லண்டன் டைரி: நெருப்பின் சின்னம்!
இரா. முருகன்
நினைவுச் சின்னத் தெருவும் மீன் தெருவும் சந்திக்கிற தெருவில் இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். எதிரே நீட்டி நிமிர்ந்து நிற்கிறது 1666-ம் வருடத்து லண்டன் தீவிபத்தின் நினைவாக எழுப்பப்பட்ட கோபுரம். அறுபத்தொன்று மீட்டர் உயரம். அருகே, துல்லியமாகச் சொல்லவேண்டுமென்றால், கோபுரத்திலிருந்து அதே அறுபத்தொன்று மீட்டர் தொலைவில் தீ தொடங்கிய இடமான புட்டுச்சந்து ரொட்டிக்கடை இருந்த இடம் சிமென்ட் கோபுரத்தின் உச்சியில் நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. நிஜ நெருப்பு இல்லை. கோபுரக் கலசத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் சிற்பம்.
“”மேலே போகமுடியுமா?” வாசலில் காவலரை விசாரிக்கிறேன். “”ரெண்டு பவுண்ட் டிக்கெட் எடுத்து, முன்னூத்துப் பதினோரு படி ஏறினா, உங்க மாமா பேரு பாப்” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கிறார் அவர். அத்தனை படி ஏறி மேலே போனால் என் மாமா பெயர் ஏன் திடீர் என்று மாறவேண்டும் என்று குழப்பத்தோடு அவரைப் பார்க்கிறேன். “”Bob’s your uncle” என்ற பிரிட்டீஷ் சொலவடைக்கு, “அம்புட்டுத்தான், ரொம்ப ஈஸி’ என்ற அர்த்தம் என்று அப்புறம்தான் நினைவு வருகிறது.
மூச்சு வாங்க, அந்தக் குறுகிய படிகளில் ஏற ஆரம்பிக்கிறேன். மனம் இன்னும் பற்றி எரிந்துகொண்டிருக்கும் லண்டன் மாநகர நெருப்பிலேயே பிடிவாதமாகப் படிந்து கிடக்கிறது. நான்கு நாள் தொடர்ந்து எரிந்த பெருந்தீ அது.
பிரெஞ்சுக்காரர்கள்தான் தீவைத்ததாக வதந்தி பரவ, எதிர்ப்பட்ட பிரெஞ்சுக்காரர்களை எல்லாம் அடித்து உதைத்துச் சிறையில் வைத்தார்கள். கடியாரத் தயாரிப்பாளரான ஒரு பிரெஞ்சுக்காரரைச் சித்தரவதை செய்து அவர்தான் புட்டுச் சந்தில் தீவைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவைத்து, பகிரங்கமாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றினார்கள். அந்த அப்பாவி மனிதர் தீவிபத்து தொடங்கி இரண்டு நாள் கழித்துதான் லண்டன் நகருக்குள் நுழைந்தார் என்ற விஷயம் அப்புறம்தான் தெரியவந்தது.
தீ பிடித்த மூன்றாம்நாள் லண்டன் பங்கு சந்தை, பக்கத்து சீப்சைட் பகுதியில் பெரிய கடைகள் இருந்த அங்காடி. நாடு முழுக்க தபால் போக்குவரத்தை நடத்தும் ஊசி நூல் தெரு தபால் ஆபீஸ் என்று வரிசையாகத் தீக்கிரையாகிக் கொண்டிருந்தன. பிரம்மாண்டமான செயிண்ட் பால் தேவாலயத்திலும் தீ நுழைந்தது. வீடு இழந்து ஓடி வந்த குடிமக்கள் பலரும் எரியும் நெருப்பிலிருந்து காப்பாற்றி எடுத்து வந்த மூட்டை முடிச்சுகளோடு அங்கே தஞ்சம் புகுந்திருந்தார்கள். முக்கியமாக, தேவாலயப் பக்கத்துத் தெருக்களில் இருந்த புத்தக விற்பனையாளர்கள் ஸ்டாக்கில் இருந்த புத்தகம் முழுவதையும் மாதா கோவிலுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள். காகிதம், துணி என்று இருந்த இந்தக் குவியலில் தீ பரவி, ஒரு மணி நேரத்தில் கோவிலின் உலோகக் கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. ஜனக்கூட்டம் தேம்ஸ் நதிக்கரைக்கு ஓட, கோவில் கூரையிலிருந்து ஈயம் உருகித் தெருமுழுக்க உலோக ஆறு. தேவாலயத்துக் கருங்கல் பாளங்களும் வெடித்துச் சிதறி நாலு திசையிலும் விழ, உக்கிரமான உஷ்ணத்தோடு நெருப்பு முன்னேறிக் கொண்டிருந்தது.
இந்தக் களேபரத்துக்கு நடுவிலும் ஊசிநூல் தெரு அரசாங்க அச்சகத்தில் மும்முரமாக அச்சுக்கோர்த்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கம் வெளியிடும் வாராந்திர செய்தித்தாளான “லண்டன் கெசட்’ பத்திரிகை அந்த வாரம் அச்சுக்குப் போகவேண்டிய தினம். துரைகள் மற்றும் சீமாட்டிகளின் போக்குவரத்து, வீட்டு விசேஷங்களை ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்ல நடத்தப்பட்ட பத்திரிகை லண்டன் கெசட். எந்தத் துரை எந்தச் சீமாட்டியை எப்போது கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார். கல்யாணமான சீமாட்டிக்குக் குழந்தை பிறந்த விவரம், காலமானார் பட்டியலில் புதிதாகச் சேர்ந்த மேட்டுக்குடிப் பிரமுகர்கள் பற்றிய தகவல் என்று தலைபோகிற செய்திகளைப் போட்டு நிரப்பி, கடைசிப் பக்கத்தில் ஓரமாக “லண்டன் மாநகரத்தில் தீவிபத்து. ஊர் முழுக்க எரிந்து கொண்டிருக்கிறது’ என்று சம்பிரதாயமாக இரண்டு வரி சேர்த்து அச்சடித்து இறக்கி எடுத்துக்கொண்டு பத்திரிகையின் ஆசிரியரும் மற்ற ஊழியர்களும் வெளியே ஓடும்போது, பத்திரிகை ஆபீஸ் வாசலில் தீ பரவிக்கொண்டிருந்தது. சுடச்சுட செய்திகளைத் தருவது 1666-லேயே தொடங்கிவிட்டது என்பது நினைவில் வைக்கவேண்டிய சங்கதி…
மாநகரத் தீயணைப்புப்படை தீயணைப்பு முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி அடைய, சார்லஸ் மன்னன் ராணுவத்தை மாநகராட்சிக்கு ஒத்தாசையாக அனுப்புவதாகச் சொன்னபோது நகரப் பிரமுகர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். அரசவை இருந்த வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இருந்த வொய்ட்ஹால் பகுதிகளுக்கும் தீ பரவும் அபாயம். இனியும் தாமதித்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று அதிரடி நடவடிக்கை எடுத்தான் அரசன். ராணுவம் நகருக்குள் நுழைந்து, தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சார்லஸ் மன்னன், “வாய்யா ஜேம்ஸ்’ என்று அவன் சகோதரன் ஜேம்ûஸயும் கூட அழைத்துக்கொண்டு போய் நேரடியாக மேற்பார்வை செய்ய ஆரம்பித்தான். அவன் கட்டளைப்படி, லண்டன் டவரில் ஏகப்பட்ட வெடிமருந்தைக் கொளுத்தித் தீயைத் தீயால் அணைக்க எடுத்த நடவடிக்கை பெருவெற்றியில் முடிந்தது.
பதிமூன்றாயிரம் வீடுகள், எண்பது தேவாலயங்கள், கடைவீதிகள், அரசாங்க அலுவலகங்கள் என்று கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் லண்டன் நகரை அழித்துவிட்டுத் தீ அடங்கியபோது வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இவற்றோடு நகரை ஒட்டி இருந்த கீழ்த்தட்டு மக்களின் இருப்பிடங்கள் மட்டும் மிச்சம் இருந்தன. அடுத்த எட்டு ஆண்டுகளில் அந்த அரசன் குடிமக்களின் ஒத்துழைப்போடு நகரத்தை திரும்ப உருவாக்கினான். பழைய அமைப்பிலேயே தெருக்கள், மாதாகோவில்கள் இவற்றோடு செயிண்ட் பால் தேவாலயமும் திரும்பக் கம்பீரமாக எழுந்து நின்றது. இந்தத் தேவாலயமும் தீவிபத்தை நினைவுகூர எழுப்பிய நினைவுச் சின்னமும் கிறிஸ்டோஃபர் ரென் என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் கட்டப்பட்டவை.
நினைவுச் சின்னத்தின் கடைசிப்படி ஏறிக் கோபுர உச்சிக்குப் போய் மூச்சுமுட்ட நிற்கிறேன். கிழக்கே லண்டன் டவர், டவர் பாலம், நங்கூரம் பாய்ச்சி நிற்கும் எச்.எம்.எஸ் பெஸ்பாஸ்ட் கப்பல் எல்லாம் பொம்மை மாதிரி தெரிகின்றன. மேற்கே செயிண்ட் பால் தேவாலயம் வெயிலில் பிரகாசிக்கிறது. என் பக்கத்தில் பைனாகுலரை வைத்துச் சுற்றிலும் உன்னிப்பாகப் பார்த்தபடி இருந்த முதியவர் என்னைப் பார்த்து, “”இந்தியாவா?” என்று கேட்கிறார். பாகிஸ்தான்காரர் அவர். கணிதப் பேராசிரியர். அடுத்த வருடம் ரிடையர் ஆகிச் சொந்த ஊர் லாகூரில் செட்டில் ஆக உத்தேசமாம். “”எப்படி இருக்கு நம்ம பக்கமெல்லாம்?” என்று அந்நியோன்னியத்தோடு கேட்கிறார். சென்னைக்கு வெகு அருகில் லாகூர் இல்லை என்பதை அவருக்கு அன்போடு நினைவூட்டுகிறேன். “”யார் சொன்னது? ஒரு காலத்துலே, அதாவது 1929-ல் லாகூருக்கும் மேட்டுப்பாளையத்துக்கும் நடுவிலே ரயில் ஓடினது தெரியுமா? இப்ப உங்க சென்னைக்கும் தில்லிக்கும் இடையே ஓடுற கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்தான் அது”. பாகிஸ்தானியப் பேராசிரியர் சொல்கிறதை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு கேட்கிறேன். லாகூரில் இருந்த பிரிட்டீஷ் துரைகள் மேட்டுப்பாளையத்தில் இறங்கி ஊட்டிக்குப் போக ஏற்படுத்தியதாம் அந்த ரயில் பாதை.
சென்னையிலிருந்து லாகூருக்கு ரயிலில் போவதாகக் கற்பனை செய்துகொண்டு மெல்லப் படி இறங்குகிறேன் நான்.