மனித சமூகத்தை மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம் “தமிழ்’- இலக்கிய கருத்தரங்கில் கலாம்
கோவை, டிச. 19: மனித சமுதாயத்தைச் சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம் என்று தமிழுக்குப் புகழாரம் சூட்டினார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
கோவையில் காலச்சுவடு அறக்கட்டளை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் திங்கள்கிழமை தொடக்கி வைத்து அவர் பேசியது:
பாரதியார் 125 ஆண்டுகளாக நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எழுத்தாளர் புதுமைப்பித்தன் 100 ஆண்டுகளாகவும், சுந்தரராமசாமி 75 ஆண்டுகளாவும் நமது நினைவில் இருக்கின்றனர்.
1910-ல் பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் “இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென…’ என்ற கவிதையை சரஸ்வதி வந்தனமாகப் பாடுகிறார். இதன் அறிவியல் கருத்து என்னவெனில், “பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல சூரியன், பூமி அனைத்தும் சுழற்சியின் இயக்கத்தில் அண்டசராசரத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றன. ஓயாது, ஒழியாது இச் சுற்றல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதைப்போல நாமும் ஓயாது, துவளாது முயற்சி செய்தால் இறையருளால் நம்நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை’ என்பதாகும். ஒரு விஞ்ஞானியைப் போல கவிதை பாடியுள்ளார் பாரதியார்.
பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து பரவிய தமிழ்மொழி இன்னும் புதுமையாக, இளமையாக இருக்கிறது. பல நாடுகளில் தமிழ் மொழி கொழிக்கிறது; பல்வேறு துறைகளில் தமிழர்கள் சிறப்பு பெறுகிறார்கள்; அவர்களின் மொழியன்பு தமிழை மேலும் மேலும் ஜொலிக்க வைக்கிறது.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் என்று இணையதளங்களில் தமிழ் பரிமாணிப்பது புது மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழ் ஒரு பிரதேச மக்களின் மொழி மட்டுமில்லை. மனித வாழ்வை மேம்படுத்தி மனித சமுதாயத்தை சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம். இதை நினைவுகூர்ந்து படைப்பாளிகள் தங்களது படைப்புகளைச் செய்தால் உலகுக்கு மிகவும் நன்மை கிடைக்கும் என்றார் கலாம்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்புரையாற்றினார். ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.