சக நடிகையின் ஆபாச மிரட்டல்: நடிகை காவேரி கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம்
திருவனந்தபுரம், ஜன.7- காசி, சமுத்திரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை காவேரி. இவரை மலையாள நடிகை பிரியங்கா தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார். உன்னை பற்றி அவதூறான செய்தி பத்திரிகையில் வெளிவராமல் இருக்க எனக்கு ரூ.5 லட்சம் தரவேண்டும் என மிரட்டினார்.
இதைத் தொடர்ந்து காவேரி போலீசில் புகார் செய்யவே பிரியங்கா கையும், களவுமாக பிடிபட்டு கைதானார்.
இந்த வழக்கு கொச்சி அடிசனல் சப்-நீதிபதி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் நேற்று நடிகை காவேரி ஆஜர் ஆகி நடந்த சம்பவம் பற்றி வாக்குமூலம் கொடுத்தார்.
வாக்குமூலத்தில் காவேரி கூறியதாவது:-
என்னை பிரியங்கா போனில் தொடர்பு கொண் டார். `கிரைம்‘ மலையாள பத்திரிகையில் உனது தவறான நடவடிக்கை பற்றி செய்தி வெளியாக உள்ளது.அந்த செய்தி வெளியாகாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.5 லட்சம் தந்து விடு. நான் செய்தி வெளிவராமல் தடுத்து விடுகிறேன் என்றார்.
அதிர்ச்சி அடைந்த நான் பட அதிபர் அனில் மேனனிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தேன். அனில்மேனன் `கிரைம்’ பத்திரிகை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். பத்திரிகை அலுவலகத்தில் அப்படி ஒன்றும் நாங்கள் செய்தி வெளியிட போவது இல்லை. பிரியங்கா மிரட்டலுக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என கூறிவிட்டனர்.
இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தேன். போலீசார் கூறியபடி அறிவுரைப்படி பிரியங்காவிடம் ரூ.5 லட்சம் தர சம்மதித்தேன். பணத்துடன் ஆலப்புழையில் உள்ள ஒரு ஓட்டல் பக்கம் வருமாறு பிரியங்கா கூறினார்.
எனது தாயார் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிரியங்கா வரச் சொன்ன இடத்துக்கு சென்றார். பிரியங்கா பணம் பெற முயன்றபோது போலீசார் அவரை கைது செய்தனர்.
இவ்வாறு காவேரி வாக்குமூலத்தில் கூறிஉள்ளார்.
காவேரி மிரட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கிரைம் பத்திரிகை நடிகை பிரியங்கா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.