கூடங்குளத்துக்கு பேச்சிப்பாறை நீரா? குமரி மாவட்டம் பாலையாகும் அபாயம்: அமைப்புகள் அச்சம்
அ. அருள்தாசன்
நாகர்கோவில், அக். 23: கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை தண்ணீரைக் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குக் கொடுத்தால் விவசாயத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதுடன், மாவட்டமே பாலைவனமாகிவிடும் அபாயம் உள்ளதாக பல்வேறு அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இந்த விஷயத்தில் அரசு தரப்பில் முடிவு எடுக்கும்போது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய நீராதாரமாக இருப்பது பேச்சிப்பாறை அணை. இந்த அணை 1906-ல் கட்டி முடிக்கப்பட்டது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் முழுமையாக பாசனத்திற்கு உபயோகப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளில் மழை குறைவால் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பயிர் செய்யப்படாமல் தரிசாகிவிட்டன. கொல்லங்கோடு பகுதியில் தண்ணீரின்றி கருகிய 200 ஹெக்டர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்காக அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 இழப்பீடு கொடுத்தது.
பேச்சிப்பாறை தண்ணீர் நூற்றுக்கணக்கான சிறு பாசன கால்வாய்மூலம் வயல் வெளிகளுக்கும் ஏறக்குறைய 1950 பொது மராமத்து குளங்களுக்கும், 1500 மானாவாரி குளங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது.
பேச்சிப்பாறை அணை கன்னியாகுமரி மாவட்ட நன்னீர் நிலங்களுக்கு இதயமாக இருக்கிறது என்று கூறலாம்.
பேச்சிப்பாறை தண்ணீர் இல்லாவிட்டால் விவசாயமும் அழியும் என்றும், குடிநீருக்கே மக்கள் கஷ்டப்படுவார்கள் என்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
இதைத் தடுக்க ஒரு விழிப்புணர்வு இயக்கம் உருவாக்க வேண்டும். எல்லா ஊராட்சிகளிலும் பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடுக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும். அணு உலைகளுக்கு கடல்நீரை சுத்தம் செய்து ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் வழியாக நன்னீர் எடுப்போம் என்று வெளிப்படையாகக் கூறிவிட்டு பேச்சிப்பாறையில் இருந்து நன்னீர் எடுக்கப் போகிறோம் என்று சுற்றுப்புற தாக்கீடு அறிக்கையில் கூறி அதற்கான பொது விசாரணை நடத்துவது கன்னியாகுமரி மாவட்ட மக்களை ஏமாற்றுவதாகும் என்கிறார் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் ஆர்.எஸ். லால்மோகன்.
2006-ல் அணுமின் நிலையத் தலைவர் அகர்வால் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டுமென்று தெளிவாகக் கூறியிருக்கிறார். 4 அணு மின் உலைகளுக்கு நாள் ஒன்றுக்கு 20,594 கன மீட்டர் அதாவது ஓராண்டுக்கு 75,16,810 கன மீட்டர் தண்ணீர் எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 அணுமின் உலைகள் வந்தால் 1,50,38,620 கன மீட்டர் தண்ணீர் எடுக்கப்படும். இந்த தண்ணீர் ஏறக்குறைய 1000 ஹெக்டேர் பாசனத்துக்குப் போதுமானதாகும். இவ்வளவு தண்ணீர் எடுக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்டம் பாலைவனமாகிவிடும். பொது விசாரணை இந்த அடிப்படையில் வைத்திருப்பதால் இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் சுற்றுப்புறச் சூழல் அறிக்கையை திரும்பப் பெறவேண்டும் என்கிறார் லால்மோகன்.
பேச்சிப்பாறை அணைநீரை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்த தகவல்கள் மாவட்ட மக்களுக்கு இன்னும் சரிவரத் தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பொது விசாரணை நடத்தினால் அதை நாகர்கோவிலில் நடத்தி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் தற்போதைய கருத்தாகும்.