தமிழ் டப்பிங் படங்களுக்குத் தடை: தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவு
ஹைதராபாத், நவ. 13: தமிழ் மற்றும் பிற மொழி டப்பிங் திரைப்படங்களின் வெற்றியால், பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது தெலுங்கு திரை உலகம்.
இதையடுத்து, ஆந்திரத்திலும் பிறமொழி டப்பிங் திரைப்படங்களை வெளியிட தடைவிதிக்க முடிவு செய்துள்ளது அந்தமாநிலத் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
சிறிய பட்ஜட்டில் படம் தயாரிக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்களின் நலனைப் பாதுகாக்கவே இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. டப்பிங் திரைப்படங்களின் வரவும், வெற்றியும் தெலுங்கு திரைப்படத் துறைக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
பிற மொழிப் படங்களின் டப்பிங் உரிமையை வாங்கக் கூடாது என்று தனது உறுப்பினர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த முடிவு அந்த மாநிலத்தில் திரைப்படத் துறையினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரத்தில் கடந்த 2 வருடங்களாக டப்பிங் திரைப்படங்கள், குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. மாநிலத்தில் இந்த ஆண்டு 200 திரைப்படங்கள் வெளியாயின. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு திரைப்படங்கள் டப்பிங் செய்யப்பட்டவை.
- சந்திரமுகி,
- அந்நியன்,
- கஜினி,
- மன்மதன்,
- காதல்
ஆகிய திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, ஹிட் திரைப்படங்களாக ஓடின. தமிழ் திடைப்படங்களைத் தவிர, ஆங்கில டப்பிங் படங்களையும் மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.
டப்பிங் திரைப்படங்கள் வசூலைக் குவித்து வரும் அதே நேரத்தில், ஆந்திரத்தில் தயாரான தெலுங்கு திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன. “மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி உள்பட பல முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளிவந்த வேகத்தில், பெட்டிக்குள் சுருங்கிவிட்டன.
கடந்த ஆண்டு 131 தெலுங்கு படங்கள் வெளியாகின. அவற்றில் மூன்றே மூன்று திரைப்படங்கள்தான் ஹிட் படங்களாக வெற்றி பெற்றன. ஏழெட்டு படங்களால் மட்டும்தான், செலவிட்ட பணத்தை மீட்க முடந்தது. மற்ற தெலுங்கு திரைப்படங்கள் அனைத்தும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின.
இது குறித்து தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் டி.சுரேஷ் பாபு, “பெரும் பணச்செலவில் தயாரிக்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்கள் கூட சரிவை சந்திக்க டப்பிங் படங்களின் வெற்றியே காரணம்’ என்றார்.
ஆனால் பிறமொழி டப்பிங் படங்களை தடை செய்யும் முடிவுக்கு டப்பிங் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், வசன எழுத்தாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினரும்கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது தெலுங்கு திரைப்படங்கள் மிக அதிக செலவில் தயாரிக்கப்படுகின்றன. சிறு தயாரிப்பாளர்களால் இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டு திரைப்படம் தயாரிக்க இயலவில்லை. எனவேதான் நாங்கள் குறைந்த செலவில், படங்களை டப் செய்து வெளியிடுகிறோம் என்று கூறியுள்ளார் சிறு தயாரிப்பாளர் ஒருவர்.