ஜார்க்கண்டில் ஒரு கேலிக்கூத்து
நீரஜா சௌத்ரி
நாட்டில் நக்சலைட்டுகளின் வன்செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் ஜார்க்கண்ட் மாநிலமும் ஒன்று. அங்கு நக்சல்கள் நடத்தும் தாக்குதல்களும் படுகொலைச் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் உள்பட 18 பேரை கடந்த வாரம் நக்சல்கள் படுகொலை செய்தனர். நக்சல்களின் ஆதிக்கத்தை முறியடிக்க ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறார் மராண்டி. அதில் முக்கியமானவர் அவரது சகோதரர்.
எனவே, அவரும் மராண்டியின் குடும்பத்தினரும்தான் நக்சல்கள் தாக்குதலின் உண்மையான இலக்காக இருந்தனர். 8000 பேர் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அதைக் கண்டுகளித்துக்கொண்டு இருந்த மக்கள் மத்தியில் ஊடுருவிய நக்சல்கள் திட்டமிட்டபடி தாக்குதலை நடத்தினர்.
அண்மையில் மாவட்ட ஆட்சியர் மீது விஷம் தோய்ந்த அம்பை எய்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள, நக்சல்கள் படுகொலைகளை நடத்திக்கொண்டு இருக்கும் ஒரு மாநிலத்தின் மீது யாரும் சிறிதும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அங்குள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டங்களை நக்சல்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அங்கு அரசு நிர்வாகம் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை; ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.
மத்திய அரசுக்கோ, ஜார்க்கண்ட் மாநிலத்தின் மீது எப்போதாவதுதான் கவனம் செல்கிறது. மக்களவைத் தேர்தலில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும்பொழுதோ, மாநிலத்தில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போய், எம்எல்ஏக்களை விலை பேசும் நிலை ஏற்படும் பொழுதோதான் மத்திய அரசின் கவனம் ஜார்க்கண்ட் மீது திரும்புகிறது.
ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கைக்குத்தான் முக்கியத்துவம். எனவே, துரதிருஷ்டவசமாக ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலங்களின் தலைவிதி அப்படி அமைந்துவிடுகிறது என்று சிலர் வாதிடக்கூடும். ஆனால், பத்திரிகைகள்கூட ஜார்க்கண்டைப் புறக்கணிக்கத்தான் செய்கின்றன.
கனிமவளம் ஏராளமாக இருக்கும் அந்த மாநிலத்தில் நடப்பவை குறித்து தொடர்ந்து அக்கறை செலுத்தாமல் இருந்தோமானால், அதன் பாதிப்பை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். ஆனால், தில்லிக்கு இன்னும் இது உறைத்ததாகத் தெரியவில்லை. ராஞ்சியில் இருக்கும் அரசுக்கோ நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் திறமையும் இல்லை; அதற்கான உறுதியும் இல்லை.
ஜார்க்கண்டின் துயரங்கள் எல்லோரும் அறிந்தவைதான். அங்கு ஒரு பணியிட மாறுதல் அல்லது பணி நியமனத்துக்கு பதவியைப் பொருத்து ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.2 கோடி வரை பகிரங்கமாகப் பேரம் பேசப்படுகிறது. மறுபுறம் மக்களின் வாழ்க்கைத்தரமோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது. சராசரியாக மாநில மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பரம ஏழைகள். ஒரு சில மாவட்டங்களில் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.
மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 8 சதவீத நிலம்தான் பாசன வசதி பெற்றுள்ளது. வாய்க்கால்களோ, பெரிய மின்னுற்பத்தி நிலையங்களோ ஏதுமில்லை. டீசல் நிலையங்கள் வேலைசெய்வதே கிடையாது. பல மாவட்டங்கள் முழுமையுமே மின் வசதி இன்றிக் கிடக்கின்றன. பிரதமரின் சாலை வசதித் திட்டத்தின்கீழ் ஜார்க்கண்டுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தாமல் கிடக்கிறது. பிகாரில் இருந்து பிரிந்து உருவான இச் சிறு மாநிலம் பெரும் வளர்ச்சி அடைய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், காலச் சக்கரம் நின்றுவிட்டதைப்போல உறைந்து கிடக்கிறது ஜார்க்கண்ட்.
நக்சல் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்களின் வருவாயில் 10 சதவீதத்தைக் கமிஷனாக வாங்கிக்கொள்கின்றனர் நக்சல்கள். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதியிலிருந்து 30 சதவீதத்தை நக்சல்கள் பறித்துச் சென்றுவிடுகின்றனர் என்று கூறுகின்றனர் உள்ளூர் மக்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜார்க்கண்டில் எந்த காண்டிராக்டரும் நக்சல்களால் தாக்கப்படுவதில்லை. ஏனென்றால் கமிஷன் தொகையை அவர்கள் ஒழுங்காகக் கொடுத்துவிடுகின்றனர். அதேபோல்தான் வனத் துறை அதிகாரிகளும்.
சட்டம் ~ ஒழுங்கும், அரசு நிர்வாகமும் இவ்வளவு சீரழிந்து கிடப்பதற்கு முக்கிய காரணம், ஜார்க்கண்டில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வினோத ஆட்சி. 8 சுயேச்சை எம்எல்ஏக்கள், 3 ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களின் தலைமையில் நடைபெற்றுவரும் வினோதமான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவருகின்றன முக்கிய கட்சிகளான காங்கிரஸýம் ராஷ்ட்ரீய ஜனதா தளமும். அரசை நிர்பந்தித்து தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளவும் செய்யலாம்; அரசு செய்யும் தவறுகளுக்கான அவப்பெயரில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்பது காங்கிரஸின் எண்ணம்.
ஆனால், இந்த ஏற்பாட்டால் கடந்த ஓராண்டில் அக் கட்சியின் ஆதரவுத் தளம் கரைந்துகொண்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.
இத்தகைய அரசு நீண்ட நாள் நீடிக்காது என்றே அரசியல் நோக்கர்கள் கருதினர். ஆனால், மக்களின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு ஓர் ஆண்டை ஓட்டிவிட்டது அந்த அரசு.
இந்த அரசு நீடிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் விரும்புவதில் ஒரு நோக்கம் இருக்கிறது. அவர் மீதான வழக்குகளில் சில, ஜார்க்கண்ட் நீதிமன்றங்களில்தான் விசாரணையில் இருக்கின்றன. எப்பொழுதும் ஏதாவது ஒரு மாநிலத்தையாவது தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது என்பது அவரது எண்ணம். அதுவும் பிகார் கைநழுவிப் போய்விட்ட நிலையில் இது மிக அவசியம் என அவர் நினைக்கிறார்.
எந்தக் கட்சியிலும் இல்லாமல் மாநிலத்தை ஆண்டுகொண்டு இருக்கும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு தொலைநோக்கும் கிடையாது; லட்சியமும் கிடையாது.
கட்சியில் இருந்தாலாவது ஒரு கட்டுப்பாடு, கடமைப் பொறுப்பு என்று ஏதாவது இருக்கும். அதுவும் அவர்களுக்குக் கிடையாது. அதிகபட்சம்போனால், தமது தொகுதியில் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்; அடுத்த தேர்தலைச் சந்திக்கத் தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கும்.
ஓர் அரசியல் கட்சி, சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது சாதாரணமாக நடப்பது. ஆனால், கையளவு சுயேச்சைகளையே மாநிலத்தின் அரசை நடத்தும்படி விட்டுவிடுவது என்பது உண்மையிலேயே அசாதாரணமானதாகும்.
வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதால் அமைக்கப்படும் அரசுகள் செயல்படுவது கிடையாது என்பதற்கும், அந்த முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்கும் ஏராளமான அனுபவங்கள் நமக்கு உள்ளன.
1991-ல், 54 எம்.பி.க்களைக் கொண்டிருந்த சந்திரசேகர், தமது கட்சியைவிட 4 மடங்கு கூடுதலாக எம்.பி.க்களைக் கொண்டிருந்த காங்கிரஸ், வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்தபோது, அது நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது குறித்து குடியரசு முன்னாள் தலைவர்கள் பலரும் மாற்றுக் கருத்து கொண்டிருந்தனர். காங்கிரஸ் கட்சி கொடுத்த நெருக்குதலை சந்திரசேகரால் சாமாளிக்க முடியாமல் போனதால், மூன்றே மாதங்களில் அந்த அரசு கவிழ்ந்தது. அதாவது நாய் வாலை ஆட்டுவதற்குப் பதில், நாயையே வால் ஆட்டுவதைப் போன்றது அது.
ராஞ்சியில் இப்போது அரசு என்று சொல்லத்தக்க நிர்வாக ஏற்பாடு ஏதும் இல்லை. அத்தகைய நிலையை ஜார்க்கண்ட் மக்கள் மீது திணிக்க காங்கிரஸýக்கோ, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கோ எந்த உரிமையும் கிடையாது. ஒன்று, அரசில் சேர்ந்து அதற்கு ஸ்திரத்தன்மையையும் தமது அனுபவத்தையும் அளிப்பதோடு, அதற்கான கடமைப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது புதிதாகத் தேர்தலை அவர்கள் சந்திக்க வேண்டும்.
ஜார்க்கண்டில் இப்போதிருக்கும் ஏற்பாடு, ஜனநாயக சமுதாயத்தின் அரசு என்ற ஆட்சிமுறையைக் கேலிக்கூத்தாக்குவதைத் தவிர வேறெதுவும் இல்லை.