரை தொடங்கப் போகும் அறிவிப்பைப் பார்த்து அந்த மூதறிஞர் மகிழ்ச்சியடைந்தார். முதல் இதழ் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு இரு நாள்களுக்கு முன்பே அவர் மறைந்தார்.
“பர்மா வழி நடைப்பயணத்தை’ தமிழ் மக்களுக்கு வெளியிட்டுப் படிக்கச் செய்தது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறு.
பர்மா வழி நடைப்பயணத்தைப் படிக்கும்போது நாம் சர்மாவுடன் அந்தப் பகுதியில் அவருடன் சேர்ந்து பயணம் செய்த உணர்வை அடைந்திருக்கிறோம். அறிஞர் சர்மா பயணக் கட்டுரையாக எழுதியிருந்தாலும் இந்த நூல் ஒரு வரலாற்று நூலாகும்.
தமிழ்நாட்டிற்குக் கிடைத்த பேரிலக்கியம் அந்தப் பயணக் கட்டுரை. மறைந்த பேரெழுத்தாளர் கு. அழகிரிசாமி, சர்மாவைப் பற்றி 54 ஆண்டுகளுக்கு முன்பு பாராட்டி எழுதினார்.
“”தமிழகத்தில் ஆங்கிலம் தெரியாத தமிழர்களும் அரிஸ்டாட்டிûஸப் பற்றித் தெரிந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பிளேட்டோவையும் ரூúஸôவையும் அரிஸ்டாட்டிலையும் அறிமுகப்படுத்தியவர் சர்மாதான். தமிழ்ச் சமுதாயத்திற்கு எப்பேர்ப்பட்ட பேருபகாரம் இது!
வெ. சாமிநாத சர்மா சிறிது குள்ளமாக இருப்பார். ராஜகோபாலச்சாரியாரைப் போல் மொட்டைத் தலை. சிவந்த மேனி, கதர்வேட்டியும் கதர்ஜிப்பாவும் இவருடைய உடை. சிலசமயங்களில் நேருஜியைப் போல் அரை கோட் அணிந்திருப்பார். தொலைவில் பார்த்தால், திரு.வி.க.வின் தோற்றத்தில் இருப்பார். இவரது எளிய வாழ்க்கைக்கு மகாத்மாவின் எளிய வாழ்க்கையைத்தான் உவமையாகக் கூற முடியும்.
அன்பென்ற மலர், இதழ் விரித்துப் பூத்தது போன்ற தெய்வீகச் சிரிப்பு. சாந்தி பொலியும் முகம். அன்பு சுரக்கும் இனிய சொற்கள். அவர்தான் சர்மாஜி.
செப்டம்பர் 17 ஆம் நாள் அவருடைய பிறந்த நாள். ஒழுக்க சீலரான, பண்பாட்டுக் காவலரான, எழுத்துக்காக வாழ்ந்தவரான சர்மாஜி 1978 ஜனவரி 7ஆம் தேதி, கலாúக்ஷத்ராவில் தன் இறுதி மூச்சு நிற்கும்வரை, தமிழ் மொழியின் உயர்வைப் பற்றி மட்டுமே நினைத்தவரை, தமிழ் உள்ள வரை மறக்க முடியாது.
(இன்று அரசியல் அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் 112ஆவது பிறந்த நாள்)
(கட்டுரையாளர்: அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர்).