நகராட்சிகளின் கடன் தள்ளுபடியால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினை இருக்காது: அமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, மே 8: நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நகராட்சி மன்றங்களின் கடன் தொகைகளைத் தள்ளுபடி செய்ததற்காக தமிழ்நாடு நகர் மன்றத் தலைவர்கள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் பேசியது:
நகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களின் கடனுக்கான வட்டி வீதத்தை 13.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தபோது, வட்டியை மட்டுமல்லாமல் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதன்படி அனைத்து நகராட்சி மற்றும் 5 மாநகராட்சிகளின் கடன் தொகையான ரூ.793 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.
உள்ளாட்சி அமைப்பில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடே கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிகளின் சுமை குறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சிறப்பாக செயலாற்றி அரசுக்கு நற்பெயரை நகராட்சிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது.
மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாகப் பயன்படுத்தினாலே நகராட்சிகளின் தேவைகள் இனி நிறைவேற்றப்பட்டுவிடும் என்றார் அவர். விழாவில் தமிழ்நாடு நகர்மன்றத் தலைவர்கள் பேரவைத் தலைவர் ஆர்.எஸ். பாரதி, மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் நகர் மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.