பெருகும் தீவிரவாத இயக்கங்கள்
சோம. நடராஜன்
இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் அடைந்த பின்னர், பல அண்டை நாடுகள் விடுதலை அடைந்தன. பாகிஸ்தான் நம்மை முந்திக் கொண்டு ஒருநாள் முன்னதாகவே சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டாடியது. திபெத், நேபாளம், பூடான், பர்மா, மலேயா, சிங்கப்பூர், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் என்ற கடிகாரச் சுற்றில் உள்ள எல்லாப் பிரதேசங்களும் இந்திய விடுதலையை ஒட்டியே சுதந்திரம் பெற்றன.
இவை அனைத்திலுமே குடியரசாட்சி நடைபெறுகிறதா என்பது கேள்விக்குரியதே! ஆனால் நம்மால் மட்டும் உலகின் மிகப்பெரிய குடியரசு என்ற பெயரைப் பெற்று விட முடிகிறது. இது எப்படிச் சாத்தியமாயிற்று? முதலில் வயது வந்தோர்க்கு வாக்குரிமை (ADULT FRANCHISE) என்ற அடிப்படையில் நம் ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டது. அந்த வாக்குரிமையின் மூலம் நடத்தப்படுகின்ற தேர்தல் முறையும், அதன்மூலம் அமைக்கப்படுகின்ற நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் உலகப் புகழ் பெற்றுத் திகழ்கின்றன.
நாம் மிகப்பெரிய குடியரசு நாடாக இருக்கின்றபோதும், நம் மக்கள் எல்லாரும் பூர்ண சுதந்திரத்துடன் வாழ்கின்றோம் என்கிற மனநிறைவுடன் இருக்கிறார்களா என்றால் உறுதியாகவும் முழுமையாகவும் அப்படிச் சொல்ல முடியவில்லை. தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு தாங்கள் அடக்கி ஆளப்படுவதாக நம் நாட்டின் ஒரு சில பிராந்தியங்கள் அதிருப்தியுடன் உள்ளன. இவற்றுள் வடகிழக்குப் பகுதியில் உள்ள பிரதேசங்களில், இந்த அதிருப்திக் குரல்களும், அறிவிக்கப்படாத போர்களும் மலிந்து கிடக்கின்றன.
இதில் மிகப்பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ள பிரதேசம் நாகாலாந்து ஆகும். நாகாலாந்து என்று அறியப்படுகின்ற அந்நாளைய ட்வின் சவுத் (Twin South), பாகிஸ்தானைப் போலவே தன்னைத் தனி சுதந்திர நாடாக, அதே ஆகஸ்ட் 14, 1947ல் அறிவித்துக் கொண்டது என்பது பரவலாக அறியப்படாத செய்தி. இந்திய அரசுடன் தாங்கள் இணையவில்லை என்று கூறி, நாகா சமஷ்டி அரசு (NAGA FEDERAL GOVERNMENT) என்ற போட்டி அரசையும், நாகா சமஷ்டி ராணுவம் (NAGA FEDERAL ARMY) என்ற ராணுவத்தையும் அவர்கள் கட்டமைத்துக் கொண்டனர். இதற்குக் காரணகர்த்தாவாக இயங்கியவர் ஏ.இஸட். பீúஸô (A.Z. PHIZO) என்பவராவார். இவர் உருவாக்கிய நாகா தேசியக் கட்சி (NAGA NATIONAL CONGRESS) தான் நாகாலாந்தில் போட்டி அரசு அமைக்கக் காரணமாக இருந்த இயக்கம். ஆனால் இவரின் செயல்பாடுகள் இந்திய அரசால் முடக்கப்பட்டதால் நாகா தலைவர் பீúஸô கிழக்குப் பாகிஸ்தானிலும் (இன்றைய பங்களாதேஷ்) இங்கிலாந்திலும் அடைக்கலம் தேடிப் போய் இறுதியில் இங்கிலாந்தில் காலமானார்.
என்றாலும், பீúஸôவின் மகன் அடினோ பீúஸôவின் தலைமையில், என்.என்.சி. இன்னும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இவர்கள் இன்னும் ஆகஸ்ட் 14ஆம் நாளைத்தான் விடுதலை நாளாகக் கொண்டாடிக் கொண்டுள்ளனர். இப்போதைய நாகாலாந்துடன், சீனா, மியான்மர் ஆகியவற்றின் சில பகுதிகள் உள்ளடங்கிய அகண்ட நாகாலாந்தைத் தனி நாடாக உருவாக்க வேண்டும் என்றே இவர்கள் இன்றும் கூறி வருகின்றனர்.
நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (NATIONAL SOCIALIST COUNCIL OF NAGALAND – NSCN) என்கிற அமைப்பு 1970களிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பும் அதே அகண்ட நாகாலாந்தை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டதுதான். இந்த அகண்ட நாகாலாந்தை அவர்கள் “நாகாலிம்’ என்று குறிப்பிடுகின்றனர். நாகாலிம் என்ற பெயரில் என்எஸ்சிஎன் இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தேச வரைபடத்தில் அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், பர்மாவின் ஒரு பகுதியும் சேர்த்து ஒரு “”பேரகண்ட நாகாலாந்தை” உருவாக்கிட முயற்சித்துள்ளனர்.
வழக்கம்போலவே எல்லாத் தீவிரவாத, போராளிக் குழுக்களிலும் முளைவிடும் பங்காளிக் காய்ச்சல், பதவிச்சண்டை என்.எஸ்.சி.என். இயக்கத்திலும் முகிழ்த்தது. இதன் விளைவாக என்எஸ்சிஎன் இரண்டு இயக்கங்களாகப் பிளவுபட்டது. இஸôக் ச்சிசிஸ்பூ, துயின் கெலாங் முய்வா தலைமையில் இந்த இயக்கம் என்.எஸ்.சி.என் (இசாக்-முய்வா) NSCN(I-M) என்ற பெயருடன் செயல்பட்டது. இன்னொரு பிளவு இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர் எஸ்.எஸ். கப்லாங் என்பவர். அது என்எஸ்சிஎன் (கப்லாங்) NSCN(K) என்று குறிக்கப்பட்டது.
இதில் என்.எஸ்.சி.என். (ஐ.எம்) தன்னை வளர்த்துக் கொள்வதற்கு நாகாலாந்தை 11 பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி நிர்வாகிகளை நியமித்துள்ளது. ஒரு முழுமையான அரசாங்கக் கட்டமைப்புடன் இயங்குகிறது. ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டங்களைத் தாக்கல் செய்கிறது. ராணுவம், உள்துறை, நிதித்துறை, ஏன் வெளியுறவுத்துறை என்றுகூட ஒரு தனி நாட்டுக்குரிய நிர்வாகக் கட்டமைப்புடன் இயங்குகிறது. கவர்ன்மெண்ட் ஆப் தி பீப்பில்ஸ் ரிபப்ளிக் ஆப் நாகாலாந்த் – GPRN என்று பெயர் சூட்டி ஆட்சி நடத்துகிறது. வெளிநாடுகளுடன் உறவாடி நிதியாதாரங்களைப் பெருக்கிக் கொள்கிறது. GPRN என்ற அரசு முத்திரையுடன் அயல்நாடுகளுக்குச் சென்று வர தனி விசா, பாஸ்போர்ட் போன்றவற்றை வழங்குகிறது. வெளிநாடுகளிலிருந்து செயல்படும் இயக்கங்களுடனும் தீவிரவாத அமைப்புகளுடனும், அயல்நாட்டு ஊடகங்களுடனும் உறவாடித் தங்களுக்கு ஆதரவையும் நிதியையும் திரட்டிக் கொண்டிருக்கிறது என்.எஸ்.சி.என் (ஐ.எம்). அத்துடன் போதைப் பொருள் கடத்தல், வங்கிக் கொள்ளை, வர்த்தக மற்றும் தோட்ட அதிபர்களை மிரட்டி “வரி’ வசூலித்தல் என்று பலவகையான வழிமுறைகளைப் பின்பற்றி தங்கள் நிதியாதாரங்களைப் பெருக்கிக் கொள்கிறது.
இந்த இயக்கத்துக்கு அமெரிக்கா, சீனா, பர்மா ஆகிய நாடுகளின் தீவிரவாத இயக்கங்கள் உதவி வந்தன. ஆனால் 1980க்குப் பின் இந்த உதவிகள் தடைபட்டுப் போயின. ஆனால் இன்றுவரை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஆதரவு இதற்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது. நிதி ஆதாரங்களுடன் ஆயுதச் சேகரிப்பிலும் என்எஸ்சிஎன் (ஐ.எம்) தன்னுடைய அமைப்பைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது.
இப்போது தவிர்க்க முடியாத தீவிரவாத இயக்கமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள என்.எஸ்.சி.என். (ஐ.எம்) பிரிவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயன்று கொண்டுதான் இருக்கிறது. 1997 முதல் பேச்சுவார்த்தை, போர் நிறுத்த உடன்பாடு என்று இன்றுவரை சமாதான முயற்சி தொடர்கிறது.
2006 ஜூலையில் தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் மூன்று நாள்கள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ், இணை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, பிரிதிவிராஜ் சௌஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். என்எஸ்சிஎன் (ஐ.எம்) சார்பில் அதன் பொதுச் செயலர் முய்வா பங்கேற்றார். இரு பிரிவுகளுக்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
இது பெயரளவுக்கான சண்டை நிறுத்தம்தான் என்பதை இரு தரப்புமே அறியும்.
இதற்கிடையில் அசாமின் “உல்பா’ பிரச்சினை இப்போது அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாகாலாந்து பாணியில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை உல்பா தீவிரவாத அமைப்புடன் மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது.
மாவோயிஸ்ட் உள்ளிட்ட நக்சல்பாரி இயக்கங்களும் பேச்சுவார்த்தைக்கு உரியனவாக உள்ளன. இவையன்றி இன்னும் பல உள்நாட்டுத் தீவிரவாத இயக்கங்கள் உள்ளன.
- அசாமில் உல்பாவுடன் சேர்த்து 16 இருக்கின்றன.
- மணிப்பூரில் 13;
- திரிபுராவில் 3;
- மேகாலயாவில் 3;
- அருணாசலப் பிரதேசத்தில் 1;
- நாகாலாந்தில் மொத்தம் 3;
- மிசோரமில் 1;
- பஞ்சாபில் 12 மற்றும்
- நாடு முழுதும் உள்ள பிற மாநிலங்களில் 11 என்று தீவிரவாத இயக்கங்களின் பட்டியல் பெருகுகிறது. எதிர்காலத்தில் இவை அனைத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இந்தியா தயாராக இருக்க வேண்டும்.