“ஷாக்’ அடிக்கிறதே, என்ன செய்ய?
தமிழ்நாடு மின்வாரியத்தின் பொன்விழா ஆண்டு இது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கோலாகல விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், மின்வாரிய ஊழியர்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தார். மேலும் 2,500 மெகாவாட் மின்உற்பத்திக்கான திட்டங்களையும், ரூ.160 கோடி செலவில் 10,000 டிரான்ஸ்ஃபார்மர்களையும் அறிவித்து பொன்விழாவை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர்.
தமிழ்நாடு மின்வாரியத்தின் வளர்ச்சியும், செயல்பாடுகளும் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவை என்பதில் சந்தேகமே இல்லை. அப்பாதுரை, பூர்ணலிங்கம், விஜயராகவன் போன்ற முன்னாள் மின்வாரியத் தலைவர்களின் பங்களிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. சொல்லப்போனால், மற்ற தென்னக மாநிலங்களைவிட மின்உற்பத்தியிலும் சரி, விநியோகத்திலும் சரி, தமிழ்நாடு மின்வாரியத்தின் செயல்பாடுகள் நிச்சயமாகச் சிறப்பானதாகவே இருந்துவருகிறது.
1957-லிருந்து தமிழ்நாடு மின்வாரியம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளைத் திரும்பிப் பார்த்தால் வியப்பாகவே இருக்கும். மின்வாரியத்தில் பயனடையும் நுகர்வோர் எண்ணிக்கை சுமார் 4.30 லட்சத்திலிருந்து 1.85 கோடியாக உயர்ந்திருக்கிறது. அப்போது மின் இணைப்பு இருந்த நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெறும் 1,813. இப்போது 8,63,177. அப்போது பம்ப் செட்டுகளின் எண்ணிக்கை 33,440. இன்று 18,01,972 விவசாய பம்ப் செட்டுகள் மின் இணைப்பை பெற்றுள்ளன.
10,098 மெகாவாட் மின் உற்பத்தி, 1,148 துணை மின்நிலையங்கள், 1,73,053 ட்ரான்ஸ்ஃபார்மர்கள் என்று மின்வாரியம் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து, தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது என்பதை நினைக்கும்போது வியப்பு அதிகரிக்கிறது.
ஆனால், இந்த சாதனைகளை மட்டும் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தால் அதில் பயனில்லை. மின்உற்பத்தியைப் பொருத்தவரை நம்மை எதிர்நோக்கி இருப்பது மிகப்பெரிய சவால்கள் என்பதுதான் உண்மை. நாளும் அதிகரித்துவரும் மின் தேவையை எதிர்நோக்கும் சக்தி நமது மின்வாரியத்துக்கு இருக்கிறதா என்றால் சந்தேகம்தான்.
கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தின் மின்தேவை 7.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 11.5 சதவீதம் அதிக நுகர்வு ஏற்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு மின்வாரிய இணையதளம் தெரிவிக்கிறது. கூடுதலாக 2,500 மெகாவாட் மின்உற்பத்திக்கு மின்நிலையங்களை அமைக்க பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. என்றாலும், தமிழகத்தின் வருங்காலத் தேவைகளை இவை பூர்த்தி செய்யுமா என்பது கேள்விக்குறி.
புதிய அணைகளைக் கட்டுவது, நீர்மின் நிலையங்களை அமைப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். தமிழகத்தில் உற்பத்தியாகும் நதியே கிடையாது என்பது மட்டுமல்ல, அப்படியே அந்த நதிகளில் வரும் தண்ணீர், விவசாயப் பாசனத்துக்கே போதாத நிலைமை. அணுமின் நிலையங்களை அமைப்பது என்பது வருங்காலச் சந்ததியினருக்கு ஆபத்தானது என்பதால் அதை வரவேற்பதற்கில்லை. அனல்மின் நிலையங்கள் அமைக்கலாம். ஆனால் இதற்கு மின்உற்பத்தி செலவு பலமடங்கு அதிகம். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இந்நிலையில், அதிகரித்து வரும் மின்தேவையை எதிர்கொள்ள, நமது மின்சார வாரியம் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்திருக்கிறதா, வகுத்து வருகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உடனடித் தேவைக்கான திட்டங்கள்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே நாளைய மின்தேவையை நாம் எதிர்கொள்ள முடியும் என்பது நன்றாகவே புரிகிறது. மத்திய மரபுசாரா எரிசக்தி அமைச்சகத்தின் முயற்சியால் மட்டுமே இந்த விஷயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. மின்வாரியமே முன்வந்து, சூரியஒளி மின்சக்திக்கு முன்னுரிமை அளிக்க நுகர்வோரை ஊக்குவித்தால் மட்டும்தான், எதிர்வரும் இருண்ட சூழ்நிலையை ஒளிபெறச் செய்யமுடியும்.
இன்றைய நிலையில், தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியாவிலுள்ள எல்லா மின்வாரியங்களுமே, மரபுசாரா எரிசக்திக்கு ஊக்கம் அளிப்பதால் தங்களது வருமான இழப்பு பற்றிக் கவலைப்படுகின்றனவே தவிர, தனிநபர் மின் பயன்பாட்டை மரபுசாரா எரிசக்தி மூலம் குறைத்து, மின்சாரத்தை தொழில் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்கு முழுமையாக விநியோகிக்க முன்வராதது ஏன் என்பது புரியவில்லை.
அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்; அடிக்கடி அதிகரிக்கப்படும் மின்கட்டணம் – இவை இரண்டையும் மின்வாரியம் தவிர்க்க முற்பட வேண்டும். அப்போதுதான் பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு மின்வாரியத்துக்குப் பொதுமக்களின் பாராட்டும் வாழ்த்தும் கிடைக்கும். என்ன செய்ய, “ஷாக்’ அடிக்கிறதே..?