மூலிகை மூலை: வேலிப்பருத்தி
விஜயராஜன்
மாற்றடுக்கில் இதய வடிவில் அமைந்த இலைகளையும், பசுமை நிறத்தில் பூங்கொத்துகளையும், மென்மையான முள்களைக் கொண்ட காய்களையும், காம்பைக் கீறினால் பிசுபிசுப்பான பால் சொட்டுகிற ஏறுகொடி இனம் வேலிப்பருத்தி. முட்டை வடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சிழைகள் காணப்படும். பொதுவாக வேலிகளில் தொற்றிப்படர்ந்து வளரும். இலை, வேர் மருத்துவக் குணமுடையவை. வாந்தியை உண்டாக்கியும், கோழையை அகற்றியும், முறைநோயைப் போக்கவும் பயன்படுகிறது. தமிழகமெங்கும் வேலிகளில் தானாகவே படர்ந்து வளர்கின்றது.
வேறு பெயர்கள் : உத்தாமணி, அச்சாணி மூலி, அனந்தம், அனந்தரம், கீரிடம், கியச்சனி, குடகாம்.
ஆங்கிலப் பெயர்: Damemia extensa, R.Bri Asclepiedaceae
மருத்துவக் குணங்கள்:
வேலிப்பருத்தி இலையைச் சாறு எடுத்து காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்குத் தடவி வர குணமாகும்.
வேலிப்பருத்தியிலை ஒரு கைப்பிடியளவு எடுத்து சிறிது மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர முடக்குவாதம், மூட்டுவலி, மூட்டுப் பிடிப்பு, உடம்பு வலி குணமாகும். பேதியானால் ஆரோரூட் மாவை அல்லது நொய்க் கஞ்சி வைத்துக் குடிக்க பேதி நிற்கும்.
வேலிப்பருத்தி இலையை வதக்கித் துணியில் தட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல்வாதம், முடக்குவாதம், வாதக்குடைச்சல், இடுப்புவலி குணமாகும்.
வேலிப்பருத்தி இலையை கைப்பிடியளவு எடுத்து அதேயளவு வாதாகி இலையை உருவிப் போட்டு ஒரு சட்டியில் போட்டு புரட்டிப் புரட்டி வதக்க வேண்டும். வதங்கிய பின்னர் ஒரு துணியில் போட்டு சூடு தாங்குகின்ற அளவில் முடக்குவாதம், மூட்டுவலி, குடைச்சல் வலி, இடுப்பு வலி உள்ள இடங்களில் கொடுக்க குணமாகும்.
வேலிப்பருத்தி இலையைச் சாறு எடுத்து 200 மில்லியளவு ஒரு தேக்கரண்டி சுக்கு, பெருங்காயத்தைப் பொடியாக்கி காய்ச்சிப் பற்றிட வாதவலி வீக்கம் குணமாகும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் 60 நாளில் குணமாகும்.
வேலிப்பருத்தி இலையை அரைத்துச் சாறு எடுத்து 1/2 சங்களவு எடுத்து 2 மிளகை பொடி செய்து சேர்த்து சிறிது தேன் கலந்து கொடுக்க 3 வயது வரை குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற செரியாமை, சுள்ளு மாந்தம், தொண்டை சுள்ளு, இழுப்பு குணமாகும்.
வேலிப்பருத்தியிலை, பொடு தலை, நுணா, நொச்சி ஆகியவற்றை கைப்பிடியளவு எடுத்து வதக்கிச் சாறு பிழிந்து 10 மில்லியளவு குடிக்க சளியோடு கூடிய மாந்தம் வெளியேறும்.
வேலிப்பருத்தியிலையின் காம்பைக் கீறி வரும் பாலை கீல் வாத மூட்டுகளுக்குத் தடவி வர குணமாகும்.
வேலிப்பருத்தி வேரை உலர்த்திப் பொடி செய்து 4 சிட்டிகையளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வாயுத் தொல்லை நீங்கி, பேதியாகி உடலிலுள்ள பூச்சிகள், கிருமிகள் வெளியேறும்.
வேலிப்பருத்தி வேரை 5 கிராம் எடுத்து பால் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து வடிகட்டி காலையில் மட்டும் 3 நாள்கள் குடித்து வர நஞ்சுக்கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயுத் தொல்லைகள் குணமாகும்.
வேலிப்பருத்தி, பாவட்டை, காவட்டம்புல், சங்கு, முருங்கை, நுணா, பொடுதலை இவற்றின் ஈர்க்கு வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்துச் சிதைத்து ஒரு லிட்டர் வகைக்கு 20 கிராம் எடுத்துப் பொடியாக்கி ஒரு துணியில் வைத்து முடிந்து குடிநீரில் போட்டு 150 மில்லியாக வற்றக் காய்ச்சி, துணியில் உள்ள மருந்தை அதே குடிநீரில் அரைத்து சுண்டைக்காயளவு 3 வேளை சாப்பிட ஆமகணம் நீங்கும்.
வேலிப்பருத்திக் கொழுந்து, வசம்பு, உள்ளி, விளா ஓடு, ஓமம், ஆமையோடு வகைக்கு 20 கிராம் எடுத்துச் சிதைத்து நெல்லிக்காயளவு எடுத்து சிறிது வெண்ணெய் சேர்த்துக் காய்ச்சிச் சாப்பிட ஆமகணம் நீங்கும்.
வேலிப்பருத்தி, சங்கு, தூதுவளை, பொன்னாங்கண்ணி இவற்றின் வேர் வகைக்கு ஒரு பிடி ஒன்றரை லிட்டர் நீரில் போட்டு பொடுதலை, வசம்பு, ஓமம், திப்பிலி, பூண்டு, மிளகு, ஆமையோடு வகைக்கு 10 கிராம் எடுத்துப் பொடியாக்கி ஒரு துணியில் முடிந்து போட்டுக் காய்ச்சி மேற்படி மருந்தை அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட காய்ச்சல் ஆமகணம் நீங்கும்.
வேலிப்பருத்திச்சாறு, எருமை வெண்ணெய் வகைக்கு 200 கிராம், கருஞ்சீரகம் 10 கிராம் பொடி செய்து கலந்து காய்ச்சி வடிகட்டி ஒரு தேக்கரண்டி
3 வேளை கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல், வாந்தி நீங்கும்.
வேலிப்பருத்தி, தூதுவளை, குப்பைமேனி வகைக்கு சமஅளவாக ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து குடித்து வர மாந்தக் கழிச்சல் நீங்கும்.
வேலிப்பருத்தி, காவட்டம்புல், கொன்றை, சிறிய முட்டிவேர், ஓமம், மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து 2 லிட்டர் நீரில் சிதைத்துப் போட்டு 200 மில்லியளவு வற்றக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியாக 6 வேளை கொடுக்க வாதக் காய்ச்சல் குணமாகும்.
வேலிப்பருத்திச் சமூலத்தை கைப்பிடியளவு எடுத்து பாலில் அரைத்து ஒரு டம்ளர் பாலுடன் 2 வேளை குடித்துவர கிரந்தி, கைகால் பிடிப்பு, வாயு நீங்கும்.