Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rbh’ Category

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to purify your Blood

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கருங்காலி!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

எனக்குத் தலையில் சிகப்பாக மருபோல் ஆங்காங்கே வளர்ந்துள்ளது. வளர்ந்து கொண்டே வருகிறது. சீப்பைத் தலையில் வைக்க முடியவில்லை. முனைப்பகுதி கூராக உள்ளது. வலியுடன் கெட்டியாக உள்ளது. மூக்கின் நுனியில் கருப்பாக முட்கள்போல் உள்ளன. இவை ஏன் வருகின்றன? மருந்து கூறவும்.

தலை மற்றும் மூக்குப் பகுதியில் அமைந்திருக்கும் தோல் பகுதியில் தங்களுக்கு ரத்தம் கெட்டுப் போய் மாமிசப் பகுதியில் உறைந்த நிலையில் இருப்பதையே இந்தக் குறிகள் தெரிவிக்கின்றன. தோலில் சஞ்சரிக்கும் ரத்தம் கெடுவதற்கு வெளிக் காரணங்களும் உட்புறக் காரணங்களும் பலவகையில் உள்ளன. பிறர் உபயோகிக்கும் சீப்பு, டவல், சோப், தலை கிளிப், தலையணை, தொப்பி, கைக்குட்டை, பவுடர் போடப் பயன்படுத்தும் பஃப், ரசாயனக் கலவை கொண்ட முகப்பூச்சுகள் போன்றவை சில வெளிப்புறக் காரணங்கள். ரத்தத்தைக் கெடவைக்கும் அதிக சினம், வருத்தம், அச்சம், பட்டினி கிடத்தல், உடல் சூட்டைக் கிளப்பும் காரம், புளி, உப்புச் சுவை கொண்ட உணவுப் பொருள்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுதல், எண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, மீன், ஆட்டிறைச்சி, தயிர், திரிந்த மோர், புளிப்பான பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவது உட்புறக் காரணங்கள். பகல் தூக்கம், நெருப்பின் அருகில் வேலை செய்தல், வெயிலில் அலைதல், வெயிலில் அலைந்து வந்தவுடன் குளிர்ந்த தண்ணீரில் உடனே குளித்தல், குடித்தல் போன்ற செய்கைகளாலும் உடலில் பித்தமும் ரத்தமும் கேடடைந்து தோலில் நீங்கள் குறிப்பிடும் உபாதைகளைத் தோற்றுவிக்கின்றன.

வந்துள்ள இந்த உபாதை நீங்குவதற்கு நீங்கள் மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்க வேண்டும். அதன் பிறகுதான் மருந்துகளைச் சாப்பிட முழுப் பலனை எதிர் பார்க்க இயலும். தோல் பகுதியின் அடியில் சீற்றமடைந்துள்ள கெட்ட ரத்தத்தை கொத்தி எடுப்பதன் மூலமாக உடனடி நிவாரணம் கிடைக்க வாய்ப்புண்டு. மருந்துகளைச் சாப்பிடுவதால் அவை குடல் பகுதியிலிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் வழியாகத் தலைப்பகுதியிலுள்ள தோல் பகுதிக்கு வந்து கெட்டுள்ள ரத்தத்தைச் சுத்தம் செய்வதற்குக் காலதாமதமாகலாம்.

நீங்கள் பெண் என்பதாலும் இது விஷயத்தில் சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாலும் இரண்டாவது வகையான மருந்து சாப்பிடுவதையே சரியென தீர்மானிக்கலாம். அந்த வகையில் ஆயுர்வேத மருந்தாகிய சோணிதாமிர்தம் எனும் கஷாயத்தை 15 மிலி எடுத்து 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீருடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. “சோணிதம்’ என்றால் ரத்தம், அதற்கு அமிருதம் போன்றதால் இந்தக் கஷாயத்தை சோணிதாமிர்தம் என்று குறிப்பிடுகிறார்கள். மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மஹாதிக்தகம் எனும் கஷாயத்தை மேற்குறிப்பிட்ட கஷாய அளவில் சாப்பிட ரத்தசுத்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் தலைக்கும் மூக்கினருகிலுள்ள கருப்பு முட்கள் போன்ற பகுதிகளில் நால்பாமராதி தைலத்தை ஊறவைத்து பச்சைப்பயிறு, வேப்பிலை, ஆரஞ்சுப்பழத்தோல் பொடியினால் கழுவ பயன்படுத்தவும். இந்தத் தைலத்தைக் காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக ஒரு மணி நேரம் ஊற விடவும்.

ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதில் கருங்காலி வைரத்திற்கு (கட்டை) நிகராக எதையும் குறிப்பிட இயலாது என்பதால் பத்து கிராம் கருங்காலியை அரை லிட்டர் தண்ணீரில் சீவிப்போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி சாதாரண தண்ணீருக்குப் பதிலாகக் குடிக்கப் பயன்படுத்தவும். மனதில் பதட்டம், படபடப்பு போன்றவை ஏற்படாத வண்ணம் அமைதியாக இருக்க பழகிக் கொள்ளவும். “தைவவியபாச்ரயம்’ எனும் தைவ வழிபாடும் மிகவும் உயர்ந்த முறையாகவே ஆயுர்வேதம் குறிப்பிடுவதால் “சண்முககவசம்’ எனும் முருகனுக்கு உகந்த பாடலை மனமுருகப் பாடி கோயிலுக்குச் சென்று கல் உப்பு கொட்டி வரவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Blood, cure, Doc, Doctor, haemoglobin, Health, Healthcare, Hindu, Hinduism, Iron, medical, Medicine, Nutrition, Plasma, Platelets, Rbh, Religion, Swaminathan, Tablet | Leave a Comment »