மக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி?
க. பழனித்துரை
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.
இந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.
பணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.
உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.
வாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.
மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை,
- திருவண்ணாமலை,
- கடலூர்,
- விழுப்புரம்,
- திண்டுக்கல்,
- நாகப்பட்டினம்,
- சிவகங்கை
ஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.
வட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இப்படி மத்திய அரசு தரும் நிதியை,
- பஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,
- இந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,
- பாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,
- புதிய கட்டடம் கட்டுதல்,
- பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு,
- விளையாட்டு மேம்பாட்டிற்கு வசதிகள்,
- கழிப்பறை,
- சுற்றுச்சுவர்,
- மேஜை, நாற்காலி வாங்குதல்
- மதிய உணவு சமையலறைக் கட்டடம்
உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.
மத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.
இந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.
பின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.
கருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.
ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.
அரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.
ஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.
இந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.
மாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.
—————————————————————————————————————————————————
ஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன?
எம். ரமேஷ்
ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.
ஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.
இந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.
அந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.
10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.
இலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.
இதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.
தொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.
மாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.
2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.
22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.
அனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.
தமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.
இதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.
அதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.
முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.
ஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.
எம். ரமேஷ்