ராமானுஜரும், முத்துசாமி தீட்சிதரும்
ராமானுஜர் மதப்புரட்சி செய்த மகான். சாதிப் பாகுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் சமமாகப் பார்த்த சன்னியாசி.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் தமிழ் நாடகத்தின் ஆங்கில வடிவத்தை, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணாக்கர் சிலர், பேராசிரியர் ரஜானியின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால் ராமானுஜர் வேடத்தில் நடித்தவர் அம்ருதா கரயில் என்கிற இளம்பெண். குற்றவியல்துறை மாணவி. ஓர் ஆண் கூடவா ராமானுஜர் வேடத்தை ஏற்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ராமானுஜர் வேடமேற்ற பெண் திருப்திகரமாக நடித்தார் என்பது மட்டும் நமக்குப் போதும்.
நாடக வடிவின் நூலைப் பெற்றுக்கொண்ட திருக்காட்டுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திரா பார்த்தசாரதியின் இருபது வருட நண்பராம். அவர் பேச்சு நவீன இலக்கியவாதியின் உரைபோல இருந்ததே தவிர, அரசியல்வாதியின் “நடை’யாக இருக்கவில்லை.
தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அவர் அந்தணர் அல்லாதவர் என்பதற்காக மனைவி அவரைத் திண்ணையில் அமரச் செய்து அமுது படைத்ததற்காக, ராமானுஜர் அவளுடன் தன் வாழ்க்கையையே முறித்துக்கொண்டு விடுகிற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.
தனக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பலரையும் மனம் மாறச் செய்து வெல்ல முடிந்த ராமானுஜரால், மனைவியின் மனத்தை மாற்ற முடிந்திருக்காதா? அவர் அப்படிச் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை, நூலை வெளியிட்ட “ஹிந்து’ ஆசிரியர் ரவியும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எழுப்பினர். தம் உரையில் இந்திரா பார்த்தசாரதி இதற்கு பதில் ஏதும் தரவில்லை. “நாடகத்தைப் படைத்தேன்’ அத்தோடு என் பணி முடிந்தது என்றார்.
மொழிபெயர்ப்பில், குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகானின் வரலாறு பற்றிச் சொல்லும்போது, ஆங்கிலத்தில் எத்தகைய சொற்-சங்கடங்கள் எழுகின்றன என விவரித்தார் பேராசிரியர் ஸ்ரீமான். இவர் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். (ஆனால் மொழியாக்கம் தமக்குத் திருப்தி அளித்ததாகவே இந்திரா பார்த்தசாரதி அங்கீகரித்துவிட்டார்.)
ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் இந்திய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டிருக்கும் மினி கிருஷ்ணன் உரை “மினி உரை’ என்றால், நூலுக்கு நீண்ட முன்னுரை வழங்கியிருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் சி.டி.இந்திரா, இந்த நூல் வெளிவர, தாம் தில்லி வரை சண்டை போட்டுவிட்டு வந்த சரித்திரத்தை சாங்கோபாங்கமாக “மாக்ஸி உரை’யாக நிகழ்த்தினார். (நமக்குப் பொறுமையைச் சோதித்த பேச்சுதான். ஆனால் அவருடைய ஆதங்கத்தை இந்த இடத்தில் வெளியிடாமல் வேறு எங்கே, எப்போது வெளியிடுவார், பாவம்!)
“நந்தன் கதை’ போலவே “ராமானுஜரு’ம் இந்திரா பார்த்தசாரதியின் மனித சாதியிடையே பிரிவு காணலாகாது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்பு. தமிழில் இந்த நாடகத்தை விரைவில் மேடையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கர்நாடக இசையின் சரித்திரத்தில், மூன்று கிறிஸ்துவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். இன்னொருவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மூன்றாமவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவர்தான் ஏ.எம்.சின்னசாமி முதலியார் என்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர். “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ என்ற தெலுங்கு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வர தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த அந்நாளைய அரசு ஊழியர். ஆங்கிலேய ஆட்சியில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த இந்த அபூர்வ மனிதரைப் பற்றிய காலை நேரச் சொற்பொழிவு ஒன்றில், இணையற்ற ஆங்கிலப் பேச்சாளர் வி.ஸ்ரீராம் தொகுத்து அளித்த விவரங்கள் இதுவரை யாரும் அறியாதவை.
“சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ நூல் இசை மாணாக்கர்களுக்கு தேவையான ராக லட்சணங்களையும், ஸ்வரங்களையும், கமகங்களையும் அறிமுகப்படுத்தும் நூல். இவருக்குத் துணை நின்றவர் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரின் மகன் சுப்பராம தீட்சிதர். ஒருசமயத்தில் எட்டயபுர சமஸ்தான வித்துவானாக இருந்தவர். (இவரைக் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.)
மின்சாரம் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, நவீன அச்சுக்கோக்கும் எந்திரம் கிடையாது. இத்தனை “கிடையாது’-களுக்கும் இடையே, மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, சென்னையை விட்டுப் புறநகர் போய் வசிக்கும் சூழ்நிலையிலும், சின்னசாமி முதலியார் மனம் தளர்ந்துவிடவில்லை. பென்ஷன் தொகை எல்லாம்கூட நூலுக்காகச் செலவிடுகிறார். கடன் ரூ.28000-த்தைத் தாண்டி விடுகிறது. மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிடுகிறார். ஆனால் அவர் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது நூல் வெளியாக வேண்டும் என்பதே.
கர்நாடக இசையின் பங்களிப்பில் பங்கு கொண்ட அத்தனை வாக்யேக்காரர்களின் பாடல்களையும் திரட்டி, அவற்றை ஆங்கில இலைக்கலைஞர்களும் பாடும் அல்லது வாசிக்கும் வகையில் ஸ்டாஃப் நொட்டேஷன் செய்து பரப்ப இவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வளவு, அவ்வளவு அல்ல. “”ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயண தீர்த்தர், அருணாசலக் கவி ஆகியோரின் பாடல்களைவிட, நவீன ஓரியண்டல் இசை என்று எடுத்துக் கொண்டால், தியாகராஜ சுவாமிகளின் பாடல்களுக்குத்தான் முதல் இடம்’ என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பிய வயலின் இசைக் கலைஞர்களைக் கொண்டு, நொட்டேஷன்-களின்படியே இசைக்கச் செய்து வெற்றி கண்டவர் இவர்.
முத்துசாமி தீட்சிதரின் கிருதிகளை வெளியே கொண்டு வர, சின்னசாமி முதலியார் பட்டபாடு இருக்கிறதே, அது “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ அச்சில் கொண்டு வர அவர் பட்ட பாட்டைப் போலவே உருக்கமானது.
இறுதியில் சுப்பராம தீட்சிதர் பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான மன்னரின் உதவியோடு, அங்கேயே அச்சகம் நிறுவச் செய்து, 1906-ல் சுப்பராம தீட்சிதரே அந்த நூலை வெளியிடும் சமயம், சின்னசாமி முதலியார் காலமாகிவிடுகிறார். ஆனால் அதற்காகப் பாடுபட்ட தன் நண்பரின் நினைவுக்கு அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் சுப்பராம தீட்சிதர்.
முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை, அவர் தமது பிரதம சீடர்களான தஞ்சை நால்வர்களுக்கும், தேவதாசிகளுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அதனால் ராமானுஜர் போலவே, முத்துசாமி தீட்சிதரும் சாதியுணர்வு தாண்டி நின்ற மேதை எனலாம்.
சாருகேசி