விபரீத யோசனை
சிப்பாய் புரட்சி ஏற்பட்ட 150-வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுப்பிய ஒரு கருத்து, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை.
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைப் போல் இந்தியாவிலும் இரண்டு கட்சி ஆட்சி முறை ஏற்படுவது நல்லது என்பதுதான் அவர் கூறியிருக்கும் கருத்து. சாதாரணமாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துக் கூறாமல் இருக்கும் குடியரசுத் தலைவர், தனது பதவிக்காலம் முடிய இருக்கும் நேரத்தில் இப்படியொரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டிய அவசியம் தான் என்ன?
மேலைநாடுகளைப் பொருத்தவரை, நமது நாட்டில் இருப்பது போல இந்த அளவு
- சாதி,
- மத,
- மொழி,
- சமுதாய,
- பொருளாதார ரீதியிலான பிரிவினைகள் கிடையாது. அதுமட்டுமல்ல, ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே அடிப்படைக் கல்வி கற்றவர்களாக இருப்பதுடன், பொருளாதார ரீதியில் அடிப்படை வருமானம் உடையவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்தியாவைப் பொருத்தவரை, அத்தனை பிரிவினரின் குரலையும், தேவைகளையும் பிரதிபலிக்கவும், அவர்களது உணர்வுகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும், தேசியக் கட்சிகளால் இயலாமல் போனதன் விளைவுதான் இத்தனை கட்சிகளும், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும்.
ஒட்டுமொத்த தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும்போது சில பல சிறிய பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போவது சகஜம். பல சந்தர்ப்பங்களில், சில பிரிவினரின் எதிர்ப்பார்ப்புகளும் உணர்வுகளும் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் சாத்தியமும் உண்டு. அதன் விளைவுதான் பல்வேறு அரசியல் கட்சிகள். பல கட்சி ஆட்சிமுறையில், குறிப்பாக நாடாளுமன்ற ஆட்சி முறையில் இது தவிர்க்க முடியாத நிர்பந்தம்.
பிரிட்டன் போன்ற மக்கள்தொகை குறைந்த, பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், அதிபர் முறை ஆட்சி அமைப்புள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் இரு கட்சி ஆட்சிமுறை என்பது இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள, சமுதாய, மொழிவாரிப் பிரிவினைகளை உள்ளடக்கிய நாடுகளுக்குப் பொருந்தாது என்பது அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போதே ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.
இந்த இரு கட்சி ஆட்சி முறையில் இன்னோர் அபாயமும் உண்டு. சுயநல சக்திகள் விரும்பினால் இரண்டு கட்சிகளையும் விலைக்கு வாங்கி ஜனநாயகத்தையே தனது கைக்குள் போட்டுக்கொண்டுவிட முடியும். அதுவும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்கிற நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தம், இதுபோன்ற விஷம சக்திகளுக்கு இரண்டு கட்சி ஆட்சி முறையில் பூரண சுதந்திரத்தை அளித்துவிடும்.
இந்தியப் பொதுமக்கள் அதிபுத்திசாலிகள். எந்த நேரத்தில் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானித்துத் தேர்ந்தெடுப்பதில் நமது வாக்காளர்கள் கெட்டிக்காரர்கள். இரண்டு கட்சிக் கூட்டணிக்கு தேசிய அளவில் வழிகோலிய அவர்கள், இரண்டு கட்சி ஆட்சியைப் பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளவும் தயங்கவில்லை.
இரண்டு கட்சி ஆட்சி முறை அதுவாகவே உருவாக வேண்டும். உருவாக்கப்படக் கூடாது. அப்படி உருவாக்கப்பட்டால் அது இந்திய ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும், ஒரு சிலரின் கஜானாவிற்குள் அடகு வைத்துவிடும். பல்வேறு பிரிவினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்காத ஜனநாயகமாக இந்தியா மாறிவிடும். அதன் விளைவு பிரிவினைவாதத்திற்கு வழிகோலும். அதனால் வேண்டாமே இப்போது இரண்டு கட்சி ஆட்சி முறை!