பிசினஸ்: மருத்துவமனைக்கு மஞ்சள்..! கல்யாணத்துக்கு சிவப்பு..!
சி. தங்கராஜ்
பிறந்த நாளா? அமைச்சரை வரவேற்க வேண்டுமா? புதிய அதிகாரி வருகிறாரா? திருமண வரவேற்பா? இந்த எல்லா இடங்களிலும் கலர் ஃபுல் மகிழ்ச்சி பரிமாற்றத்துக்கு ஒரே வழி பூங்கொத்துகள்.
90-களின் பிற்பகுதியில் மேல்தட்டு மக்களிடம் புழக்கத்துக்கு வந்த இந்தப் பழக்கம் இப்போது நடுத்தர வர்க்கத்தினரிடம் தொற்றிக் கொண்டிருக்கிறது. எப்போது ஒரு விஷயம் நடுத்தர வர்க்கத்தினரின் கையில் வந்து விட்டதோ, அப்போதே அந்தப் பழக்கத்துக்கு ஒரு ஸ்திரத்தன்மை வந்து விட்டதென்று அர்த்தம்.
விளைவு… சென்னையில் தடுக்கி விழுந்தால் ஒரு பூங்கொத்து கடை.
இதனால் மலர் செண்டு தயாரித்து விற்கும் தொழில் லாபகரமானதாக நடைபெற்று வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் பூச்செண்டுகள் கடைகள் இருந்தன. இப்போது நகரின் பல பகுதிகளில் இத்தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். மல்லிகை, ரோஜா போன்றவற்றைச் சரமாகக் கட்டி விற்கும் தொழிலில் பெண்கள் பலர் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவருகின்றனர். இதே போல பூக்களை மாலையாகக் கட்டி விற்கும் தொழிலும் எல்லா ஊர்களிலும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இதில் இருந்து சற்று மாறுபட்டது மலர்ச் செண்டு, பூங்கொத்து தயாரித்து விற்கும் தொழில். இதில் முதலீடு குறைவு; லாபம் அதிகம். பெரும்பாலும் வசதி படைத்தவர்களே, விழாக்களின்போது மலர்ச் செண்டு மற்றும் பூங்கொத்துகளைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
மலர்ச் செண்டு மற்றும் பூங்கொத்துத் தயாரிக்க, பயன்படுத்தும் பூக்கள், உயர்ந்த ரகத்தைச் சார்ந்தவை. சாதாரண ரோஜா, டச் ரோஸ், கட் ரோஸ், டபுள் டியூப் ரோஸ், ஜெர்பாரா, ஸ்டார் டெய்ஸி, ஆஸ்டர், செமி கிளாட், டபுள் கிளாட், காரனேஷன், சைப்ரஸ், யெல்லோ டைஸ், ப்ளூ டைஸ் என விதவிதமான மலர்களைக் கொண்டு பூங்கொத்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும், பெங்களூர், ஓசூர் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றன.
கோயம்பேடு மலர் அங்காடியில் 3 கடைகளில் இந்தப் பூக்கள் மொத்த விலையில் விற்கப்படுகின்றன. இங்கிருந்து சென்னையில் பல்வேறு இடங்களில் பூங்கொத்து வியாபாரம் செய்வோர் மலர்களை வாங்கிச் செல்கின்றனர். இதுதவிர, சென்னை எழும்பூரில் 3 கடைகளில் இத்தகைய மலர்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்கப்படுகின்றன.
சிறிய அளவிலான அழகிய மூங்கில் கூடைகளில் பூக்களை அடுக்கி அலங்கரித்து அதன் மீது பிளாஸ்டிக் பேப்பரைச் சுற்றி மலர்ச் செண்டு தயாரிக்கின்றனர். பிளாஸ்டிக் பூக்களைக் கொண்டும் மலர்ச் செண்டு தயாரிக்கின்றனர். இத்தகையை பிளாஸ்டிக் மலர்ச் செண்டை பல மாதங்கள் வரை, வீட்டின் வரவேற்பறையில் அழகுக்காக வைத்துக் கொள்ளலாம்.
இதைத் தவிர வெவ்வேறு அளவுகளில் பூச்செண்டு தயாரிக்கின்றனர். பிறந்த நாள் விழா, திருமண விழா, அலுவலகங்களில் உயர் அதிகாரிகளுக்கு நடக்கும் பாராட்டு விழாக்களுக்கு இத்தகையை பூச்செண்டுகளை வழங்குவது கெüரவமாகக் கருதப்படுகிறது. பூக்களின் நிறம், மணம், பசுமை, நீர்த்துளிகளுடன் கூடிய ஈரத்தன்மை ஆகியவை, அந்தப் பூச்செண்டைப் பெறுவோருக்கு மன மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த மலர்ச் செண்டுகள் மற்றும் பூங்கொத்துகளைத் தயாரிப்பவர்கள், அதன் அளவு, அதில் உள்ள பூக்களின் தரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்கின்றனர். குறைந்தபட்சம் 50 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை பூச்செண்டுகள் விற்கப்படுகின்றன.
இறுதிச் சடங்குகளிலும், கல்லறைகளிலும் வைக்க மலர் வளையங்களையும் இவர்கள் ஆர்டரின் பேரில் தயாரிக்கின்றனர். மலர் வளையங்களின் அளவுக்கு ஏற்ப 250 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா, காதலர் தினம், திருமண நாட்களின்போது பூச்செண்டு மற்றும் பூங்கொத்துகளின் விற்பனை அதிகமாக இருக்கும் என்று இத்தொழிலில் ஈடுபடுவோர் கூறுகின்றனர். 500 ரூபாய்க்குப் பூக்களை வாங்கி, பூச்செண்டுகளாகத் தயாரித்து ரூ.1500 முதல் ரூ.2000 வரை விற்கின்றனர்.
சென்னை அண்ணாநகர், எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், அண்ணாசாலை, அடையாறு, பெசன்ட் நகர், தியாகராய நகர் உள்பட சென்னையில் முக்கிய பகுதிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் இத்தொழிலைச் செய்கின்றனர்.
இவர்களுக்கு இது நிரந்தரத் தொழிலாகவும் மாறிவிட்டது. சென்னை நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப இத்தொழிலில் ஈடுபடுவோருக்கும் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி போட்டியும் வளர்ந்து வருகிறது.