Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rivers’ Category

Tamil Nadu Public Works Department (PWD) – Villages’ infrastructure facilities & Support systems for TN river basin resources

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

பொதுப்பணித்துறைக்கு மூடுவிழாவா?

நீதி. செங்கோட்டையன்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டல்ஹெüசி பிரபுவால் 1849-ம் ஆண்டு இந்தியாவில் பொதுப்பணித்துறை துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரயில், பேருந்து, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கோடு துவக்கப்பட்ட இத்துறை, நாளடைவில் வேளாண் தொழிலின் உயிரோட்டமான நீர்நிலைகளைச் சீரமைக்கும் தலையாய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

அந்தவகையில் மத்திய பொதுப்பணித்துறையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியாக மாநிலப் பொதுப்பணித்துறையும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை ரெகுலர் பிரிவு, தாற்காலிகப் பிரிவு (திருச்சி, வேலூர் ஆகிய இரு வட்ட அலுவலகங்களின் கீழ் பல கோட்ட அலுவலகங்கள்) என இரு பிரிவுகளாகப் பொதுப்பணித்துறை செயல்படுகிறது.

இதில் ரெகுலர் பிரிவு ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளின் நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண் தொழிலுக்கு வேண்டிய நீர்வளத்தைப் பெருக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

தாற்காலிகப் பிரிவானது, ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதிகளில் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது.

முக்கியமாக ஏரிப்பாசனத்தில் தமிழகம் முன்னிலையில் திகழ இந்த தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவின் பங்கு அளப்பரியது.

இதுபோன்ற முக்கியப் பணியை ஆற்றிவரும் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு தமிழக அரசு மூடுவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், தங்கள் தலையில் இடி விழுந்தது போல் உணர்கின்றனர்.

தென் மாவட்டங்களின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாகத் திகழ்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், பிழைப்புத் தேடி நகர்ப்புறத்துக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவு மூடப்பட்டால், ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணியில் மேலும் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அத்துடன், ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி தடைபட்டுப் போனாலும் போகலாம் என்ற அச்ச உணர்வும் பெரும்பாலான விவசாயிகளின் மனத்தைக் கவ்விக் கொண்டுள்ளது.

பொதுப்பணித்துறை ரெகுலர் பிரிவு வேளாண் கட்டமைப்பு தொடர்பான பணிகளை எப்போதுமே குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிப்பதில்லை.

இதனால் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா என்ற செய்தி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதைத் தவிர்த்து, ரெகுலர் பொதுப்பணித்துறை பிரிவில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் சுய ஆதாயத்தில்தான் அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். அதாவது, தங்களுக்கு கணிசமான கமிஷனை அள்ளிக் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே அதிகாரிகள் தனிப்பட்ட சுறுசுறுப்பும் உற்சாகமும் கொண்டுள்ளனர் என்பதையே விவசாயிகள் துணிவாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தவரிசையில், தற்போது தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா நடத்தும் நிலைக்கு தள்ளியது கூட, இந்த ரெகுலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கமிஷன் ஆசைதான் என்றும், அவசியம் ஏற்பட்டால் இதை எந்த இடத்திலும் தாங்கள் சொல்லத் தயார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதாவது ஒருகாலத்தில் ஆற்றுப்பாசனப் பகுதியில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியை மட்டுமே செய்து வந்த பொதுப்பணித்துறையின் ரெகுலர் பிரிவு, அண்மைக்காலமாக ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதியிலும் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது. ரெகுலர் பிரிவின் இந்த முனைப்புக்கு கமிஷன் தான் காரணம் என்பது தவிர எவ்வித நல்ல நோக்கமும் இல்லை.

மாநிலத்தில் மொத்தம் 39,000 ஏரிகள் உள்ளன. ஏரிப்பாசனத்தின் கீழ் 22 சதவீத நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் விவசாயத்தின் உயிரோட்டமான நீராதாரத்தைப் பெருக்குவதில் அரசு அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

குறிப்பாக விவசாயத்தின் ஜீவாதாரங்களான ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றைச் சீர்படுத்தி அவற்றை எப்போதும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது பொதுப்பணித்துறையின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகப் பொதுப்பணித்துறையின் செயல்பாடோ திருப்திகரமாக இல்லை.

இதேபோன்று மெத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் தென்மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து, இன்னொரு “விதர்பாவாக’ உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதற்கிடையில், “நதிகளை இணைப்போம்’ என்று அடிக்கடி கூறி வரும் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி இல்லாததால்தான் பொதுப்பணித்துறையின் தாற்காலிகப் பிரிவுக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளதாக உலா வரும் செய்திகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

Posted in Agriculture, basin, Dams, Duraimurugan, facilities, Farmers, Farming, Flyovers, GIS, Govt, Hydrology, infrastructure, Irrigation, Lakes, Management, Mgmt, Planning, Plng, Projects, Public, PWD, Resources, Rivers, service, Suicides, support, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichy, Vellore, Vidarba, Vidharbha, Vitharbha, Water | Leave a Comment »

V Krishnamoorthy: Protecting the Marshy swamp grounds

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2008

சதுப்பு நிலங்களைப் பாதுகாப்போம்!

வி. கிருஷ்ணமூர்த்தி


உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.

அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

பிரத்யேக குணங்கள் கொண்ட புல் செடிகள், அரிய வகை மரங்கள், நீர் நிலைப் பறவைகள், சில வகை விலங்குகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உள்ளன.

சதுப்பு நிலங்களில் காணப்படும் ரீடு எனப்படும் பிரத்யேக புல் செடிகள் வெள்ள நீரைத் தடுத்து அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளச் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள அலையாத்திக் காடுகள் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது கரையோரப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கின்றன. மேலும், அந்தந்தப் பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாத்து மறுசுழற்சி செய்வதில் சதுப்பு நிலங்களின் பங்களிப்பு அடிப்படை அம்சமாகியுள்ளது.

இந்தியாவில் 27,403 சதுப்பு நிலங்கள் உள்ளன. இதில் 23,444 சதுப்பு நிலங்கள் உள்பகுதியில் அமைந்துள்ளன. 3,959 சதுப்பு நிலங்கள் மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கோவா, மகாராஷ்டிரம், அந்தமான் – நிகோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரங்களில் அமைந்துள்ளன. இதன் பரப்பு 6,750 சதுர கிலோ மீட்டர். இதில் 80 சதவீத சதுப்பு நிலங்கள் அலையாத்திக் காடுகளாக உள்ளன.

ஆசிய சதுப்பு நில இயக்ககத்தின் அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் உள்ள நிலத்தில் 18.4 சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளன. 70 சதவீத சதுப்பு நிலங்கள் நெல் சாகுபடி உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியைக் காரணம்காட்டி விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே சதுப்பு நிலங்கள் குறைய முக்கியக் காரணமாக உள்ளது.

கேரளத்தில் அஸ்தமுடி, சாஸ்தம் கோட்டா, வெம்பானாடு உள்ளிட்ட சில சதுப்பு நிலங்கள் கடலோரப் பகுதிகளில் மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு சிறந்த உதாரணங்களாகக் கூறப்படுகின்றன.

19 இடங்களில் சதுப்பு நிலங்கள் பறவைகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு, மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மொத்த சதுப்பு நிலங்களில் 50 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளது. இவையும் ஆண்டுக்கு 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வீதம் குறைந்து வருகின்றன. இதன் மூலம் மொத்த சதுப்பு நிலங்களில் ஆண்டுக்கு 3 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வேகமாக அதிகரித்துவரும் நகரமயமாக்கல், வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்காக ஆக்கிரமிப்பு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் இயற்கையின் கொடையான சதுப்பு நிலங்கள் பாழாகி வருகின்றன.

இதனால், வீணாகக் கடலில் கலக்கும் நன்னீரின் அளவு அதிகரிக்கும், நிலத்தடி நீரின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும்போது சதுப்பு நிலங்கள் இல்லாத பகுதிகளில் கடலில் இருந்த உவர்நீர் ஊடுருவல் ஏற்படும். இது தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும், கோடைக்காலங்களில் வறட்சி மற்றும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு, பாழாகிவரும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க 1971-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் பரப்புவது, இதற்காக உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இதுவே ராம்சார் பிரகடனம் எனப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் இந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் தொடர் நடவடிக்கையாக இந்தியாவில் வெம்பாடு, சில்கா ஏரி உள்பட உலகம் முழுவதும் இருந்து 1,235 சதுப்பு நிலங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின் படி இந்தியாவில் உள்ள சதுப்பு நிலங்கள் அரியவகை பறவைகளை பாதுகாப்பதற்கான இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் ஆந்திரத்தின் ஒரு பகுதியில் பரந்து விரிந்திருக்கும் பழவேற்காடு ஏரியை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி உலக சதுப்பு நில தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களின் அவசியம், சூழலியல் மாற்றங்களால் சதுப்பு நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் நாளில் கூடி சதுப்பு நிலங்கள் குறித்து பேசிவிட்டு சென்றுவிடாமல், சதுப்பு நிலங்களை சார்ந்து அதன் அருகில் வசிக்கும் மக்களிடம் அவற்றின் பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து விளக்கங்கள் அளித்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் சதுப்பு நிலங்களை பார்க்க முடியும்.

Posted in Backwaters, encroachments, endangered, Environment, Flood, Florida, Forests, Industrialization, Lakes, Land, mangrove, Nature, Pollution, Ponds, Protection, Rain, Rainforest, Rivers, Sea, SEZ, subtropical, swamps, Tropical, Water, Wilderness | 1 Comment »

Water supply & distribution in Tamil Nadu – Inter-state relations, Dam Construction, Rivers

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

மூன்று பக்கமும் துரோகம்; ஒரு பக்கம் கடல்!

கே. மனோகரன்

தமிழகம்போல இன்று தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் மாநிலம் இந்தியாவில் வேறொன்று இருக்க முடியாது.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன. நமக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரே நீர்ஆதாரம் கடல்தான். தாகத்துக்கு கடல்நீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய முடியுமா?

தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மல்லு கட்டுவதற்கே ஆண்டுகளை இழந்ததுடன், இருக்கும் ஏரி குளங்களையும் நாம் பாழாக்கி இழந்து வருகிறோம்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது பூண்டி நீர்த்தேக்கம். குசஸ்தலை ஆற்றிலிருந்துதான் இந்த நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீர் வரவேண்டும். இந்த ஆறு பள்ளிப்பட்டில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் 12 கி.மீ. தூரத்தில் தொடங்குகிறது.

அங்குள்ள அம்மபள்ளி என்ற இடத்தில் 1975-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை இருமலைகளையும் இணைத்து அணை கட்டும் பணி நடந்தது. ஆனால் இப்படி ஓர் அணை கட்டப்படுவதுகூட தெரியாமல் தமிழக அரசு அமைதியாக இருந்தது. அதன் பிறகு குசஸ்தலை ஆறு தமிழகத்துக்குத் தண்ணீர் தரவில்லை. தலைவலி தந்தது. வறண்டுபோனது பூண்டி நீர்த்தேக்கம்.

குசஸ்தலை ஆறு தடைபட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பற்றித்தான் கவலைப்பட்டது. ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் பல கோடிகளை தமிழக அரசிடம் பங்குத்தொகையாகப் பெற்ற ஆந்திர அரசு, அந்த நிதியில் சித்தூர், கடப்பா போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள ஏரிகளைப் புனரமைத்தும், மிகப்பெரிய ஏரியான பிச்சாட்டூர் ஏரியை சீரமைத்தும், புதிய நீர்த்தேக்கங்களையும் கட்டி கால்வாய்கள் மூலம் இணைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டது.

சென்னைக்கு தண்ணீர் தருவதாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் “ஜீரோ பாய்ண்ட்’ எனப்பட்ட கண்டலேறு வரை தண்ணீர் வந்ததே தவிர சென்னைக்கு வரவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் புதிய வீராணம் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் பாலாற்றுக்கு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா நீர்த்தேக்கம். கர்நாடகம் படிப்படியாக அதன் கொள்ளளவையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் பாலாற்றின் நீர்வரத்து குறைந்து போனது.

கர்நாடகத்துக்கும், தமிழக எல்லைக்கும் இடையில் பாலாற்றுக்கு வரும் உபநதிகளான மல்லிநாயக்கனஹள்ளி ஆறு, பெட்மடு ஆறு ஆகியவற்றின் குறுக்கே தலா 4 ஏரிகளை ஆந்திர அரசு கட்டிவிட்டது. இதேபோல் தமிழக எல்லையின் 3 கி.மீ. தூரத்தில் 2000-ம் ஆண்டில் பாலாற்றின் உப நதியான மண்ணாற்றின் குறுக்கே பெரியபள்ளம் என்ற இடத்தில் ரூ. 65 லட்சத்திலும், அதே நேரத்தில் எல்லையின் சில நூறு அடிகள் தூரத்தில் பிரம்மதேவர் கொல்லை என்ற லட்சுமிபுரத்தில் ரூ. 1.20 கோடியில் இருமலைகளை இணைத்து ஆந்திர அரசு அணைகளை கட்டியது.

இவற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் தற்போது குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே பெரிய அளவிலான அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் தமிழக அரசு புதிய அணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் காவிரி வடிகாலில் கிடைக்கும் கூடுதல் நீர் சராசரியாக 30 டி.எம்.சி. கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த தண்ணீரில் மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம்.

ஆளியாறு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காத கேரளம், முல்லைப் பெரியாறு அணையில் முரண்டு பண்ணிக்கொண்டு வருகிறது. சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் வகையில், அதன் துணைநதிகளை தனியார் குடிநீர் ஆலைகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது கேரளம்.

காவிரியை தமிழகத்தின் வாய்க்கால் போலக் கருதி, மிகைநீரை மட்டுமே வழங்குகிற திட்டத்தை கர்நாடகம் எப்போதோ தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கான நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த மூன்று மாநிலங்களும் மறித்துக் கொண்டு வருகின்றன.

இழந்த தண்ணீரைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் நீரையாவது உருப்படியாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர்களின் கண்ணீரால் கடல் நீர் மேலும் கரிக்கும்.

————————————————————————————————————————–
பாலாற்றில் விளையாடும் அரசியல்!

ஆர். ராமலிங்கம்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விரைவில் அணை கட்டத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதிபட கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய விவரம் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. தமிழக முதல்வரும் இவ்விஷயத்தில் நம்பிக்கையூட்டும் தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை.

இதை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலாறு விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற தோழமைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.

கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 40 கி.மீ. தூரமும் ஆந்திரத்தில் 31 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக, அவ்வப்போது பெய்யும் கனமழைதான் தமிழக பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையை ஈரப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து இருந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு பேத்தமங்கலத்தில் அணை கட்டியுள்ளது. அந்த மாநிலம் வெளியேற்றும் உபரி நீரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி ஆந்திர அரசு நீர்நிலைகளை நிரப்பி வருகிறது.

மழைக் காலங்களில் அதிர்ஷ்டவசமாக ஆந்திர எல்லையில் இருந்து ஒருசில தினங்கள் வரும் நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் பாலாறு பொய்த்துவிடுமே என தமிழகத்தின் வடமாவட்ட மக்களின் அச்சப்படுகின்றனர்.

தற்போது மணல் சுரண்டல், நீர்வளம் பறிபோதல், தோல் தொழிற்சாலைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுநீரை வெளியேற்றுவதால் படுகை மாசுபடுதல் போன்ற மும்முனைத் தாக்குதலில் தமிழக பாலாற்றுப் பகுதி சிக்கியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1892-ல் தமிழகத்தில் பாயும் 12 ஆறுகளுக்கு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் பாலாறும் இடம் பெற்றுள்ளது.

அன்றைய மைசூர் மற்றும் மதராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 1952 வரை அமலில் இருந்தது. அன்றைக்கு சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பாலாற்று நீர்வளத்தில் ஆந்திர மாநிலத்துக்கும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பாரம்பரிய உரிமை அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழகம் பாலாற்று பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.

இரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாலாற்று பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதில் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, காவிரி நீர் பங்கீட்டை போன்று பாலாற்று நீரில் தனக்குள்ள பங்கீட்டு உரிமையை தமிழகம் நிலைநாட்டுவது ஒன்றே தீர்வாக அமையும்.

நதிநீர் பங்கீடு உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பாலாற்று நீர்வரத்தில் 60 சதவீதத்தை தமிழகம் பெற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு 1956-ல் கொண்டு வந்த நதிநீர் வாரியச் சட்டத்தை பயன்படுத்த முடியும். தமிழக அரசு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இச்சட்டத்துக்கு உயிரூட்டலாம்.

மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை எழுந்தால் இச்சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வாரியத்தை ஏற்படுத்த முடியும்.

அதன் மூலம் மாநிலங்களுக்கிடையே உள்ள நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தக்க அறிவுரையை வழங்க முடியும். புதிதாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஒன்றையும் மாநிலங்களுக்கிடையே ஏற்படுத்த முடியும்.

தமிழக அரசியல் கட்சிகளிடையே மக்களின் பொதுப் பிரச்னைகளில் கூட ஒற்றுமையின்மை நிலவுவது உலகறிந்த உண்மை. இது அண்டை மாநிலங்களுக்கு பலமாக அமைந்துள்ளது.

பாலாறு விஷயத்தில் திமுக அரசும், எதிர்கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி அரசியலாக்குவதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இறங்கினால் மட்டுமே நதிநீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பாலாற்று பிரச்னையில் மத்திய அரசும், நீதிமன்றமும் தலையிடுவதற்கான நெருக்கடியை தமிழகத்தால் ஏற்படுத்த முடியும்.

ஆர்ப்பாட்ட அரசியலைக் காட்டிலும், ஆரோக்கிய அரசியலே ஆபத்தைத் தடுக்க முடியும். தமிழக அரசியல் தலைவர்கள் சிந்திப்பார்களா?

—————————————————————————————————————–
மக்கள் திரள் போராட்டம்-காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்


தமிழ்நாட்டில் ஏரி, குளம், ஆறுகளுக்குப் பஞ்சம் இல்லை. காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் உண்டு. தென்மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள் ஒருபோதும் பொய்த்ததில்லை. முப்புறம் கடலும் உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களும் உள்ளன. உழைப்பதற்குச் சலிக்காத மக்களும் உண்டு. அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வளங்களும் நிறைந்திருந்த தமிழ்நாடு இன்றைக்கு என்னவாகியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வேதனையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.

நீரில்லா ஆறுகள்

தமிழ்நாடு எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மீள முடியாதபடி தவிக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிப்பதற்கு கர்நாடகமும் கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரம் தனது எல்லைக்குள் அணை கட்ட முற்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆறுகளின் மூலம் தமிழ்நாட்டில் இருபது மாவட்டங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் இப்போது இந்த மாவட்டங்கள் பாசனத்திற்குரிய நீரை இழந்து வறண்ட பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக மாறினால் உணவுக்காக பிற மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைமை உருவாகிவிடும்.

விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் போதுமான நீரில்லாமல் நாம் தவிக்கும்போது, ஆறுகளிலும் நிலத்தடியிலும் எஞ்சியுள்ள சிறிதளவு நீரையும் உறிஞ்சி எடுத்து விற்பனைப் பொருளாக “கோகோ கோலா’, “பெப்சி’ போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அவலமும் நடைபெறுகிறது.

நகர்ப்புற மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளை

அண்டை மாநிலங்களின் வஞ்சனையால் வறண்டுவிட்ட இந்த ஆறுகளிலிருந்து மணல் மிக எளிதாகக் கொள்ளை அடிக்கப்படுகிறது. எந்த மாநிலங்கள் நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றனவோ அதே கேரள மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் லாரிலாரியாகத் தமிழக ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக இந்த ஆறுகளில் நீரோட்டம் இல்லாமல் அண்டை மாநிலங்கள் செய்து விட்டனவோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. இந்த ஆறுகள் வறண்டு போவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் தமிழக அரசு இருப்பதற்கு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி ஆளும் கட்சியினரே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழகத்தின் மற்ற ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அடியோடு சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழக ஆறுகளின் இரு பக்கமும் உள்ள கிணறுகளும் நீரூற்றுகளும் வறண்டு போய் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உருவாகிவிடும். மேலும் இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், பாலங்கள் ஆகியவை மணல் கொள்ளையின் விளைவாக பலவீனம் அடைந்து இடியும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னைக்கு அருகே காரனோடை பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறையும் ஏரிகள்

ஆறுகளின் கதி இதுதான் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சுருங்கி வருகின்றன. பல ஏரிகள் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமான 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தமிழக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு இந்த ஏரிகள் பாசன வசதி அளித்து வந்தன. இவற்றின் மூலம் பத்து லட்சம் ஹெக்டேர்கள் பயன் பெற்றன.

1980-ஆம் ஆண்டில் இந்த ஏரிகளின் பாசன வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் மேலும் 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன் பெறும் என மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டபோது அந்தத் தொகையை ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு தருவதாக ஒப்புக்கொண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 27 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது ஏன் என்பதை ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.

தமிழ்நாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள ஏரிகளைப் பொதுப்பணித்துறையும் அதற்குக் குறைவாக உள்ள ஏரிகளை ஊராட்சி ஒன்றியங்களும் நிர்வகித்து வருகின்றன. இவை தவிர அணை நீரைப் பெற்று பாசனம் செய்யும் 100 ஏக்கருக்கும் குறைவான சில ஏரிகளையும் பொதுப்பணித்துறை நிர்வகிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 12 ஆயிரம் ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 27 ஆயிரம் ஏரிகளும் உள்ளன.

கடந்த நாற்பதாண்டுகளில் இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஏரிகளில் மட்டுமல்ல; ஏரிகளுக்கு மழை நீரைக் கொண்டு வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீரை நிலங்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களும்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தனி நபர்கள் ஆக்கிரமித்த ஏரிகளை விட அரசுத் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் இன்னும் அதிகமாகும். நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் ஏரிகளுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளன.

ஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் கட்டடமே உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை.

ஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 27 ஆயிரம் கண்மாய்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் எல்லைகள் சுருங்கி அழிந்து வரும் அபாயம் உள்ளது. ஏரிகளிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்கவும் அதன் நீர் வழி எல்லைகளை வகுக்கவும் அண்மையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கோ அல்லது ஊராட்சித் தலைவர்களுக்கோ இல்லை.

ஆக்கிரமிப்புகள் திடீரென்று ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடவில்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டோ அல்லது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கடமை தவறிய இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற ஆணையில் எதுவும் கூறப்படவில்லை என்பது திடுக்கிட வைக்கும் உண்மையாகும்.

காடுகள் அழிப்பு

1967-ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 23 விழுக்காடாக இருந்தது. இப்போது தமிழகக் காடுகளின் பரப்பளவு என்பது 17 விழுக்காடாகும். 6 விழுக்காட்டிற்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுவிட்டன. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் ஊழலால் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெறாது. இதன் விளைவாக பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கடற்கரை 1000 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பல இடங்களில் கரையோரமாக அலையாற்றுக் காடுகள் இருந்தன. தென் மாவட்டங்களில் கடற்கரை நெடுகிலும் தேரிகள் என அழைக்கப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக அமைந்திருந்தன. ஆனால் இந்தக் காடுகளையும் மரம் வெட்டுபவர்கள் விட்டு வைக்கவில்லை. மணற்குன்றுகளையும் சிதைத்து விட்டார்கள். இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுனாமி அலைகள் வீசியபோது அவற்றைத் தடுக்கும் அலையாற்றுக் காடுகளும் தேரிகளும் இல்லாததன் விளைவாக பேரழிவு ஏற்பட்டது.

மோதல் சாவுகள்

காவல்துறை மக்களை வேட்டையாடும் துறையாக மாறிவிட்டது. ஆளும் கட்சியினரின் ஏவல்படையாக காவல்துறை மாற்றப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான பல்வேறு வகையான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.

சொல்லாமலேயே மற்றொரு பெரும் கொடுமை தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க காவல்துறை முயல்கிறது. அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களிடமிருந்து காவல்துறை, தானே பறித்துக் கொண்டது. இந்தக் குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்துவிட்டதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதில் சமபங்கு காவல் துறைக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள் – சுரண்டப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சமூகவிரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்குதடையின்றி நடத்துகிறது.

மீறப்படும் சட்டமன்ற மரபுகள்

சட்டமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்கள் பேச முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசுக்கு எதிராக யாரும் எதுவும் கூறிவிடாதபடி தடுக்க முயற்சி வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சிதான் இவ்வாறு சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி மதிக்காமல் போனால் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அவ்வாறே நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதே கிடையாது. வெளியே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவதோடு தன் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். அவர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் சட்டமன்றக் கூட்டத்தை அறவே புறக்கணித்தார். முதலமைச்சராக இருந்தால்தான் சட்டமன்றத்திற்கு வருவது. இல்லையேல் வருவது தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என்று இருவருமே கருதுகிறார்கள். சட்டமன்ற ஜனநாயகத்தை உண்மையிலேயே இவர்கள் மதிப்பவர்களாக இருந்தால் சட்டமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் தங்கள் பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும்.

மக்கள் போராட்டம்

சட்டமன்ற மரபுகள் துச்சமாக மதிக்கப்பட்டு மக்கள் பிரச்னைகள் பற்றி அங்கே பேச முடியாத நிலைமையில் வெளியில் மக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய – மாநில அரசுகளின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார சட்டங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுந்துள்ளது.

பதவிகளைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தலுக்குத் தேர்தல் கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

தமிழக அரசியல் சீர்கேடுகளை எதிர்த்தும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மக்கள் திரண்டு எழுந்து போராட முன்வர வேண்டும். அந்தந்த ஊரில் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினால், எத்தகைய அடக்குமுறையாலும் அப்போராட்டத்தை ஒடுக்க முடியாது.

1965ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டமாக நடைபெற்றது. இந்தியை எதிர்த்த திராவிடக் கட்சிகள்கூட அந்தப் போராட்டத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல் பதுங்கின. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1970களின் பிற்பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளின் ஆதரவும் கிடைத்தது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடினார்கள். 1975ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் தொடங்கியபோது மக்கள் பேராதரவு அளித்தனர். பெரும் தியாகசீலரும் தன்னலமற்றவருமான அவரை மக்கள் நம்பினார்கள். மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி இந்திராவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை அவர் நிலைநாட்டினார்.

மேற்கண்ட போராட்டங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொதிப்புணர்வுடன் போராடினார்கள். இந்த மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாடு பூராவிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு திரண்டு எழுந்து போராடுவதென்பது அத்தனை எளிதானதல்ல. மக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல், கள்ளச் சாராயம், மணல் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, காவல் துறையின் காட்டாட்சி மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்து அந்தந்தப் பகுதிகளில் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் நாடு தழுவிய பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்டி அவர்களைத் திரட்டி இத்தகைய வேண்டாத சக்திகளை எதிர்த்துப் போராட முயற்சி எடுக்க வேண்டிய கடமை தன்னலமற்ற மக்கள் தொண்டர்களுக்கு உண்டு.

ஜனநாயகச் சிதைவு, தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் தமிழக மக்களைத் திரட்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்கள் திரள் போராட்டம் நமது கடமை மட்டுமல்ல. வரலாற்றுக் கட்டாயமும் ஆகும்.

இந்த வேலையை நாம் செய்யாமல் நமது சந்ததியினர் செய்யட்டும் என்று விட்டுவிடுவோமானால் எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in Agreements, Agriculture, Alliance, Andhra, AP, Bengaluru, Bethamangala, Blind, Border, Cauvery, Center, Chennai, Construction, Dam, Distribution, DMK, Drink, Drinking, Drinking Water, Farming, Farmlands, Flood, Flow, Govt, Inter-state, Interstate, Intrastate, Karnataka, Kaveri, Kerala, Krishna, Kuchasthalai, Kusasthalai, Lakes, Limits, Madras, Management, Mullai, Mullai Periyar, Mullai Periyaru, Mysore, Nature, Nedumaaran, Nedumaran, Paalar, Paalaru, Palar, Palaru, peasants, Periyar, Periyaru, Pethamangala, Pichathoor, Pichathur, Pichatoor, Pichatur, Politics, Poondi, reservoir, River, Rivers, Sea, Shortage, State, Storage, Supply, Tamil Nadu, TamilNadu, TMC, TN, Waste, Water | Leave a Comment »

Rains toll in Karnatata, Kerala, Andhra Pradesh and Maharashtra reaches 157

Posted by Snapjudge மேல் ஜூன் 26, 2007

மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தில் மழையின் வேகம் தணிந்தது: சாவு எண்ணிக்கை 157 ஆக உயர்வு

மும்பை, ஜூன் 26: கடந்த சில நாட்களாக பெரும் பொருள் சேதத்தையும், உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்திய மழையின் தீவிரம் திங்கள்கிழமை குறைந்தது. இதையடுத்து, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன. இருப்பினும், அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களான கட்ச் மற்றும் ஜாம்நகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை திங்கள்கிழமை பெய்தது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மிகவும் கனமழை இன்றும் (செவ்வாய்க்கிழமை) பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கனமழை, வெள்ளத்துக்கு 4 மாநிலங்களிலும் பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.

புணே அருகில் தக்லி-ஹாஜி என்ற கிராமத்தில், 6 முதல் 8 வயது நிரம்பிய சிறார்கள் 4 பேர் மழை நீரால் நிரம்பியிருந்த சாக்கடைப் பள்ளத்தில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

கர்நாடகத்தில் தண்ணீர்பாவி கடலோரம் மூழ்கிய சரக்குக் கப்பலின் மாலுமி சடலம் கரையோரம் ஒதுங்கியது. இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாள்களில் பெய்த மழைக்கு கர்நாடகத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்; 4500 பேர் வீடிழந்துள்ளனர் என அம் மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். கேரளத்தில் 59 பேரும் ஆந்திரத்தில் 37 பேரும் மகாராஷ்டிரத்தில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளிலும், தாற்காலிக முகாம்களிலும் அதிகாரிகள் முழுவீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Center, Dam, dead, deaths, Disaster, Environment, Flood, Govt, Gujarat, Health, Homes, Houses, HR, Insurance, Karnatata, Kerala, maharashtra, Monsoon, Mumbai, Nature, NGO, Ocean, people, Rains, relief, Rivers, Sea, service, TN, victims, Volunteer, Water, Winds | Leave a Comment »

Pa Ilankumaran: World Forests day – City Gardens & Wild woods

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

நகர வனம் நன்மை தரும் வனப்பு

ப. இளங்குமரன்

இயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.

இதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.

மனிதன் நாகரிக காலத்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ஆறுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.

காடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.

உலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழிற்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.

தற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.

நகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.

நகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.

இம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.

“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.

நிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

நீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.

செழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

நாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.

எனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறுசீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

(இன்று உலக காடுகள் தினம்).


குடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிறது, ஐ.நா மன்றம் எச்சரிக்கை

குடிநீர் நெருக்கடி
தண்ணீரைத் தேடி….

உலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.

உலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

சீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய்யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.

2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.

இந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.


துருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்

இரா. நல்லசாமி

ஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நாளாக’ கொண்டாடுகின்றன.

1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.

2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்புடையது.

1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.

துருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்றி அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.

தற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.

மேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.

துருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

தரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.

1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்கப்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.

ஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் நமது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.

உலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ரி’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:

தரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். தரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.

கதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.

துருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.

துருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.

மேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.

மேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.

இதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் பனிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்தால் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொடர்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

வரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.

உலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).

Posted in Acid Rain, Air, Antarctica, Arctic, Building, Carbon, City, Climate, Concerns, Drought, Dry, Earth, Earthquakes, emissions, Environment, Extinct, Floods, Forests, Gardens, Greenery, Ice, Impact, Industrialization, Issue, Kyoto, Lakes, Land, Nature, Ozone, Plants, Pollution, Population, Quality, Research, Rivers, satellite, Science, Snow, Trees, Village, Warming, Water, Weather | 5 Comments »

Waster water management – Pollution Control treatment plants: Tirupur Exporters Strike

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

திருப்பூர் சாய ஆலைகள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டன.

சுத்திகரிப்பு செய்யப்படாத ஆலைக் கழிவுநீருக்கான அபராதத் தொகையில் (லிட்டருக்கு 6 காசு) ஒரு பகுதியைப் பகிர்ந்துகொள்வது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்வந்துள்ளதால் (சாய ஆலைகள் செலுத்த வேண்டிய இழப்பீட்டிலும் ஒரு பங்கை ஏற்க முன்வரக்கூடும்) இந்தப் பிரச்சினை இப்போதைக்கு அமைதி கண்டுள்ளது.

தடையற்ற உற்பத்திக்கான தொழிற்சூழல் உருவாதல் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கம் – சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு ஆற்றில் கலப்பதை தடுக்க நிரந்தர வழிமுறை காண வேண்டும் என்பதுதான். லிட்டருக்கு 6 காசு அபராதம் செலுத்தி, சாயக்கழிவுகளை தொடர்ந்து ஆற்றில் கொட்டிக்கொண்டே இருப்பது அல்ல.

அபராதத் தொகையை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வது பற்றி பேசியவர்கள் நச்சு இல்லா இயற்கைச் சாய முறைகளுக்கு மாறுவது குறித்தும் பேசியிருந்தால் மகிழ்ச்சி தருவதாக இருந்திருக்கும்.

இன்று உலகின் முக்கிய நாடுகளில் இயற்கைச் சாயத் துணிகளுக்குத்தான் மதிப்பு தரப்படுகிறது. ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்கள் இயற்கைச் சாய நூல்களை மட்டுமே வாங்குவது என்ற முடிவை மேற்கொண்டால், சாய ஆலைகளும் இயற்கைச் சாய முறைகளுக்கு மாறும்.

பத்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்த இந்த சாயக் கழிவு விவகாரத்தில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் முனைப்புடன் செயல்பட்டிருந்தால் நிலைமை கட்டுக்குள் இருந்திருக்கும். சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்பட்டிருக்கும்.

நொய்யல் ஆறு என்பது திருப்பூருடன் முடிவது அல்ல. அதன் சாயக் கழிவுகள் நிலத்தடி நீரையும் பாதித்துள்ளன. ஒரத்துப்பாளையம் அணை திறக்கப்பட்டால், விஷநீர் துணைநதிகள் மூலம் காவிரி வரை வந்து சேர்கிறது.

இந்தத் தீர்ப்பு ஏதோ திருப்பூர் நகருக்கு மட்டுமே உரியதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் அனைத்து நதிகள் குறித்தும் கவலை தெரிவிக்கும் தீர்ப்பு என்பதை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதேபோன்ற மோசமான நிலைமை பாலாற்றிலும், காவிரி, பவானி, அமராவதி என அனைத்து நதிகளிலும் நிலவுகிறது. ஆனால் இவைதான் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரம்.

குடிநீருக்காக ஆற்றிலிருந்து பெண்கள் தண்ணீர் எடுத்து வந்த காலம் கனவாய், பழங்கதையாய் மெல்லக் கழிந்து வருகிறது. காவிரியில் குளித்துக் கரையேறும் சுற்றுலாப் பயணிகள் பாட்டில் தண்ணீர் குடித்துத் தாகம் தணிக்கும் நிலைதான் உள்ளது.

அனைத்து நகரக் கழிவுகளும் ஆற்றில்தான் கலக்கின்றன. கழிவுநீரைச் சுத்திகரித்து அவற்றிலிருந்து விவசாயத்துக்கான எரு தயாரிக்கும் திட்டங்கள் எந்த நகரிலும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.

வீட்டுக் கழிவுகள் போதாதென்று தொழிற்கூடங்களும் தங்களது சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகளை ஆற்றில் தள்ளிவிடுகின்றன. சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ளதாகச் சொல்லும் சில தொழிற்கூடங்களும்கூட, மழை நாளில், ஆற்று வெள்ளத்தில் கழிவுகளைத் தள்ளி காலி செய்கின்றன. ஆற்றில் மணல் இருந்த காலத்தில் இந்த கழிவுகள் மணலால் வடிகட்டப்பட்டன. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது ஆறுகள் அனைத்தும் மணல் இழந்து, கறம்பாகி, படுகையில் செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன. இவை கழிவுகளை தடுத்து நிறுத்திக் கொள்கின்றன. இத்தகைய ஆறுகள் தான் நமது குடிநீர் ஆதாரம்.

Posted in Clean, Cloth, Clothings, Drinking Water, Environment, Exports, Mills, Noyyal River, Orathupaalayam Dam, Orathupalayam, PCB, Pollution, Pollution Control Board, Rivers, Strike, Thirupoor, Thirupur, Tiruppur, Tirupur, Treatment Plants, Waste, Waste Water, Water | Leave a Comment »

Reliance to bring piped cooking gas to Tamil Nadu by 2008

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006

தமிழகத்துக்கு எரிவாயு

தமிழகத்துக்கு எரிவாயு கிடைக்கச் செய்ய தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய திட்டம் வகுத்துள்ளது. தமிழக முதல்வரை சந்தித்துப் பேசிய பிறகு அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இதை தெரிவித்துள்ளார். இத் திட்டம் ஈடேறுமானால் தமிழகத் தொழில் வளர்ச்சி உத்வேகம் பெறும். வீடுகளில் சமையலுக்கும் எரிவாயு கிடைக்க ஆரம்பிக்கும்.

இந்தியாவில் நிலப்பகுதியிலும் கரையோரக் கடல்பகுதிகளிலும் எரிவாயு மற்றும் பெட்ரோலிய எண்ணெய் ஊற்றுகளைத் தேடும் பணியில் ஆரம்பத்தில் அரசு நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தாராளமயக் கொள்கை அமலாக்கப்பட்ட பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாயின. ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திரத்தையொட்டிய கடல் பகுதியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. 2002-ல் அந்த நிறுவனம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கடலுக்கு அடியில் பெரிய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்தது. பின்னர் அது வேறு ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டபோது மேலும் பல எரிவாயு ஊற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்விதம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டால் பொதுவில் அங்கு குழாய்களை இறக்கி உற்பத்தியில் ஈடுபட மூன்று முதல் ஐந்தாண்டுகள் ஆகும். இதன்படி 2005-ம் ஆண்டிலேயே அங்கு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். சில காரணங்களால் இது தாமதம் அடைந்தது. இப்போது அங்கு 2008 ஜூன் வாக்கில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தினமும் 4 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. கடலில் இருந்து எரிவாயுவைக் கரைப்பகுதிக்குக் கொண்டுவந்து பலநூறு கிலோ மீட்டர் நீளக் குழாய்களை அமைத்து, தேவையான பகுதிகளுக்கு குழாய் மூலம் எரிவாயுவை அளிப்பது என்பது வழக்கமான ஏற்பாடாகும். ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்து, அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கும் குழாய்கள் மூலம் எரிவாயுவைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

குடிநீர் விநியோகம் போல தெருத்தெருவாகக் குழாய்களை அமைத்து வீடுகளுக்கும் எரிவாயுவை அளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் உத்தேசித்துள்ளது. முதலில் சென்னை நகரில் இது மேற்கொள்ளப்படும். பிறகு மாநிலத்தின் இதர இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படுகிற சமையல் வாயுக்குப் பதில் இவ்விதம் குழாய் மூலம் எரிவாயு அளிக்கப்படும். இந்த எரிவாயு இப்போதைய எல்பிஜி சமையல் வாயுவை விட விலைகுறைவாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் எரிவாயுவை சமையலுக்கு மட்டுமன்றி கார்களில் பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுத்த இயலும். எரிவாயுவைக்கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். உரங்கள் தயாரிக்கலாம். ஆலைகளை இயக்கலாம்.

ஆந்திரத்தின் கரையோரக் கடல்பகுதியில் குஜராத் மாநில அரசின் பெட்ரோலிய நிறுவனமும் நிறைய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் இங்கு எரிவாயு ஆய்வில் வெற்றி கண்டுள்ளது. குஜராத் அரசு நிறுவனம் அடுத்த ஆண்டு டிசம்பரில் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ள எரிவாயு ஊற்றுகள் கரைக்கு அருகில், அதுவும் குறைந்த ஆழத்தில் இருப்பதே இதற்கு காரணம்.

பெட்ரோலிய மற்றும் எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் கரையோரமாக உள்ள கடல்பகுதிகளிலும் நிலப்பகுதியிலும் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளில் இதுவரை சிறு அளவில்தான் வெற்றி கிடைத்துள்ளது. உள்ளபடி இந்தியாவில் எரிவாயு உற்பத்தியானது தேவையைப் பூர்த்தி செய்கின்ற அளவில் இல்லை என்பதால் ஈரான், மத்திய ஆசியா ஆகிய இடங்களிலிருந்து குழாய்மூலம் எரிவாயுவைப் பெறுவதற்கு முயற்சிகள் நடந்துவருகின்றன.

Posted in Ambani, Andhra, Andhra Pradesh, AP, Bio-gas, CNG, Compressed Natural Gas, Cooking Gas, Dayanidhi maran, Diesel, Environment, Exports, Fuel, gasoline, Godavari, Indane, Iran, Jet Fuel, Kakinada, Karunanidhi, Krishna, Liquefied Petroleum Gas, LPG, Mukesh D. Ambani, Natural, ONGC, Petrol, Reliance, Rivers, Sea, South Africa, Sri lanka, TamilNadu, TN | Leave a Comment »

Mullai Periyar Dam Controversy – History & Backgrounder

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2006

காவிரி போல விசுவரூபம் எடுக்கும் பெரியாறு அணைப் பிரச்சினை

பா. ஜெகதீசன்

சென்னை, நவ. 24: தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே கடந்த 27 ஆண்டுகளாக இருந்து வரும் “முல்லைப் பெரியாறு அணைப்’ பிரச்சினை தற்போது பூதாகரமாக விசுவரூபம் எடுத்துள்ளது.

“காவிரி பிரச்சினையில் கர்நாடகம் கையாளுவதைப் போன்ற அணுகுமுறையை கேரளமும் பின்பற்றத் தொடங்கி உள்ளதோ? இதுவும் தீராத பிரச்சினையாக உருமாறி விடுமோ?’ என்கிற அச்சம் தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் எழுந்துள்ளது.

1979-ல் இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக சில அச்சங்களை கேரள அரசு எழுப்பியது. இதையடுத்து, அணையை மத்திய நீர்வளக் குழுமம் ஆய்வு செய்து, அணையைப் பலப்படுத்த 3 வகையான பணிகளைத் தமிழகத்துக்குப் பரிந்துரைத்தது.

தாற்காலிக ஏற்பாடு: அதன்பேரில் அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவான 152 அடியில் இருந்து தாற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தக்க பாதுகாப்பு -பலப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்து முடித்த பிறகு, நீர்மட்டத்தை 145 அடிக்கு உயர்த்தலாம் எனவும் குழுமம் பரிந்துரைத்தது.

பேபி டேம் எனப்படும் சிற்றணையைப் பலப்படுத்துதல், கைப்பிடிச் சுவற்றை 2 அடி உயர்த்துவது ஆகிய பணிகளைக் கேரள அரசு எதிர்த்ததால், முடிக்க இயலவில்லை.

வழக்குகள் வந்தன: இதர பலப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிவு அடைந்தாலும், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலேயே வைத்திருக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கேரளத்தைச் சேர்ந்த சிலரும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் (கேரளம் மற்றும் சென்னை) உயர் நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். பின்னர் இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

முதல்வர்கள் பேச்சு வார்த்தை: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்பேரில், 19.5.2000-ல் தமிழக -கேரள முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. அக்கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயவும், தக்க பரிந்துரைகளை அளிக்கவும், வல்லுநர் குழுவை மத்திய அரசு நியமித்தது.

அக்குழு 2001 மார்ச்சில் அரசுக்கு அறிக்கை அளித்தது. “சிற்றணையைப் பலப்படுத்தும் பணி முடிந்த பிறகு, பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி உயரத்துக்கு நீர் மட்டத்தை உயர்த்துவது பற்றி ஆய்வு செய்யலாம். அதற்கு முதற்கட்டமாக நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என அக்குழு பரிந்துரை செய்தது.

இப்பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசிடம் அப்போதே தமிழகம் தெரிவித்தது.

இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்து 27.2.2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தீர்ப்பு உதவும் என பாசனத் துறை வல்லுநர்களும், விவசாயிகளும் நம்பினர்.

முரண்பட்ட கருத்து: ஆனால், அந்நம்பிக்கை பொய்த்துப் போகும் வகையில் கேரளத்தின் செயல்கள் தொடர்ந்தன.

“பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்பாகவே கேரள முதல்வர் அச்சுதானந்தன் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, பேச்சு வார்த்தை நடத்த தில்லி செல்கிறோம்’ என முதல்வர் கருணாநிதி தெரிவித்து, தமிழகத்தின் நிலையை வெளிப்படுத்தி உள்ளார்.

அச்சுதானந்தனும், அவரது அமைச்சரவை சகாக்களும் அணையைப் பார்வையிட்டு, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பேச்சுக்கே இடம் இல்லை என அறிவித்தனர்.

அணையைப் பார்வையிட தமிழகப் பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் சென்றபோது அவருக்கு எதிராக கேரளத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு கேரள காவல் துறை பாதுகாப்பு அளித்தது.

காலம் தாழ்த்தும் நடவடிக்கை: புதிய அணை கட்டுவதே பிரச்சினைக்குத் தீர்வு ஆகும் என அச்சுதானந்தன் கூறி உள்ளார். இது பிரச்சினையை மேலும் காலம் தாழ்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று தமிழக விவசாயிகளும், பாசனத் துறை வல்லுநர்களும் கருதுகின்றனர்.

ஜெ., காங். கருத்து: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தான் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

“மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கேரள அரசு செயல்படுகிறது’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரச்சினைக்குத் தீர்வு காண தில்லியில் அடுத்த சில நாள்களில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள சூழ்நிலைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடுமோ என்கிற அச்சம் இந்த அணையின் பாசன நீரை நம்பி உள்ள விவசாயிகள், குடிநீரை எதிர்நோக்கி உள்ள மக்கள் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது.

Posted in Dam, Interlinking, Irrigation, Kerala, Mullai Periyar, Periyaar, Periyar, Periyar River, River water, Rivers, States, Tamil Nadu, Water Issues | 8 Comments »

Rainwater damage prevention scheme to get Rs. 410 Crores – M Karunanidhi

Posted by Snapjudge மேல் நவம்பர் 22, 2006

வெள்ளப்பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண ரூ.410 கோடியில் திட்டம்: கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு 

சென்னை, நவ. 22- பொதுப்பணித்துறையில் உள்ள நீர் வள ஆதாரத் துறை மற்றும் கட்டிட பிரிவுகளில் செயல்படும் திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி சென்னை கோட்டையில் நேற்று ஆய்வு நடத்தினார்.

சிறு பாசன குளங்களை செப்பனிடும் திட்டங்கள் பற்றியும், ஏற்கனவே எடுக்கப்பட்டு முடிக்கப்படாமல் இருந்த நீர் தேக்க திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தால் சமீபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்தினார்.

சென்ற ஆண்டு மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சரி செய்வதற்கும், இந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்டு இருக்கிற சேதங்களை சரி செய்வதற்கும், இனி வரும் மாதங்களில் ஏற்படக் கூடிய வெள்ளசேதங்களை முன் எச்சரிக்கையாக தடுப்பதற்கு தேவையான பணிகளைச் செய்யவும் ரூ. 25 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

ஏற்கனவே துவக்கப்பட்டு முடிவு பெறாமல் இருந்த 34 நீர் பாசன திட்டங்களில் இப்போது 6 மாதத்தில் முடிந்த திட்டங்களை உடனடியாக திறந்து வைத்து பாசனத்திற்கு தண்ணீர் அளிக்குமாறு உத்தரவிட்டார். மீதமுள்ள திட்டங்களை வரும் நிதி ஆண்டிலேயே விரைந்து முடிக்குமாறு ஆணையிட்டார்.

உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாட்டிலுள்ள பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான 8,326 ஏரிகளை நவீனப் படுத்துவதற்கும் பாசன அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் ரூ 2,500 கோடி செலவில் திட்டங்கள் தயாரித்து செயல்படுத்துவதை விரைவு படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகரத்தில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள சேதங்களை தடுப்பதற்கு முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க ரூ.4 கோடியும், திருச்சி பகுதியில் குடமுருட்டி ஆற்றில் உடைப்பு காரணமாக ஏற்படும் வெள்ள சேதங்களை தடுப்பதற்கு ரூ.5 கோடியும், ஒதுக்கி தந்து இருந்தார். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்தும் முதல்வர் அவர்கள் ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தினுடைய நிதிநிலை அறிக்கையில் நீர் வள ஆதார துறைக்கு 524 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். அதே போல் பொதுப் பணித் துறையில் உள்ள கட்டிட பிரிவிற்கு ரூ. 225 கோடி நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பணிகளினுடைய முன்னேற்றம் குறித்தும் முதல் – அமைச்சர் ஆய்வு நடத்தினார். பொதுவாக, தமிழ்நாட்டில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்ற சென்னை பெருநகருக்கு நிரந்தர பரிகாரம் காண 27 திட்டங்கள் பொதுப் பணித் துறை மூலம் ரூ. 410 கோடிமதிப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர பரிகாரம் காண ரூ 230 கோடி, கல்லணை கால்வாய் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கு நிரந்தர பரிகாரம் காண 220 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் திருச்சி நகரை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்து வெள்ள நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திருப்பும் ரூபாய் 295 கோடிக்கான திட்டத்தினையும் விரைவாக செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்த திட்டங்களை விரைவில் நபார்டு மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Posted in Agriculture, Budget, Dams, Drinking Water, Floods, Irrigation, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Lakes, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Perambalur, Plan, Pumps, Rain, Rivers, Tamil Nadu, Trichy, Water | Leave a Comment »