நீதிக்குச் சவால்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. ஆனால், அதைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல, பத்திரிகைகளும் பெரிய முக்கியத்துவம் தரவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மீது தொடரப்பட்ட கொலை வழக்கில் அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது செஷன்ஸ் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார் சரவணபவன் அதிபர் ராஜகோபால். மேல்முறையீடு பரிசீலனையில் இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தனது தண்டனையை எதிர்த்து ராஜகோபாலனும், அவரது தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி அரசும் தொடர்ந்திருக்கும் மேல்முறையீடு மனுக்கள் மீது விசாரணை நடைபெறாமல் தள்ளிப் போடப்படுகிறது. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? எந்த நீதிபதிகளிடம் இந்த முறையீடுகள் விசாரணைக்கு வந்தாலும், அவர்கள் மிரட்டப்படுவதால் நீதிபதிகள் வழக்கை விசாரிக்க முன்வருவதில்லை என்பதுதான்.
இதற்கு முன்பு நீதிபதிகள் டி. முருகேசன் மற்றும் கே.என். பாஷா ஆகியோரால் மறுக்கப்பட்டு, நீதிபதிகள் பி.டி. தினகரன், ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்களும் விசாரிக்க மறுத்துவிட்ட நிலையில், இப்போது நீதிபதிகள் டி. முருகேசன், பெரிய கருப்பையா இருவரின் நீதிமன்றத்தில் மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
மிகுந்த தயக்கத்துடன் இந்த வழக்கை விசாரிக்க முன்வந்த தங்களுக்குப் பல வழிகளில் மிரட்டல்கள் வருவதால், தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்றும், வேறு நீதிபதிகளை வைத்து விசாரித்துக் கொள்ளும்படியும் தலைமை நீதிபதிக்கு அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். “”இந்த வழக்கைச் சுதந்திரமாக விசாரிக்க முடியவில்லை. நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து என்று மிரட்டல் வரும்போது நாங்கள் எப்படிச் சுதந்திரமாகச் செயல்பட முடியும்? அதனால், இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை” என்று நீதிபதிகள் டி. முருகேசனும், பெரிய கருப்பையாவும் கருத்துத் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.
சுதந்திரமாக நீதிபதிகள் செயல்பட முடியவில்லை என்று நீதிபதிகளே கூறும்போது, அதில் நிச்சயமாக உண்மை இருக்கும். இதற்கு முன் இரண்டு நீதிமன்றங்கள் இதே வழக்கைத் தங்களால் விசாரிக்க இயலவில்லை என்று ஒதுங்கிக் கொண்டதற்குக் காரணம் அச்சுறுத்தல்கள்தான் என்று கருத இடமுண்டு. உயர் நீதிமன்ற நீதிபதிகளே அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று சொன்னால், அந்த அளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தமா?
உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மிரட்டல் கடிதங்களை எழுதுவது, தொலைபேசியில் அச்சுறுத்துவது என்று துணிந்து செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குப் பணபலம் மட்டுமல்லாமல், அதிகார வர்க்கத்தின் முழுமையான ஆசியும், ஆதரவும் இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம். ஆட்சியாளர்களின் ஆதரவுடன், நீதிபதிகளை மிரட்டத் தொடங்கும் இத்தகைய போக்கு வளர்ந்தால் அதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
இதுவரை பல வழக்குகளில் சாட்சிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சினிமாவில் மட்டும்தான் அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையோடு காவல்துறையினரும், நீதிபதிகளும் அச்சுறுத்தப்படும் சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம். இப்போது நிழல் நிஜமாகிறதோ என்கிற ஐயப்பாட்டை சமீபத்திய சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
நீதிபதிகளை அச்சுறுத்தியது யார் என்பதை உடனடியாகக் கண்டறிந்து அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படாவிட்டால், இத்தகைய போக்கு நீதித்துறையை சீர்குலைத்து தமிழகத்தில் தாதாக்கள் சாம்ராஜ்யம் ஏற்பட வழிவகுத்துவிடும். ஆட்சியாளர்களின் அசட்டை அவர்களுக்கேகூட ஆபத்தாக முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். தேவை, நீதிக்கும், நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு!