“எய்ம்ஸ்’ மாணவர் அமைச்சர் அன்புமணியிடம் புகார்: தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது பாரபட்சம் என புகார் கூறியதால் தேர்வில் தோல்வி
புதுதில்லி, ஜன. 15: தில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இறுதி ஆண்டு படித்துவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் அஜய் குமார் சிங், இறுதித் தேர்வில் தம்மை வேண்டும் என்றே நிர்வாகத்தினர் தோல்வி அடையச் செய்துவிட்டதாக புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சரும். எய்ம்ஸ் தலைவருமான அன்புமணிக்கும், யு.ஜி.சி. தலைவர் தொராட்டுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் நிர்வாகத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக தாம் வெளிப்படையாகப் புகார் கூறியதால் தம்மை தேர்வில் தோல்வி அடையச் செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஆர்.கே.தேவ்ரால், அஜய் குமார் சிங்குக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சிங் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் தேர்வில் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதுவதாக அது கருதப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அஜய் குமார் சிங், எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபாலுக்கும் டீன் ஆர்.சி.டேகாவுக்கும் மற்றொரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மறு தேர்வு டீன் தலைமையில் நடைபெற வேண்டும் என்றும் விடைத்தாள் பாரபட்சமற்ற குழு திருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது நிர்வாகத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக பிரச்சினையை எழுப்பினார் அஜய் குமார் சிங். இதை மனதில் வைத்துக் கொண்டு அவரை வேண்டும் என்றே தேர்வில் தோல்வி அடையச் செய்துவிட்டனர்’
என்று மருத்துவ விஞ்ஞானிகள் முற்போக்கு அமைப்பைச் சேர்ந்த ஆர்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
மறுதேர்வு நடத்த நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ள போதிலும், தேர்வு அதிகாரிகள் பற்றி சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் பிரசாத் குறிப்பிட்டார்.
“எனினும் அஜய் குமார் சிங் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படும். இதற்கென தனி தேர்வு குழு அமைக்கப்படும். இது தொடர்பாக இயக்குநருக்கு பரிந்துரைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு வெளியிடப்படும்’ என்று டீன் டேகா தெரிவித்துள்ளார்.
இதனிடையே அஜய் குமார் சிங் இதற்கு முன்பு நடந்துள்ள தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். அப்படியிருக்கையில் இறுதித் தேர்வில் 3 பாடங்களில் அவர் தோல்வி அடைந்ததாக தெரிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.கே.பிரசாத்.
மறுதேர்வு நடந்தாலும் மீண்டும் என்னை தோல்வி அடையச் செய்துவிடுவார்கள். எனவே புதிதாக தேர்வு அதிகாரிகளை நியமித்து, புதிய பேராசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த அனுமதிக்க வேண்டும் என்கிறார் அஜய்குமார் சிங்.
குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மருந்துகள் ஆகிய 3 பாடங்களில் சிங் தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 17-ம்தேதி சிங் உள்பட வேறு 7 பேருக்கும் சேர்த்து மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த 7 பேரில் 6 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.