இலங்கை அரசுக்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் விலக்கிக்கொண்டது
இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணிக்கு இதுவரை தான் வழங்கிவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டிருப்பதோடு, இன்று நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் வரிசையிலும் சென்று அமர்ந்துகொண்டிருக்கிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பைசர் காசிம் ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பிற்பகல் சபை அமர்வின்போது, அரசில் இதுவரை தாம் வகித்துவந்த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் அனைத்தையும் இராஜினாமாச் செய்துவிட்டு திடீரென எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.
ஆனாலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏனைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய பிரதி அமைச்சர்கள் பாயிஸ் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர் கட்சியின் இந்த முடிவில் பங்குகொண்டிருக்கவில்லை என்பதும், கால்நடைகள் பிரதி அமைச்சர் பாயிஸ் கட்சித் தலைமையின் ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அரசினால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவரும் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதின் மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினமான வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இந்த வேளையில் இந்தக்கட்சித் தாவல் இடம்பெற்றிருப்பது அரசின் வரவு செலவுத்திட்டத்தினைத் தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வலுவூட்டியிருப்பதாகவே அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.
கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது 225 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், அதற்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன. அன்றையதினம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்கவில்லை. மேலும் இருவர் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்த போதிலும் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்
![]() |
![]() |
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் |
இலங்கை வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடக்கவிருக்கின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரது உறவினர்கள் நேற்று ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் மருமகனான தபால் ஊழியர் 28 வயதுடைய அருணாசலம் சிவபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமரின் செயலாளரான 70 வயதுடைய அன்புமணி ஆர்.நாகலிங்கம் ஆகியோர் நேற்றிரவு அவர்களது வீடுகளிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரனின் சகோதரனான 54 வயதுடைய கிராம சேவை அலுவலகர் எஸ். ஸ்ரீகாந்தசெய அவர்கள் அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் நேற்று மாலை வீதியில் வைத்தும் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி நோர்வேயிலும் பீ.அரியநேந்திரன் நெதர்லாந்திலும் தற்போது தங்கியிருக்கின்றார்கள்
நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடை பெறவிக்கும் இவ் வேளையில் இடம் பெற்றுள்ள இக் கடத்தல் சம்பவமானது தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தடுக்கும் செயல் என்று குற்றஞ்சாட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனை மீறி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆயுததாரிகளினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதே பாணியில் ஏற்கனவே கடந்த 19 ம் திகதி வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல் நாள் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரி.கனகசபையின் மருமகன் கடத்தப்பட்டு வாக்கெடுப்பு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டு, கனகசபை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததையடுத்து அன்று இரவு அவர் விடுவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
யாழ்ப்பாணத்தில் சர்வமத சமாதான மாநாடு
உள்நாட்டுப் போர் ஒன்றில் சிக்கியுள்ள இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமாதானம் தொடர்பான இரண்டுநாள் சர்வதேச சர்வமத மாநாடு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது.
கம்போடியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் சுமார் 11 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாண நூலக மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகிய இந்த மாநாட்டை தென்னாபிரிக்காவில் செயற்பட்டு வரும் காந்தி மன்றத்தின் தலைவியும், மகாத்மா காந்தியின் பேத்தியுமாகிய எலாகாந்தி அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இலங்கையின் சமாதான முயற்சிக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காசி அவர்கள் இந்த மாநாட்டில் விசேடமாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கின்றார்.
யுத்த மோதல்கள் காரணமாக இரத்தம் சிந்தும் நிலை, மக்கள் இடப்பெயர்வு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம், பீதி, அமைதியின்மை ஆகிய பல்வேறு துன்பங்களுக்கும் முடிவு காணப்பட வேண்டும் என்பதை இங்கு உரையாற்றிய இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த சர்வதேசத் தலைவர்களுடன் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த உள்ளுர் மதத் தலைவர்களும் ஒரு முகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.
இன்றைய முதல்நாள் மாநாட்டு நிகழ்வுகள் குறித்து இதில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய செய்திக்குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.