ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கை
எஸ். கோபாலகிருஷ்ணன்
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டுக்கான நிதி மற்றும் கடன் கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி ஏப்ரல் 24-ம் தேதி அறிவித்தார்.
நிதித்துறையில் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுவது ரிசர்வ வங்கியின் கடன் கொள்கையே. இது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கியின் நடைமுறையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தொழில் துறையினரின் தேவைகள், விலைவாசி நிலவரம், பணவீக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப, கடன் கொள்கையில் உடனுக்குடன் சிறு, சிறு மாற்றங்களை அறிவித்து விட்டு, தொலைநோக்கு மாற்றங்களை மட்டுமே அரையாண்டு நிதி மற்றும் கடன் கொள்கையில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால், இப்போது நிதிக் கொள்கை அறிவிப்பில் பரபரப்பான அம்சங்கள் இடம்பெறுவதில்லை.
நிதி மற்றும் கடன் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டு, தொழில், விவசாயம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடன் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.
தற்சமயம், உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அவசரத் தேவை. எனினும் அண்மையில் அறிவிக்கப்பட்ட கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கியின் பிரதானமான விகிதங்கள் மாற்றப்படவில்லை.
ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் 6 சதவிகிதமாகவே தொடர்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு 6.5 சதவிகிதமாகவே இருக்கும்.
அதேபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால அவசரக் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.75 சதவிகிதமாகவே உள்ளது.
மாறாக, இந்த விகிதங்கள் உயர்த்தப்பட்டிருந்தால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கு வட்டி உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். சி.ஆர்.ஆர். எனப்படும் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் அரை சதவிகிதம் உயர்த்தி இருந்தாலும், வங்கிகளின் நிதி ஆதாரத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முடக்கப்பட்டிருக்கும்.
அதே அளவுக்கு பொது மக்களுக்குக் கடன் கொடுப்பது குறைந்திருக்கும். ஆக, கடன்களுக்கு வட்டி விகிதம் உயராமலும், கடன்தொகை குறையாமலும் புதிய கடன் கொள்கை பார்த்துக் கொண்டது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், வளர்ச்சியின் வேகம் தடைபட்டுவிடக் கூடாது என்பதில் ரிசர்வ் வங்கி உறுதியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, சி.ஆர்.ஆர். மற்றும் ரெப்போ விகிதம் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால அவசரக் கடனுக்கான வட்டி விகிதம்) கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உயர்த்தப்பட்டது. எனவே அவற்றை மேலும் உயர்த்திக் கடன் பெறுவோர்களின் சுமையை இன்னும் அதிகரிக்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என்பது கண்கூடு.
அப்படியானால், இந்தப் புதிய நிதிக் கொள்கையில் என்னதான் சிறப்பு அம்சம்? நிதிக் கொள்கையில் அனைவரும் முக்கியமாக எதிர்பார்ப்பது ஒன்று உண்டு. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை குறித்து ரிசர்வ வங்கியின் கணிப்பு என்ன என்று அறிந்து கொள்வதுதான் அது. அந்தவகையில், ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 2007 – 08-ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அத்துடன், தற்சமயம் 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள பணவீக்கம், 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதே ரிசர்வ் வங்கியின் குறிக்கோள்.
பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலாண்டு தற்போது நடந்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் ஜி.டி.பி. 9 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இலக்கு. எனினும், ரிசர்வ் வங்கி 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று அடக்கி வாசிப்பதற்கு காரணம் என்ன?
உலக அளவில், நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் சற்று குறைவாகவே இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அடுத்து, இந்தியாவில் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளின் பலன் வெளிப்பட கொஞ்சம் கால அவகாசம் தேவை.
கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வங்கி டெபாசிட்டுகள் 20 சதவிகிதமாகவும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளன. ஏற்கெனவே இப்படி அதிகரித்துள்ள விரிவான அடித்தளத்தில், மேலும் இதே அளவு வங்கி டெபாசிட்டுகள் அதிகரிக்கும் என்றும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதம் உயரும் என்றும் எதிர்பார்க்க முடியாது. வங்கிக்கடன் 24 அல்லது 25 சதவிகிதமே உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிக் கடன் வட்டி விகிதம் உயர்ந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம். நல்லவேளையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக் கடன்களுக்கு வட்டி உயராது. மாறாக, குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும், முதல்முறையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக்கடன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் இதற்காக பெருமிதம் கொள்ளக்கூடும்.
கச்சா எண்ணெய் உள்ளிட்ட நமது இறக்குமதிப் பொருள்களுக்குக் குறைந்த ரூபாய் கொடுத்தால் போதுமானது. ஆனால், இன்னொரு பக்கம், ரூபாயின் மதிப்பு வலிவடைவதால், நமது ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். காரணம், அவர்களுக்குக் கிடைக்கும் டாலர்களின் மதிப்பு குறைகிறதல்லவா?
இது நமது ஏற்றுமதியை இரண்டு வகையில் பாதிக்கக் கூடும். ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். இரண்டாவதாக, நஷ்டப்பட்டுக் கொண்டு ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற மனநிலை ஏற்படக்கூடும். இதனால் ஏற்றுமதி அளவு சரியும். ஏற்றுமதி குறைந்தால், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும். இது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும்.
இன்னொரு பக்கம், ஏற்றுமதியாகும் ஒரு பகுதி பண்டங்களின் மூலப்பொருள்கள் இறக்குமதி செய்தவை. இவற்றின் விலை குறைவதால் ஏற்றுமதியாளருக்கு வேறு ஒருவகையில் ஆதாயம் கிடைக்கத்தான் செய்கிறது. ஆகவே, ஏற்றுமதியையும், இறக்குமதியையும் இருவேறு கூறுகளாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.
எப்போது ரூபாயின் மதிப்பு ஓர் அளவுக்கு மேல் உயரும்போது, மேற்கூறிய காரணங்களுக்காக, ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதனைச் சீர்படுத்த முனைவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படிச் செய்வதற்கு இதுவரை முன் வரவில்லை. இன்னும் காலம் கனியவில்லை என்று ரிசர்வ் வங்கி கருதுகிறதுபோலும்.
அன்னியச் செலாவணி தளத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது போன்ற மிகச் சிறிய அளவிலான செயல்பாடுகளை காண முடிகிறது. அதேபோல், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
அதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா ஒன்று. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இல்லாமல், விலைவாசியையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதே புதிய நிதிக் கொள்கையின் நோக்கம் என்பது வெளிப்படை.
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் செனட் உறுப்பினர்.)
================================================
ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம்: குருமூர்த்தி வலியுறுத்தல்
திருப்பூர், மே 9: டாலர் வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படுவதால், ஏற்றுமதியாளர்கள் ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார். டாலர் வீழ்ச்சி காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், தொடர்ந்து இந்நிலையில் ஏற்றுமதி செய்வதில் ஏற்றுமதியாளர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் கையாளவேண்டிய உத்திகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எஸ்.குருமூர்த்தி ஆலோசனை வழங்கினார்.
குருமூர்த்தி கூறியது: டாலர் வீழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை என ஏற்றுமதியாளர்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. நம்நாட்டில், கடந்த ஒரு ஆண்டாக விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு பெட்ரோல் விலை உயர்வும் காரணமாக உள்ளது. நமது தேவையில் முக்கால் பங்கு பெட்ரோல் இறக்குமதி செய்கிறோம். பஸ் கட்டணம், உரம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் பெட்ரோல் விலை உயர்வு பாதிக்கிறது.
ஆதாரமான பொருளாக இருக்கும் பெட்ரோல் விலை அதிகரிக்கும்போது, அது பொருளாதாரத்தை முழு அளவில் பாதிக்கிறது. பெட்ரோல் விலை 5% உயர்ந்தால், மற்ற பொருள்களின் விலை 10% வரை உயர்ந்துவிடுகிறது. பெட்ரோல் விலை உயர்ந்த நிலையிலும், நமது பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருந்தது. ஆனாலும் அரசு சரியாக நிர்வாகிக்காத காரணத்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. விலைவாசி உயரும் என ரிசர்வ் வங்கிக்கு முன்கூட்டியே தெரியும்.
கடந்த 2 மாதங்களில் டாலர் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் நம்நாட்டில் முதலீடு செய்வதும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தாலும் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகமாக உள்ளது.
ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை வாங்கியதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தது. தொழிலுக்கு தேவையான பணத்திற்கும் கூடுதலாக பணம் வரும்போது, அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். இப்படி, ரூ.2.60 லட்சம் கோடி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி அதிகம் இருப்பதால், அதை அமெரிக்காவிற்கு 2% அல்லது 2.5% என மிகக் குறைந்த வட்டிக்கு கடனாக தருகிறோம். இதனால் ரிசர்வ் வங்கிக்கு நஷ்டம்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அரசை சார்ந்திருக்கும் நிலை இனி இருக்கக்கூடாது. ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடும் நிலை மாறி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அரசுக்கு ஆலோசனை சொல்கின்ற நிலைக்கு வரவேண்டும். இதற்காக, ஏற்றுமதியாளர்கள் சிந்தனைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஏற்றுமதி வர்த்தகத்தை டாலர் மதிப்பில் நிர்ணயித்து வர்த்தகம் செய்வதைவிட ரூபாய் மதிப்பில் நிர்ணயம் செய்து ஏற்றுமதியாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றார்.