சர்வதேச திரைப்பட விழாவுக்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு
புது தில்லி, அக். 28: கோவாவில் அடுத்த மாதம் துவங்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக மூன்று தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- சேரன் இயக்கத்தில் வெளியான “தவமாய் தவமிருந்து‘,
- சாரதா ராமநாதன் இயக்கிய “சிருங்காரம்‘,
- டி.வி.சந்திரன் இயக்கிய “ஆடும் கூத்து‘ ஆகிய திரைப்படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன.
மேலும், திரைப்பட விழாவில், ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையிலான போட்டிக்கு சிருங்காரம் படத்தை நடுவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கோவா மாநிலம் பனாஜியில் நவம்பர் 23-ம் தேதி துவங்கி, டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் இத் திரைப்பட விழாவில், பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 20 திரைப்படங்களும், 20 குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.
முன்னாள் ஹிந்தி நடிகர் சஷிகபூர், விழாவைத் துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில், பிரபல நடிகரும் இயக்குநருமான அபர்னா சென் கலந்துகொள்கிறார்.
திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு சயீத் அக்தர் மிர்ஸô தலைமை வகித்தார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எம். வசந்த், கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மாத்யூ உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைபடங்கள் அனைத்தும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-க்குள் தயாரிக்கப்பட்டவை.