அரசியல் சார்புடன் மேலும் 3 அலைவரிசைகள்: தமிழ்நாட்டில் தீவிரமடைகிறது “தொலைக்காட்சிப் போர்’
புதுதில்லி, ஆக. 13: அரசியல் சார்புடன் புதிதாக மேலும் 3 தமிழ் அலைவரிசைகள் ஒளிபரப்பாக உள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் போர் தீவிரமடைகிறது.
தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் தொடங்கும் “கலைஞர் டிவி’, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.வி.தங்கபாலு தொடங்க உள்ள “மெகா டிவி’ மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் தொடங்க உள்ள “வசந்த் டிவி’ ஆகிய மூன்றும் விரைவில் ஒளிபரப்பைத் தொடங்க உள்ளன. இவற்றில், “மெகா டிவி’ ஆகஸ்ட் 20-ம் தேதியும், “கலைஞர் டிவி’ செப்டம்பர் 15-ம் தேதியும் ஒளிபரப்பைத் தொடங்குகின்றன. இதையடுத்து தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித்தனியே தமக்கென ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைப் பெற்றிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
எதிர்க்கட்சியான அதிமுக ஏற்கெனவே ஜெயா டிவியை நடத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் குரலாக 2006 முதல் “மக்கள் தொலைக்காட்சி’ ஒளிபரப்பாகி வருகிறது.
“இந்தப் போக்கு ஆரோக்கியமானதும் அல்ல; போட்டிச் சூழலுக்கு உகந்ததும் அல்ல. அரசியல் கட்சிகளோ அவற்றின் தலைவர்களோ தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இந்த முயற்சிகள் எதுவும் வணிக அடிப்படையில் வெற்றிபெறப் போவதில்லை.
தொலைக்காட்சி என்ற வலிமைமிக்க ஊடகத்தை, ஒரு குறிப்பிட்ட ஆள் அல்லது கட்சியின் கருத்துகளை பரப்புவதற்குத்தான் இந்த அலைவரிசைகள் பயன்படுத்தும். பார்வையாளர்கள் மத்தியில் தமது கருத்துகளைத் திணிப்பதற்கு இந்த அலைவரிசைகள் முயற்சி செய்யும்’ என பத்திரிகையாளர் சோ கருத்துத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆசியுடன் “வசந்த் டிவி’ தனது ஒளிபரப்பைத் தொடங்கும் என்று கூறியுள்ளார் வசந்தகுமார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான இவர், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் அங்காடிகளை நடத்திவருகிறார்.
“ஒரு நாளுக்கு 6 முறை செய்தி ஒளிபரப்புடன் கூடிய, 24 மணி நேர பொழுதுபோக்கு அலைவரிசையாக வசந்த் டிவி இருக்கும். எமது செய்திகளில் காங்கிரஸ் தொடர்பான குறிப்பாக சோனியா காந்தி தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி அன்றாடம் இடம்பெறும்’ என்று கூறும் வசந்தகுமார், “தனது அலைவரிசை வணிக அடிப்படையிலும் வெற்றிபெறும்’ என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
திமுக மற்றும் அதிமுகவின் பிரசார பீரங்கிகளாக செயல்பட்டு வரும் சன் டிவியும் ஜெயா டிவியும் தொலைக்காட்சி மூலம் அரசியல் யுத்தம் நடத்தியுள்ளன. குறிப்பாக தேர்தல் நேரங்களில் பெரும் அரசியல் லாவணியை இவை நடத்தும்.
கருணாநிதியின் குடும்பத்துக்கும் மாறன் (கலாநிதி, தயாநிதி) சகோதரர்களுக்கும் இடையே வெடித்த குடும்பச் சண்டையால், மற்றொரு முன்னணி அலைவரிசையான ராஜ் டிவி திமுக ஜோதியில் ஐக்கியமாகியுள்ளது. ராஜ் டிவிதான் கலைஞர் டிவிக்கு வேண்டிய அனைத்து ஒளிபரப்பு ஒத்தாசைகளையும் செய்து வருகிறது.
“மக்களை ஏமாற்ற முடியாது. உண்மைக்கும், பொய்ச் செய்திக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பகுத்துப் பார்க்கும் திறன் அவர்களுக்கு உண்டு. செய்தியின் உண்மைநிலை ஐயத்துக்கிடமானதாக மாறும்போது உடனடியாக பார்வையாளர் வேறு அலைவரிசைக்குச் சென்று, உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்வார்’ என்கிறார் சோ.
“மக்கள் தொலைக்காட்சி, அரசியல் அலைவரிசை அல்ல. பாட்டாளி மக்கள் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் மக்கள் தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதில்லை. செய்தியை அரசியலுக்காகத் திரிப்பதில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் சமமுக்கியத்துவம் அளிக்கிறோம். மற்ற பிற அலைவரிசைகள் சீரழிக்கும் தமிழ்ப் பண்பாட்டை மக்கள் தொலைக்காட்சியில் உயர்த்திப் பிடிக்கிறோம். எங்களது நிகழ்ச்சிகளை குறிப்பாக செய்திகளை ஏராளமான மக்கள் விரும்புகின்றனர்’ என்கிறார் மக்கள் தொலைக்காட்சியின் மூத்த அலுவலர் ஒருவர்.