ரேபரேலி தொகுதியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை: லல்லுவின் திட்டத்துக்கு நிதி அமைச்சகம் தடை
இந்தியாவில் 2 இடங்களில் ரெயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலைகள் உள்ளன. ஒன்று சென்னை ஐ.சி.எப். மற்றொன்று பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் இருந்தும் ஆண்டுக்கு 2,300 பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.
3-வதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொகுதியான ரேபரேலியில் ரெயில்பெட்டி தொழிற்சாலை அமைக்க லல்லுபிரசாத் திட்டமிட்டார்.
ரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் ஆண்டுக்கு மேலும் 1,200 பெட்டிகளை தயாரிக்க முடியும் என்று ரெயில் அமைச்சகம் கருதியது. முதலில் இந்த திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி ஆகும் என்று கணக்கு காட்டப்பட்டது. தற்போது இதற்கான திட்டச் செலவு ரூ.1685 ஆகும்என்று தெரியவந்துள்ளது. இதற்கான அனுமதியை ரெயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகத்திடம் கேட்டது.
ரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை திட்டத்தை நிதி அமைச்சகம் நிராகரித்து உள்ளது. திட்டச்செலவு அதிகமாக இருப்பதாலும், தற்போது ரெயில் பெட்டி தொழிற்சாலை தேவை இல்லை என்று கருதுவதாலும் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இதேபோல லல்லுவின் தொகுதியான சாப்த்ராவில் டீசல் ரெயில் என்ஜீன் உற்பத்தி தொடர்பான திட்டத்துக்கு நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.