சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்துடன் ராஜ் டி.வி. புதிய ஒப்பந்தம்
சென்னை, ஏப். 8: ராஜ் டி.வி. நிறுவனம் சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்துடன் புதிய தொழில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ராஜ் டி.வி. சிங்கப்பூர் அரசின் தொலைக்காட்சியான டி.வி.12 நிறுவனத்துடன் இரண்டு வருடங்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தனது பல்வேறு நிகழ்ச்சிகளை டி.வி.12 நிறுவனத்தின் பிரபல தமிழ்ச் சேனலான வசந்தம் சென்ட்ரலில் ஒளிபரப்புகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் தங்களது செய்திகள், திரைப்படங்கள், தொடர்கள், கேம் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. வசந்தம் சென்ட்ரலுடன் பகிர்ந்துகொள்ளும். இதுகுறித்து ராஜ் டி.வி.யின் செயல் இயக்குநர் ரவீந்திரன் கூறியதாவது: சிங்கப்பூரின் பிரபல சேனலான வசந்தம் சென்ட்ரலுக்கு அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பல இந்திய நிகழ்ச்சிகளும், தமிழ் நிகழ்ச்சிகளும் இதில் ஒளிபரப்பாகி வருகின்றன.
கட்டணம் இல்லாமல் தெரியும் வசந்தம் சென்ட்ரல் சேனலை சுமார் 10 லட்சம் நேயர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ராஜ் டி.வி. ஏற்கெனவே இலங்கையின் ரூபவாஹினி, இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழ்ச் சேனல்கள், தீபம் டி.வி. மற்றும் சி.ஐ.இ.இ. சேனல்களுக்கு தனது நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.
இந்த ஒப்பந்தம் மூலம் நேயர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் அறிந்து அதற்கேற்றவாறு நிகழ்ச்சிகளின் தரத்தை மேம்படுத்துவோம். 1500 மணி நேர டி.வி. நிகழ்ச்சிகளை வசந்தம் சென்ட்ரலில் ஒளிபரப்புவதன் மூலம் வருடத்துக்கு சுமார் 3 கோடி ரூபாய் வருவாயை ராஜ் டி.வி. பெறும் என்றார்.