சின்னத்திரை சீரியல் கதையை விட மகா சோகமானது நடிகை விஜயலட்சுமியின் நிஜக் கதை.
ஃபிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகம். அதன் பிறகு ஒரு சில தமிழ்ப் படங்கள். ஆனால், எதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி பேர் கிடைக்கவில்லை.
மீண்டும் கன்னட பட உலகிற்குப் படையெடுத்தார். ஆனால், அங்கும் சினிமா வாய்ப்புகள் இவருக்குச் சரிவர கிடைக்கவில்லை. பிறகு, டி.வி. பக்கம் தாவினார். விதி அங்குதான் விளையாடிவிட்டது.
ரேடான் டி.வி. தயாரிக்கும் ‘தங்க வேட்டை’யின் கன்னட மொழி நிகழ்ச்சியின் தொகுப்பாளினி இவர்தான்.
நல்ல உயரம்… சுண்டி இழுக்கும் வடிவம்… முகத்தில் மாறா புன்னகை. கலகலப்பான பேச்சு… இத்தனை இருந்தும், அவரிடம் ஒன்று மட்டும் இல்லை. அது சினிமா உலகின் ‘நெளிவு, சுளிவு’ குணம். திரையுலகில் அட்ஜஸ்ட் என்றொரு வார்த்தை உண்டு. அ ந்த விஷயத்தில்தான் விஜயலட்சுமிக்குப் பிரச்னை. சினிமா உலகில் பிழைக்கத் தெரிந்தவர்களின் தாரக மந்திரமான இந்த விஷயத்தை, அவரால் ஏற்க முடியவில்லை. இதுதான், அவரை தற்கொலைவரை அழைத்துச் சென்றிருக்கிறது.
விஜயலட்சுமி சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பேட்டி எடுக்க முயன்றோம். ஆனால், பலத்த பாதுகாப்பு. டிரிப் கையில் ஏறிக் கொண்டிருக்க, வாடிய கொடிபோல், சுருண்டு படுத்துக் கிடந்தார் விஜயலட்சுமி. முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது.
அவரிடம் இருந்து உண்மையான பிரச்னையை எப்படி தெரிந்துகொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், நமது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தோம். ஒரு நடுத்தர வயதுக்காரர். ‘‘என்ன பிரஸ்ஸா?’’ என்றார்.
‘‘ஆம்’’ என்று தலையசைத்தோம். தன் பின்னால் தொடர்ந்து வரும்படி சைகை காட்டினார். ஆஸ்பத்திரியின் ஒதுக்குப்புறத்திற்குச் சென்றபிறகு, ‘‘நான் விஜயலட்சுமியை நன்கு தெரிந்தவன். நல்ல அருமையான பெண். சினிமாக்களில் நடிக்கும்போது நட்சத்திர ஹோட்டல்களில் தங்கினார். சினிமா வாய்ப்பு குறைந்து டி.வி. சீரியலில் தோன்ற ஆரம்பித்த பிறகு, அவருடைய ஆடம்பர வாழ்க்கை மாறி சாதாரண வீட்டில் குடியிருக்க வேண்டிய நிலை.
அப்பா, அம்மா அவருடனே இருந்தார்கள். சமீபத்தில் அவருடைய அப்பா இறந்துவிட்டார். இப்படி விஜயலட்சுமி வாழ்க்கையில் அடி மேல் அடி விழ ஆரம்பித்து விட்டது. இந்த நேரம் டி.வி. நிகழ்ச்சிதான் அவருக்கு ஒரு ஆறுதலாக இருந்தது. அப்போதுதான் ரேடான் நிறுவனத்தின் புரொடக்ஷன் மானேஜர் ரவிராதா மீது விஜயலட்சுமிக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி காதலித்தார்கள். ரவிராதா ராதிகாவுக்கு ஒருவகையில் தம்பி முறை வேண்டும்.
இவர்களுடைய காதல் ராதிகாவிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் ஒரு நாள் இவர்கள் இருவரையும் அழைத்து, ‘‘இங்க பாரும்மா… அவருக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிடுச்சி, குழந்தையும் இருக்கு… அவரை நம்பி உன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதே’ என்று அட்வைஸ் பண்ணியிருக்கிறார்.
அதிலிருந்து விஜயலட்சுமிக்கும் ரவிராதாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ரவி ராதாவை விட்டு விஜயலட்சுமி விலகிவிட்டார்.
கடந்த இரண்டு மாதமாக இவர்கள் பேசிக் கொள்ளவில்லை, என்பதைப் புரிந்து கொண்ட, இயக்குநர் ரமேஷ், விஜயலட்சுமிக்குக் காதல் தூதுவிட்டுப் பார்த்தார். நடக்கவில்லை. பின்னர் மிரட்ட ஆரம்பித்து விட்டார். அதுவும் நடக்கவில்லை.
நிகழ்ச்சியை ஷ¨ட் பண்ணும்போது விஜயலட்சுமி நன்றாகத் தொகுத்து வழங்கினாலும் ஒன் மோர் ஷாட் என்பார். இப்படி பல முறை ரீடேக் வாங்குவார். ஒரு முறை 20 தடவைக்கு மேல் ஒரே ஷாட்டை ரீ டேக் வாங்கி டார்ச்சர் பண்ணியிருக்கிறார். கேமிராமேனே நல்லா இருக்குது சார். ஓகே என்றாலும், உன் வேலையைப் பாருடா என்பார்.
அந்த டைரக்டர் வைத்ததுதான் சட்டம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கும் எண்ணற்ற பார்வையாளர்கள் மத்தியில், தான் அவமானப்பட்டதாலும், தன் குடும்ப சூழ்நிலையையும் நினைத்துதான் அந்த அப்பிராணி பெண், தற்கொலைக்கு முயன்று விட்டார். உண்மையைச் சொன்னால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கிறார், பாவம் சார்!’’ என்று கலங்கிய கண்களோடு சொன்னார் அந்த நபர்.
அவர் இப்படி சொன்னதைத் தொடர்ந்து, ராதிகாவிடம் பேச முயற்சித்தோம். முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்த டி.வி. நடிகைகளின் தற்கொலை முயற்சிகள் ஒரு மெகா சீரியல் போல தொடர்ந்து கொண்டே போகிறது. எங்கு முற்றுப்புள்ளி விழும் என்றுதான் தெரியவில்லை.
_ திருவேங்கிமலை சரவணன்