படப்பிடிப்பில் அஸின் காயம்
சென்னை, டிச.8: “போக்கிரி‘ படத்தில் இடம்பெறும் ஒரு நடனக் காட்சிக்கான படப்பிடிப்பின்போது நடிகை அஸினுக்கு காயம் ஏற்பட்டது.
நடிகர் விஜய், அஸின் நடித்து வரும் “போக்கிரி’ படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒரு பாடல் காட்சி புதன்கிழமை படமாக்கப்பட்டது.
பட இயக்குநர் பிரபுதேவா நடன அசைவுகளைப் பற்றி விஜய், அஸின் ஆகியோருக்கு விளக்கி படமாக்கிக்கொண்டிருந்தார். அப்போது அஸினிடம் “ஷூவை கழற்றிவிட்டு நடனமாடினால் காட்சி இன்னும் சிறப்பாக வரும்’ என்று கூறியுள்ளார்.
இதனால் பலகைகளால் உருவாக்கப்பட்டிருந்த அந்த மேடையில் அஸின் வெறும் காலுடன் ஆடியுள்ளார். அப்போது பலகையில் இருந்த ஓர் ஆணி அஸின் பாதத்தில் பாய்ந்து ரத்தம் வழிந்துள்ளது.
உடனே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என படக்குழுவினர் தெரிவித்தனர்.