முலாயம் அரசுக்கு எதிராக வி.பி.சிங் 5 நாள் பிரசாரம்
மசூரி, டிச. 8: உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆட்சிக்கு எதிராக 5 நாள் பிரசாரத்தை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் வியாழக்கிழமை துவக்கினார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அவர் இந்தப் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளார். ஜன் மோர்ச்சா கட்சி தலைவரும், நடிகருமான ராஜ் பாப்பரும் இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஜன் மோர்ச்சாவை ஆரம்பித்து அதற்கு தலைவராகி உள்ளார் ராஜ்பாப்பர்.
5 நாள் பிரசார யாத்திரையில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
உ.பி.சட்டசபை தேர்தல்: முலாயம்சிங்கை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம்
புதுடெல்லி, டிச.6- பாராளுமன்ற வளாகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார்.
அங்கு அவர் உத்தரபிரதேச முதல்-மந்திரி முலாயம்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தேசிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கிடையே இன்று நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அமர்சிங்கை நிருபர்கள் சந்தித்து ஜெயலலிதா-முலாயம்சிங் சந்திப்பு குறித்து கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அமர்சிங் “உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பிரசாரம் செய்யவரும்படி ஜெயலலிதாவை அழைத்தோம். அவர் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டார். எனவே எங்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்” என்றார்.