Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Re-poll’ Category

DMDK grabs 5 seats – Re-polling details for the Chennai Corporation polls

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

5 இடங்களில் வெற்றிக் கனியை ருசித்த தேமுதிக

சென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில், 3 பேர் திமுகவையும், ஒருவர் பாமகவையும், மற்றொருவர் காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்தி வெற்றிக் கனியை ருசித்துள்ளனர்.

27-வது வார்டில், திமுக வேட்பாளர் ஜெய்னுல் ஆபிதீனை எதிர்த்து, தேமுதிக வேட்பாளர் பி. சர்தார் போட்டியிட்டார். 1,176 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.

இதுகுறித்து சர்தார் கூறுகையில்,””கடந்த அக்டோபரில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலிலும் போட்டியிட்டேன். அப்போது, 2,110 வாக்குகள் பெற்றேன். தற்போது, 3,098 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். இது மகிழ்ச்சியைத் தருகிறது,” என்றார் அவர். மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிகவுக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தவர் 35-வது வார்டில் போட்டியிட்ட சேகர். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நெடுமாறனை விட 129 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

“”கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பில் டேவிட் என்பவர் போட்டியிட்டார். மறுதேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் முடிவு சாதகமாக வந்துள்ளது. பணம் பார்க்க சொந்தமாக தொழில் உள்ளது. மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றுவேன்” என்றார் சேகர். இதேபோன்று, 45-வது வார்டில் பாமக வேட்பாளரை எதிர்த்து களமிறங்கிய உஷா, 2631 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

48-வது வார்டில் நீண்ட நேர இழுபறிக்குப் பின், தேமுதிக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் சங்கரை விட, 210 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

63-வது வார்டில் திமுக வேட்பாளர் மோகன், 514 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் பிரபாகரனிடம் தோல்வி அடைந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தேவகி, 59-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேகரை 1064 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மறு தேர்தல்: யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம்?

சென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சியில் காலியாக இருந்த 100 இடங்களில் 67 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிட்டன.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் கைப்பற்றிய அதே அளவிலேயே 92 இடங்களுடன் தனி பெரும்பான்மையான கட்சியாக திமுக விளங்குகிறது.

மறு தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸின் பலம் 38-லிருந்து 35 ஆகக் குறைந்துள்ளது. 17 இடங்களாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் தற்போது 16-ஆக குறைந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் நடைபெற்ற வரலாறு காணாத வன்முறைச் சம்பவங்களை அடுத்து 61, 71-வது வார்டுகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கட்சி தலைமையின் உத்தரவுப்படி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து 155 வார்டுகளிலும் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் 98 கவுன்சிலர்களும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து ஏற்கெனவே காலியாக உள்ள இடங்கள் மற்றும் இந்த 98 இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் மறு தேர்தலுக்கு மக்களிடம் அதிக ஆர்வம் காணப்படவில்லை. இதனால் 10 மண்டலங்களிலும் சேர்த்து 30 சதவீத அளவுக்கே வாக்குபதிவு நடைபெற்றது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக 58 இடங்களை ராஜிநாமா செய்த திமுக இந்த தேர்தலில் 56 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஏற்கெனவே காலியாக இருந்த 2 இடங்களை வென்றதன் மூலம் இந்த இழப்பை அக் கட்சி ஈடு செய்துள்ளது.

25 இடங்களை ராஜிநாமா செய்த காங்கிரஸ் இந்த தேர்தலில் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

13 இடங்களில் ராஜிநாமா செய்த பாட்டாளி மக்கள் கட்சி இத் தேர்தலில் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கணக்கை தொடங்கிய தேமுதிக: ஓராண்டு முன்னர் தொடங்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக, இத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை மாநகராட்சி மன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.

கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக இத் தேர்தலில் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே இருந்த மாநகராட்சி மன்றத்தில் இனி தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் குரல் முக்கிய விவாதங்களில் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.

பொதுவாக பார்த்தால் இந்த மறு தேர்தல் சிலருக்கு லாபம் என்றால் சிலருக்கு இது சிறிய அளவிலான நஷ்டங்களை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

Kalki weekly Editorial (04.03.2007)

தேர்தல் கமிஷனின் தனி அதிகாரம்!

தே.மு.தி.க. ஐந்து வார்டுகளில் வென்றது மட்டுமே எதிர்பாராதது. சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலின் இதர முடிவுகள் எவ்வித ஆச்சர்யமும் அளிக்கவில்லை.

கடந்த முறை தேர்தல் நடந்தபோது நிகழ்ந்த வன்முறை பலரை அச்சுறுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. போட்டியிடாததால்,
எப்படியிருந்தாலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பது முன்கூட்டியே தெரிந்த முடிவாகிவிட்டது. இவ்விரு காரணங்களினால் மட்டுமின்றி, சமீப காலத்து அரசியல் போக்கினால் விளைந்த சலிப்பு காரணமாகவும் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவே
நிகழ்ந்திருக்கிறது.

மறு தேர்தல் உணர்த்தும் முக்கியமான பாடம் இதுதான் :

இப்போதுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை என்பது சட்டமன்றத் தேர்தலின் மறுவடிவம் போன்றதாகவே இருக்கிறது. கட்சித் தலைமைதான் எங்கே, யார் போட்டியிடலாம் என்று நிர்ணயிக்கிறது. பணபலம், ‘ஆள்’ பலம், ஜாதி போன்றவையும் வேட்பாளரை
நிர்ணயிக்கின்றன. தாங்கள் வோட்டளிக்கப் போகும் நபர் தங்களுள் ஒருவராக – தங்கள் பிரதிநிதியாக – விளங்கி நல்லது செய்வார் என்கிற நம்பிக்கையே வாக்காளர்களுக்கு ஏற்பட வாய்ப்பின்றிப் போய்விட்டது.

கட்சி அடிப்படையில் வோட்டுப் போட வேண்டியிருக்கிறபோது, சட்டமன்றத்தில் அதிகார பலம் கொண்ட கட்சியையே உள்ளாட்சி அமைப்பிலும் தேர்ந்தெடுத்தால்தான் உள்ளாட்சி மன்றத்துக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் நிதி ஒதுக்கீடும் சிரமமின்றிக் கிடைக்கும் என்கிற அவல நிலை வேறு! ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியின் ஆதிக்கத்தில், உள்ளாட்சித் தேர்தல்களின்போது வன்முறையும் கள்ளவாக்குப் பதிவும்கூட நடைபெறுகின்றன. மறுதேர்தல்
அறிவித்தால், அந்த மறுதேர்தலிலும் சிறிய அளவிலேனும் சில வார்டுகளில் கள்ள வோட்டு, வன்முறை, கலாட்டா!

கட்சி அரசியலில் ஆதிக்கம் மட்டும் இல்லாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல்களில் இத்தனை வன்முறையும் அராஜகமும் நுழையவே
வாய்ப்பிராது என்பதுடன் சமுதாய நோக்கும் பரந்த சிந்தனையும் உள்ளவர்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்க முன்வருவார்கள்.
சுயநலமின்றியும் கட்சி சார்பின்றியும் பொதுப்பணிகள் நடக்கும். ஆனால் இன்றோ, உள்ளாட்சி தேர்தல் அரசியல் மயமானதுடன் மாநில தேர்தல் கமிஷனும் நடுநிலையும் சுதந்திரமும் இழந்து ஆளுங்கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்கு உட்பட்டுப் போயிருக்கிறது.

‘‘மாநிலத் தேர்தல் அதிகாரி தமது பொறுப்பை ஒழுங்காக
நிறைவேற்றவில்லை. சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, எதுவுமே நடவாதது போல் பாசாங்கு செய்திருக்கிறார்’’ என்று பொது நல வழக்கில் தீர்ப்பு கூறிய மூன்றாவது நீதிபதி பி.கே. மிச்ரா விளாசித் தள்ளியிருக்கிறார். இவ்வழக்கின் முதல் தீர்ப்பில் இரு நீதிபதிகள் கருத்து வேறுபட்டபோதிலும் நீதிபதி கலீ·புல்லாவும் தேர்தல்
கமிஷனின் அசிரத்தையைச் சுட்டிக் காட்டியுள்ளார். தேர்தல் கமிஷனர் சந்திரசேகர் பதவி விலக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சி குரலெழுப்பியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலையில், ராஜினாமா செய்ய மட்டும் மறுத்துவிட்டார் தேர்தல் கமிஷனர்! தனது தனி அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்று மாநில தேர்தல் கமிஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உத்தேசித்துள்ளது. இது பிரச்னையை திசை திருப்பும் முயற்சியே!

தேர்தல்கள் நியாயமாகவும் முறைப்படியும் நடக்கவேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷனுக்குத் தனி அதிகாரம் தரப்பட்டதுள்ளது உண்மைதான். அந்த உரிமை பதவிக்குத்தானே தவிர, அந்தப் பதவியை நாணயமற்ற ஒருவரோ திறமையற்ற ஒருவரோ வகிக்கிறபோது, அந்த நபருக்கும் தனி அதிகாரம் வழங்கப்பட்டதாகக் கருதவே முடியாது!

Posted in ADMK, BJP, Chennai, Congress, Corporation, DMDK, DMK, Elections, Electorate, Kalki, Madras, MDMK, Municpality, PMK, Polls, Ramadoss, Re-poll, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth, Violence, Vote, voter | 2 Comments »