சுனாமி நிதியில் முறைகேடு: 16 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
சென்னை, செப். 29: வெளிநாட்டிலிருந்து சுனாமி நிவாரணத்துக்காக நன்கொடையாகப் பெறப்பட்ட தொகையை தவறாகப் பயன்படுத்திய 16 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை இணைச் செயலர் டி.எஸ். மிஸ்ரா தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள வெளிநாட்டு நிதி கட்டுப்பாடு சட்டம் (எஃப்சிஆர்ஏ) குறித்த கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள அவர், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
சுனாமி நிவாரணத்துக்காக வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாக 16 தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.
இவற்றின் மீது ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் நிர்வாக ரீதியிலான நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது.
இதில் 5 நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிற நிறுவனங்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த 16 நிறுவனங்கள் மீதும் வெளிநாட்டு நன்கொடைகள் வரைமுறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் சிபிஐ அறிக்கை அளிக்கும்.
சுனாமி நிவாரணமாக தமிழகத்துக்கு மட்டும் ரூ. 241.64 கோடி வெளிநாட்டு நன்கொடை கிடைத்துள்ளது. தென் பிராந்தியம் மட்டுமே அதிக அளவில் வெளிநாட்டு நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.
2004-05-ம் ஆண்டு இந்தியாவுக்கு கிடைத்த அன்னிய நன்கொடை ரூ. 6,250 கோடி. இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களுக்கு மட்டும் ரூ. 3,100 கோடி கிடைத்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 33 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்துறை அமைச்சகத்திடம் பதிவு செய்துள்ளன. தென்னிந்தியாவில் மட்டும் மிக அதிக அளவாக 14 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. தென்னிந்தியாவில் 18 மாவட்டங்களுக்கு மிக அதிக அளவில் வெளிநாட்டு நிதி கிடைக்கிறது.
விரைவில் அன்னிய நன்கொடை கட்டுப்பாடு சட்டம்: வெளிநாட்டு நிதிகளை முறைப்படுத்துவதற்கான திருத்த சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 1976-ம் ஆண்டைய திருத்தப்பட்ட சட்டம் நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.
பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களின் பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இந்த திருத்தப்பட்ட சட்டம் அமையும்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கருத்தரங்கில் வெளிநாட்டு நிதிகட்டுப்படுத்தல் சட்டம் குறித்த இணையதளம் தொடங்கப்படுகிறது.
கருத்தரங்கை தமிழக ஆளுநர் எஸ்.எஸ். பர்னாலா தொடங்கி வைக்கிறார். மத்திய உள்துறை இணை அமைச்சர் எஸ். ரகுபதியும் இக்கருத்தரங்கில் பங்கேற்க உள்ளார்.