அமைச்சர் முன்னிலையில் அதிகாரிகளை தாக்க முயன்ற திமுக நிர்வாகி
புதுக்கோட்டை, ஏப். 8: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், மத்திய இணை அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் அலுவலர்களைத் தாக்க முயன்றதாக திமுக மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு திட்டப் பணிகள் தொடக்க விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இவ்விழாவுக்காக அமைக்கப்பட்ட கல்வெட்டில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவரும் திமுக மாவட்ட பொருளாளருமான த. சந்திரசேகரன் பெயர் இடம்பெறவில்லையாம்.
இதனால் விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே விழா மேடையிலிருந்த ஒன்றிய ஆணையர் மாரியப்பனிடம் சந்திரசேகரன், “ஏன் எனது பெயர் இடம்பெறவில்லை’ எனத் திட்டியதோடு தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்: இந்நிலையில், விராலிமலை ஒன்றிய ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கபில்சாரட்கரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.