தேடி வந்த சிம்பு: தவிர்த்த நயன்தாரா
சென்னை, பிப். 15: ஹைதராபாத்திற்கு தன்னை பார்க்க வந்த சிம்புவை பார்க்காமல் இருக்க படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு கேரளா சென்றார் நயன்தாரா.
நடிகர் சிலம்பரசனுக்கும் நயன்தாராவுக்கும் வல்லவன் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காதல் படம் வெளியாகி நூறு நாளை தொடுவதற்குள் முறிந்து விட்டது. தற்போது தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் கவனம் செலுத்தும் நயன்தாரா ‘துளசி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்புவுடன் நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வந்தது. இது நயன்தாராவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வதந்தி பரவியது. ஆனால் வதந்தி வந்த போது அவர் படப்பிடிப்பில் இருந்தார்.
இந்நிலையில் காதலர் தினத்திற்கு முதல்நாள் சிம்பு நயன்தாராவை தேடி ஹைதராபாத் சென்றார். சிம்பு வந்திருக்கும் செய்தி அறிந்து பார்க்க மறுக்க, நயன்தாரா தங்கியிருக்கும் ஓட்டலுக்கே சென்று காத்திருந்தார் சிம்பு. ஆனால் நயன்தாராவோ படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு கேரளா பறந்து விட்டார்.
சிம்புவை தவிர்ப்பதற்கே நயன்தாரா கேரளா சென்று விட்டதாக தெலுங்கு திரையுலகத்தில் பேசப்படுகிறது. ஆனால் நயன்தாரா இது பற்றி கூறும் போது ”தமிழ் ரசிகர்களிடம் எனக்கு இருக்கும் மதிப்பை கெடுக்க ஒரு சிலர் சதி செய்கிறார்கள். என்னோட குடும்பத்தாருடன் சந்தோஷமாக இருக்கவே கேரளா வந்துள்ளேன். என்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.” என்றார்.
சிம்புவோ ”நயன்தாராவை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அமெரிக்காவிலிருந்து வந்த உடன் போயிருப்பேன். இப்போது ஹைதராபாத் சென்று பார்க்க வேன்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றார்.